திங்கள், 29 ஏப்ரல், 2019

மலேசியாவில் 48 தமிழர்கள் தவிப்பு!.. வீடியோ


மின்னம்பலம் : தமிழகத்தைச் சேர்ந்த 48 தொழிலாளர்கள் மலேசியாவில் தாங்கள் துன்பப்படுவதாகவும், தங்களைக் காப்பாற்றுமாறும் வாட்ஸ்அப்பில் வீடியோவொன்றை வெளியிட்டுள்ளனர்.
அதிக சம்பளத்துக்கு ஆசைப்பட்டு வெளிநாடுகளுக்குச் சென்று பணியாற்றுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சரியான நிறுவனங்கள், நபர்களிடம் பணியாற்றும்வரை, இத்தகையவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், வேலை கேட்டு வந்த தொழிலாளர்களின் வறுமையைப் பயன்படுத்தி அவர்களைத் துன்புறுத்துவதும் சில இடங்களில் நடைபெறுகிறது.
வேலைக்காக மலேசியா சென்று சம்பளம், உணவு, தங்குமிடம் இல்லாமல் தவிக்கும் 48 தமிழர்கள் பேசும் வீடியோவொன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவில் மூன்று தொழிலாளர்கள் அடுத்தடுத்து பேசுகின்றனர். தாங்கள் அனைவரும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், மூன்று மாதங்களுக்கு முன்னர் தாங்கள் மலேசியா வந்ததாகவும், முதல் மாதம் மட்டும் சம்பளம் கொடுத்துவிட்டு தங்களை ஏமாற்றியதாகவும் அந்த வீடியோவில் கூறியுள்ளனர். தங்களது நிறுவன உரிமையாளர் மலேசியாவைச் சேர்ந்த தமிழர் என்று, அவர்கள் தங்கள் பேச்சில் குறிப்பிட்டுள்ளனர்.
“இங்கு எந்த வசதியும் இல்லை. படுக்க பாய் கூட கிடையாது. சாப்பாட்டுக்கு பொருட்கள் வாங்கித் தந்து 15 நாட்களாகிறது. சம்பளம் குறித்துக் கேட்டால், ‘உங்கள் பாஸ்போர்ட் எங்களிடம் உள்ளது. தூதரகம் போனாலும் உங்களால் எதுவும் செய்ய முடியாது’ என்று அடித்து மிரட்டுகின்றனர். நாங்கள் அனைவரும் ஒரு காட்டுக்குள் மாட்டிக் கொண்டிருக்கிறோம். எங்களைக் கண்காணிக்க 4 பாதுகாவலர்களை வைத்திருக்கின்றனர். அவர்கள் பெட்ரோல் வாங்கச் சென்றதால், இந்த வீடியோவில் பேசுகிறோம். அடுத்த முறை இப்படிப் பேச முடியுமா என்று தெரியாது. ‘சம்பளமே வேண்டாம், ஊருக்கு அனுப்பிவிடுங்கள்’ என்று சொன்னாலும், அதனை ஏற்க மறுக்கின்றனர். கொன்றுவிடுவோம் என்று மிரட்டுகின்றனர்.
ஏற்கனவே 10 குழுக்கள் ஈடுபட்டு முடிக்க முடியாத வேலையை எங்களை முடிக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்துகின்றனர். மது அருந்திவிட்டு இரவில் எங்களை அடித்து துன்புறுத்துகின்றனர். நாங்கள் மாட்டிக்கொண்டதை எங்கள் வீட்டில் உள்ளவர்களிடம் கூட சொல்ல முடியவில்லை. எங்கள் உயிருக்கு எந்த உத்தரவாதமும் இல்லை” என்று அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை பார்ப்பவர்கள் தமிழக அரசைத் தொடர்புகொண்டு தங்களைக் காப்பாற்றுமாறு அந்த தொழிலாளர்கள் கூறியுள்ளனர். இது பற்றி விரைவில் விசாரணை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: