வியாழன், 4 ஏப்ரல், 2019

ஸ்டாலின் :நக்கீரன் பத்திரிகை மிரட்டப்படுகிறது...!

mkstalin நக்கீரன் :பொள்ளாச்சி பெண்கள் பாலியல் வன்கொடுமை விஷயத்தில் 'நக்கீரன் பத்திரிகை மிரட்டப்படுகிறது' என்று பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து குனியமுத்தூரில் வியாழக்கிழமை நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ''பொள்ளாச்சி விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்தே காவல்துறை திட்டமிட்டே மறைத்திருக்கிறது. அந்த வீடியோவை வைத்து பணம் வசூல் செய்து பின்னர் குற்றவாளிகளை காப்பாற்றியிருக்கிறது. விவகாரம் வெளியே வந்த பிறகு சிலரை தப்பிக்க வைக்கிற முயற்சியில் காவல்துறை ஈடுபடுகிறது. ஆபாச படம் எடுப்பவர்களை காப்பாற்றுகிற முயற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருப்பது மிக மிக மோசமானது. அதை காவல்துறை செய்து கொண்டிருக்கிறது. ஆகையால்தான் 20ஆம் தேதி நான் பிரச்சாரத்தை தொடங்கிய நேரத்தில் தொடர்ந்து இந்த விவகாரத்தை பேசிக்கொண்டிருக்கிறேன்.




நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை சொல்லுகிறது. கடந்த 10 நாட்களாக அவர்கள் சொல்லுவது பொய் என்பதை நிருபித்துக்கொண்டு வருகிறார்கள். கோவை மாவட்டத்தினுடைய போலீஸ் எஸ்.பி. பாண்டியராஜனை கட்டாய காத்திருப்பில் வைத்திருக்கிறார்கள். பொள்ளாச்சி எஸ்.பி. ஜெயராம் மாற்றப்பட்டிருக்கிறார்.


பொள்ளாச்சி கிழக்கு காவல்நிலைய இன்ஸ்பெக்டர் நடராஜன் மாற்றப்பட்டிருக்கிறார். காவல்துறை தவறு செய்யவில்லை என்றால் எதற்காக அவர்கள் மாற்றப்பட்டிருக்கிறார்கள். சிபிசிஐடி போலீசார் இப்போது விசாரிப்பது வெறும் கண்துடைப்புத்தான். சிபிஐ விசாரணை நடத்தப்போவதாக அறிவித்தார்கள். அறிவிப்பு அறிவிப்பாக நிற்கிறது. இப்போதும் சிபிசிஐடிதான் விசாரித்துக்கொண்டிருக்கிறது. ஒரு நாடகத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். சாட்சிகளை அழிக்கிற முயற்சி, சாட்சிகளை பயமுறுத்துகிற முயற்சி, இதுதான் நடந்து கொண்டிருப்பதாக எங்களுக்கு செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.
இந்த விவகாரத்தை சிபிசிஐடி விசாரித்து வந்தாலும், அதைத்தாண்டி நாங்கள் இதைப்பற்றி விசாரித்துக்கொண்டிருக்கிறோம். விரைவில் நாம்தான் ஆட்சிக்கு வரப்போகிறோம். இனிமேல் உண்மை குற்றவாளிகள் தப்ப முடியாது. அது யாராக இருந்தாலும், எப்படிப்பட்ட பதவியில் இருந்தாலும் கண்டுபிடித்து நாட்டுக்கு அடையாளம் காட்டி சிறையில் தள்ளுவதுதான் முதல் வேலை. அரசியலுக்காக அல்ல, பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோர்களுக்காக இந்த உறுதிமொழியை தருகிறேன்.
கடந்த 7 வருடமாக தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. பலவந்தமாக கடத்திக்கொண்டு பங்களாக்கள், பண்ணை வீடுகளில் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து அதை அவர்களுக்கு போட்டுக்காட்டி அச்சுறுத்தி பணம் பறித்து இவ்வளவு பெரிய கொடுமை நடந்திருக்கிறது. இது காவல்துறைக்கு தெரியாதா? புலனாய்வுத்துறை என்ன செய்கிறது? இதனை விசாரித்து காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல் அமைச்சரிடம் ரிப்போர்ட் கொடுக்க வேண்டும். செய்ததா? காவல்துறைக்கு தலைவர் இருக்கிறாரே டிஜிபி ராஜேந்திரன் அவருக்கு தெரியாதா? நான் அறிக்கை வெளியிட்ட பிறகுதான் இங்கிருக்கும் காவல்துறையிடம் அறிக்கை கேட்டிருக்கிறார்.
பாதிக்கப்பட்ட பெண்கள் எத்தனை பேர்? மனநிலை பாதிக்கப்பட்ட பெண்கள் எத்தனை பேர்? ஆள்கடத்தல், துன்புறுத்தல், கொலை, தற்கொலை என அனைத்து குற்றங்களும் நடந்திருக்கிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துணையாக இருப்பது நியாயமா? துணை சபாநாயகராக இருக்கக்கூடிய பொள்ளாச்சி ஜெயராமன் துணையாக இருப்பது நியாயமா? அமைச்சராக இருக்கக்கூடிய வேலுமணி இதற்கு துணையாக இருப்பது நியாயமா?
பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளம் தெரியக்கூடாது. ஏற்கனவே உச்சநீதிமன்றம் தீர்ப்பு சொல்லியிருக்கிறது. உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கக்கூடிய தீர்ப்பை பற்றிக்கூட கவலைப்படாமல் அந்த பெண்ணினுடைய பெயரையும், முகவரியையும் அரசு வெளியிடுகிறது. யாரையாவது சிக்க வைத்துவிட்டு தாங்கள் தப்பித்துக்கொள்ள வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண்ணை காட்டிக்கொடுத்திருக்கிறார்களே.
இந்த விவகாரத்தில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மகன்கள் எந்த அளவுக்கு சம்மந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதை போலீசார் வெளிச்சத்திற்கு கொண்டுவர மாட்டார்கள். இரண்டு வருடத்திற்கு முன்பு என்ன நடந்தது. பொள்ளாச்சி ஜெயராமன் மகன் காரில் சில பெண்களை கடத்திக்கொண்டு போகும்போது, அதிலிருந்து ஒரு பெண் தப்பித்து குதித்து இறந்துபோன செய்தி வந்ததா இல்லையா? எனவே எப்படி இறந்தார். என்ன காரணம். அதற்கு விடை காண வேண்டாமா?
பெண்களை வசியப்படுத்த ரெய்டு கேங் என்று இருப்பதாக ஊடகங்களில் செய்தி வந்திருக்கிறது. இதில் சம்மந்தப்பட்ட ஹரீஷ் என்பவருக்கும், பொள்ளாச்சி ஜெயராமன் மகன்களுக்கும் தொடர்பு இருந்திருக்கிறது. அந்த ஹரீஷ்க்கும் இப்போது கைது செய்யப்பட்டிருக்கக்கூடிய ரிஸ்வந்தும் ரொம்ப நாள் நண்பர்களாக இருந்திருக்கிறார்கள்.


நக்கீரன் பத்திரிகையில் இந்த விவகாரம் குறித்த செய்திகள் வெளிவர தொடங்கியது. உடனே நக்கீரன் பத்திரிகை மிரட்டப்படுகிறது. ஹரீஷ் மிரட்டுகிறார். மிரட்டுகிறபோது யார் பெயரை சொல்லி மிரட்டுகிறார் தெரியுமா? முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயரை சொல்லி மிரட்டுகிறார்.
இப்போது நக்கீரன் கோபாலை சிபிசிஐடி போலீசார்கள் சம்மன் அனுப்பி விசாரிக்கிறபோது, எப்படியெல்லாம் மிரட்டினார்கள் என்று அவரே வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்திருக்கிறார். இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி, பொள்ளாச்சி ஜெயராமன், வேலுமணி ஆகியோர் நேர்மையாக நடந்து
கொள்ள மாட்டார்கள்.
அதிகாரத்தை பயன்படுத்தி, ஆட்சியை பயன்படுத்தி குற்றவாளிகள் தப்பிக்க முயற்சித்துக்கொண்டிருக்கிறார்கள். இனி முதல் அமைச்சர் பதவியில் இருக்க எடப்பாடி பழனிசாமி நீடிக்கக்கூடாது. தொடர்ந்து நீடித்தால் அந்த நச்சு சக்திகளெல்லாம் மீண்டும் வெளியே வந்துவிடுவார்கள். இந்த பெண்களை மீண்டும் மிரட்டுவார்கள். மீண்டும் ஆபாச படம் எடுப்பார்கள். ஏன் கொலையும் செய்வார்கள். இவ்வாறு பேசினார்.

கருத்துகள் இல்லை: