வெள்ளி, 5 ஏப்ரல், 2019

ஹிந்தி பெல்ட்டில் பாஜக காலி .. ரகசிய கணிப்புக்கள் அத்தனையும் பாஜகவின் வீழ்ச்சியை ,,,

மின்னம்பலம் : தேர்தல் வெற்றி வாய்ப்பு குறித்து பாஜக - ஆர்எஸ்எஸ்
நடத்திய ரகசிய ஆய்வில் காங்கிரஸ் கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்றும், மாநிலக் கட்சிகள் உதவியுடனேயே எந்தக் கட்சியும் ஆட்சியமைக்க முடியும் என்று முடிவு கிடைத்திருப்பது பாஜக - ஆர்எஸ்எஸ் வட்டாரத்தில் அதிர்ச்சி அலையை உண்டாக்கியுள்ளது.
தேர்தல் முடிவுகள் குறித்து பல்வேறு கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. ஒவ்வொரு ஆய்வும் ஒவ்வொரு விதமான முடிவைத் தந்துள்ள நிலையில், பாஜக - ஆர்எஸ்எஸ் தரப்பிலும் ரகசிய கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. அந்தக் கருத்துக் கணிப்பில் கிடைத்த முடிவுகளை நாக்பூர் டுடே ஊடகம் பிரத்தியேகமாக வெளியிட்டுள்ளது. அந்தத் தகவல்களைக் காணலாம்.

மொத்தமுள்ள 543 தொகுதிகளில் பாஜக கூட்டணிக்கு 182 இடங்கள் மட்டுமே கிடைக்கும். அதில் பாஜக 151 இடங்களில் மட்டுமே வெல்லும். ஆனால் காங்கிரஸ் கூட்டணி 216 இடங்களில் வெற்றி பெறும். காங்கிரஸ் கட்சி 141 இடங்களில் மட்டும் வெற்றி பெறும் என்று பாஜக - ஆர்எஸ்எஸ் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. 80 தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் பாஜகவும், காங்கிரஸும் தீவிரமாக பணியாற்றிவருகின்றன. குறிப்பாக அங்கு ஆளும்கட்சியாக இருக்கும் பாஜக தனது வெற்றிக்கு மிக முக்கிய மாநிலமாக உத்தரப் பிரதேசத்தைக் குறி வைத்திருக்கிறது. ஆனால், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய லோக்தளம் கூட்டணி அங்குள்ள 60 விழுக்காடு தொகுதிகளைக் கைப்பற்றும் என்பது பாஜகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் யாருக்கு வெற்றி வாய்ப்பு?
தமிழ்நாடு மற்றும் புதுவையைப் பொறுத்தவரையில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு 35 இடங்கள் கிடைக்கும் என்பது இந்த ஆய்வின் முடிவு. அதில் புதுவையுடன் சேர்த்து காங்கிரஸ் கட்சி 8 இடங்களைக் கைப்பற்றும் எனவும், அதிமுக கூட்டணிக்கு 5 இடங்கள் மட்டுமே கிடைக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இது பாஜக ஆதரவு தொலைக்காட்சியான ரிபப்ளிக் டிவியின் கருத்துக் கணிப்புடன் ஒத்துப்போவதாக உள்ளது.
மற்ற தென் மாநிலங்களைப் பொறுத்தவரையில், கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி 13 இடங்களிலும், இடதுசாரிகள் 7 இடங்களிலும் வெற்றி பெறுவார்கள். கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி 19 இடங்களிலும், பாஜக கூட்டணி 9 இடங்களிலும் வெற்றி பெறும். ஆந்திராவில் காங்கிரஸ் கூட்டணி 6 இடங்களிலும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் 19 இடங்களிலும் வெற்றி பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
மாநிலக் கட்சிகளின் பலம்
பாஜக கூட்டணியிலும், காங்கிரஸ் கூட்டணியிலும் இல்லாத பிராந்தியக் கட்சிகள் 144 தொகுதிகளைக் கைப்பற்றுவார்கள் என்பது இந்த ஆய்வின் முடிவு. குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் மாயாவதி, அகிலேஷ் யாதவின் கூட்டணி 45 இடங்களையும், மேற்கு வங்கத்தில் திருணமூல் காங்கிரஸ் 36 இடங்களையும், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி 14 இடங்களையும், ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் 16 தொகுதிகளையும் கைப்பற்றும் என்று இந்த ஆய்வு மதிப்பிட்டுள்ளது.
எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்பதும், பிராந்தியக் கட்சியின் ஆதரவுடன்தான் 17ஆவது மக்களவை அமையும் என்பதே பாஜக - ஆர்எஸ்எஸ் ரகசிய சர்வேயின் முடிவு.

கருத்துகள் இல்லை: