nakkheeran.in - santhoshkumar :
1960
மற்றும் 1970ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் ‘சீனாவினுடைய
தலைவர் நம்முடைய தலைவர்’ என்கிற முழக்கம் கொல்கத்தாவிலுள்ள சுவர்களில்
மாவோயிஸ்டுகளால் எழுதப்பட்டிருக்கும். தீவிர இடதுசாரி சிந்தனையாளர்களால்
கொல்கத்தாவிலுள்ள சுவர்கள் முழுவதும் இரவு நேரங்களில் இந்த முழக்கங்கள்
பெங்காலி மொழியில் ஒரு காலத்தில் எழுதப்பட்டிருக்கிறது.>
ஐம்பது வருடங்கள் கடந்து தற்போது மீண்டும்
கொல்கத்தா அரசியல் நிலப்பரப்பில் சீனாவின் தொடர்பு முற்றிலும் வேறு
கோணத்தில் வெளிப்படுகிறது. “திரிணாமூல் காங்கிரஸுக்கு வாக்களியுங்கள்”
என்கிற முழக்கம் கிழக்கு கொல்கத்தாவிலுள்ள தாங்கரா என்னும் பகுதியில்
இருக்கும் சைனாடவுன் முழுவதும் உள்ள சுவர்களில் சீன மொழியில் எழுதப்பட்டு
வருகிறது.
அந்த நகரத்திலுள்ள சிறுபான்மை சீன மக்களை
கவரும் விதத்தில் முதன் முறையாக சீன மொழியில் அரசியல் பிரச்சாரம்
மேற்கொண்டு வருகிறது திரிணாமூல் காங்கிரஸ் கட்சி. சுவர்களில் சீன மொழியில்
பிரச்சாரம் செய்வதை தாண்டியும் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியிடம்
மேலும் பல பிரச்சாரங்கள் இருக்கிறது அதில் ஒன்றுதான் சீன மொழியில் துண்டு
பிரசுரம் செய்து, அதை தாங்கராவிலுள்ள சீன மக்களிடம் பரப்புவது என்று
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஃபையஸ் அகமது கான்
தெரிவித்திருக்கிறார்.
“எங்களுடைய வேட்பாளர்களுக்கு நேரம்
இருந்தால் கண்டிப்பாக சீனர்கள் வாழும் பகுதிகளில் மேடை அமைத்து எங்களின்
கருத்தை சீன மொழியில் அவர்களுக்கு மொழியாக்கம் செய்வோம். கொல்கத்தாவில்
இந்த பகுதியில் சுமார் 2000 பூர்வகுடி சீனர்கள் உள்ளனர்”என்று பையஸ்
கூறியுள்ளார்.
ராபர்ட் ஹூ என்பவர் தாங்கராவில் ஹோட்டல்
வைத்திருக்கிறார். இவரது கடையில் சீன மொழியில் திரிணாமுல் காங்கிரஸுக்கு
வாக்களியுங்கள் என்கிற முழக்கத்தை எழுதியிருக்கிறார். இது குறித்து ராபர்ட்
கூறுவது. என்னுடைய இத்தனை வருட அனுபவத்தில் எந்த கட்சியும் சீன மொழியில்
முழக்கமிட்டதில்லை. இந்த கட்சிதான் முதன் முறையாக இவ்வாறு செய்துள்ளது
என்று பெருமிதம் கொண்டார்.
இந்த தாங்கரா பகுதி தெற்கு கொல்கத்தா
தொகுதியில் வருகிறது. இங்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பாக ஐந்து முறை
நகராட்சி தலைவராக இருந்த மலாய் ராய் போட்டியிடுகிறார். இங்கிருக்கும்
பூர்வகுடி சீன மக்களுக்கு பெங்காலியும், ஹிந்தியும் ஓரளவிற்கு தெரியும்
என்றாலும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அவர்களின் தாய்
மொழியில் பிரச்சாரம் செய்வதனால் மக்களிடம் ஆழமாக செல்லலாம் என்று
சொல்கின்றனர்.
கொல்கத்தாவிற்கும் சீனாவுக்கும் எப்படி
தொடர்பு என்று பார்ப்போம். யங் அட்சிவ் என்ற சீனர் 1780ஆம் ஆண்டில்
கொல்கத்தாவில் கரும்பு உற்பத்திகளை ஊக்கவித்ததுடன் சர்க்கரை ஆலைகளையும்
தொடங்கினார். இதனால் 18ஆம் நூற்றாண்டில் பல சீன மக்கள் தொழிலுக்காக
கொல்கத்தாவிற்கு படை எடுத்தனர். பாரம்பரியமாக தோல் பதனிடும் தொழில்களை சீன
மக்கள் செய்து வந்தனர். அதனை தொடர்ந்து சலவை, பன்றி வளர்ப்பு, ஹோட்டல்கள்
என்று பல தொழில்களில் ஈடுபட்டனர். 1951ஆம் ஆண்டில் கொல்கத்தாவில்
நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 5,710 சீனர்கள் இருந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்
வெளியானது.
கடந்த 20 வருடங்களுக்கு முன்புவரை இந்த
நகரத்தில் 300க்கும் மேற்பட்ட தோல் பதனிடும் நிறுனங்கள் இருந்துள்ளன. இந்த
நிறுவனங்கலால் அதிக மாசும், துர்நாற்றத்தின் காரணமாக நகரத்தைவிட்டு வெளியே
அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த தெற்கு கொல்கத்தா தொகுதியில் கடைசி கட்ட தேர்தல் மே 19ஆம் தேதி நடைபெறுகிறது. மே 23ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக