ஞாயிறு, 31 மார்ச், 2019

அரியலூரில் துப்பாக்கியால் சுட்ட ஹேமந்த் கல்சன் ஐபிஎஸ்.. தமிழக தேர்தல் பணிக்காக வந்தவர் .. பணிநீக்கம்

துப்பாக்கியால் சுட்ட அதிகாரி பணிநீக்கம்!மின்னம்பலம் : அரியலூரில் நள்ளிரவில் குடிபோதையில் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்ட ஐபிஎஸ் அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஹேமந்த் கல்சன் தேர்தல் பணிக்காக தமிழகம் வந்துள்ளார். ஐபிஎஸ் அதிகாரியாக ஹேமந்த் ஹரியானாவில் ஐஜியாக பணியாற்றி வருகிறார். தமிழகத்தின் தேர்தல் மேற்பார்வையாளராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது, அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள இவர் அங்குள்ள சுற்றுலா மாளிகையில் தங்கியுள்ளார். 2 நாட்களுக்கு முன்னர்தான் அரியலூர் விருந்தினர் மாளிகைக்கு வந்துள்ளார். இவருக்கு கீழ் மணிபாலன் என்ற காவலரும், கேமராமேன் ஒருவரும் பணியாற்ற நியமிக்கப்பட்டனர்.

நேற்று நள்ளிரவு ஒரு மணியளவில் தன்னுடன் பணியிலிருந்த காவலரின் துப்பாக்கியை ஹேமந்த் எடுத்துள்ளார். இதையடுத்து அந்த துப்பாக்கியால் 9 முறை வானத்தை நோக்கிச் சுட்டுள்ளார். இதனால் அக்கம்பக்கத்தினர் என்ன நடக்கிறது என்று புரியாமல் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் விஜயலட்சுமி மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அப்போது துப்பாக்கியில் 10 குண்டுகள் இருந்துள்ளது. துப்பாக்கி சுடுகிறதா என்று சரிபார்ப்பதாகக் கூறி ஹேமந்த் அதை பெற்றதாக உடனிருந்த காவலர் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஹேமந்த் மீது வழக்குப் பதிந்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஹேமந்த் குடிபோதையில் இருந்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு அரியலூர் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி தகவல் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தையடுத்து சிதம்பரம் தொகுதி மேற்பார்வையாளர் பொறுப்பிலிருந்து ஐபிஎஸ் அதிகாரி ஹேமந்த் இன்று விடுவிக்கப்பட்டார்.

கருத்துகள் இல்லை: