ஞாயிறு, 28 ஏப்ரல், 2019

பெப்சி - உருளைக்கிழங்கு - வழக்கு விவகாரம்.


RS Prabu : நீங்க கஷ்டப்பட்டு வாயப்பொத்தி, வயித்தபொத்தி சம்பாரிச்சு ஒரு வீடு கட்டி வாடகைக்கு விட்டுட்டு வெளியூர் போயிடறீங்க. எனக்கு வாடகைக்கு விட்ட அதை நான் உள்வாடகைக்கு விட்டு நாலு காசு பாத்தா சரியா தப்பா?
மணல் ஆற்றிலிருந்து வந்தது. செங்கல், சிமெண்ட்டுக்கான கச்சாப்பொருள் எல்லாம் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நம் முன்னோர்கள் பாதுகாத்து வைத்த காடுகளை, மலைகளைத் தோண்டி எடுத்துவரப்படுகிறது. பணம் என்பது வங்கி கடன் வழங்கியது. வங்கிக்கு அரசாங்க முதலீடும் பொதுமக்களின் முதலீடுமே மூலதனம். அதாவது வங்கி கடனாக அளிப்பது மக்களின் பணம். மின்சாரத்தை ஆற்று நீரிலிருந்தும் ஏன் காற்றிலிருந்தும் கூட இலவசமாகத்தான் இயற்கை அருள்கிறது.
அதாவது ஒரு வீடு என்பது நம் முன்னோர்கள் பாதுகாத்து வைத்த இயற்கை வளங்களாலேயே உண்டக்கப்பட்டிருக்கிறது. அப்படியிருக்க ஒரு அச்சடித்த ஸ்டாம்பு பேப்பரை வைத்திருக்கும் நபர் எப்படி இந்த நாட்டின் குடிமகனாகிய என் தார்மீக உரிமையை மறுக்கலாம்? அதாவது அந்த ஹவுஸ் ஓனர் எப்படி நான் உள்வாடகைக்கு விடுவதைத் தடுக்கலாம்?
இந்த நாட்டின் குடிமகனுக்கு ஒரு வீட்டை உள்வாடகைக்கு விட உரிமையில்லையா? ஓனருக்கு வாடகை கொடுத்த பிறகு நான் என்ன செய்தால் அவருக்கு என்ன?

ooooooo-----------------------------------ooooooo
விதைகளுக்கு, பயிர் இரகங்களுக்கு இந்தியாவில் காப்புரிமை (patent) கிடையாது. அவை நாட்டின் சொத்து. யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ஆனால் நீங்கள் உழைத்து ஒரு குறிப்பிட்ட பயிர் இரகத்தை மேம்படுத்தியிருந்தால் அதன் மீது breeder rights உண்டு. மற்றவர்கள் வர்த்தக ரீதியாக அதைப் பயன்படுத்தி வியாபாரம் செய்தால் இராயல்ட்டி கேட்கலாம்.
அதேநேரத்தில் நீங்கள் உருவாக்கிய இரகத்தை மேற்கொண்டு மேம்படுத்தியோ, பிற இரகங்களுடன் கலக்கியோ ஒரு புதிய இரகத்தை உண்டாக்கி, உங்களுடைய இரகத்திலிருந்து அது வேறானது என்று நிரூபித்துவிட்டால் அந்த இரகம் மீது நீங்கள் உரிமை கோர முடியாது.
புழக்கத்தில் இருக்கும் ஒரு இரகத்தின் பண்புக்கூறுகளை (traits) உறுதிப்படுத்த DUS characters மற்றும் Grow Out Test (GoT) உடன் இன்று DNA fingerprinting-உம் சேர்ந்துவிட்டது. வீரிய இரக விதை வியாபாரத்தில் வழக்கமாக என்ன நடக்குமென்றால் ஒரு பெரிய கம்பெனி பெருத்த R&D பொருட்செலவுடன் ஒரு இரகத்தை சந்தைக்கு கொண்டுவரும். சில லெட்டர்பேடு கம்பெனிகள் அந்த இரகத்தை அதே கம்பெனியின் பழைய இரகம் ஒன்றுடன் கிராஸ் செய்து கிடைக்கும் இரகத்தைத் திரும்ப அந்த புதிய இரகத்துடன் கிராஸ் செய்து சந்தையில் வேறு பெயரில் இறக்கி விட்டுவிடுவார்கள். இந்த மாதிரி நிறைய தந்திரோபாயங்கள் இருந்தாலும் புரிதலுக்காக இங்கே மிக எளிமையாக சொல்லப்பட்டிருக்கிறது.
இதன்மூலம் DUS, GoT, DNA fingerprinting சோதனைகள் எல்லாவற்றையும் ஏமாற்றிவிடலாம். பெரிய கம்பெனியால் இதை சட்டப்படி ஒன்றும் செய்ய முடியாது என்று அந்த லெட்டர்பேட் கம்பெனிக்குத் தெரியும். அதனால் பெரிய கம்பெனி சித்ரா என்று பெயரிட்டு விற்பனை செய்தால் இவர்கள் சுசித்ரா என்று பெயரிட்டு பொட்டலம் அடிப்பார்கள்.
சிம்லாவில் உள்ள உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிலையத்தினால் வெளியிடப்பட்ட சில இரகங்கள் சிப்ஸ் வியாபாரத்துக்கு பேருதவி புரிந்தாலும் பின் கருகல் நோய் பாதிப்பு காரணமாகவும், சந்தையிலிருந்து தங்களது கம்பெனி தயாரிப்புகளின் தரம் வேறுபட்டு நிற்க வேண்டும் என்பதாலும் பெப்சி, ஐடிசி போன்ற பல நிறுவனங்கள் in-house reaserch -இல் இறங்கி புதிய இரகங்களை உருவாக்கும் பணியில் வெற்றியும் கண்டன.
அதாவது public domain-இல் உள்ள கருமூலப்பொருளில் (germplasm) இல்லாத சில பண்புக்கூறுகளை வெளிநாட்டிலிருந்து கொண்டுவந்த parent line-களைப் பயன்படுத்தி பல்வேறு உத்திகளின் மூலமாக மேம்படுத்தி ஒரு இரகத்தை வெளியிடும்போது அதை அரசாங்கத்திடம் எல்லா நிறுவனங்களும் பதிவு செய்துகொள்ளும். அதை மற்றவர்கள் வர்த்தக ரீதியாகப் பயன்படுத்துவது குற்றமாகும். (Genetically Modified என்பது வேறு. மரபீனி மாற்றம் எனப்படும் அதை பருத்தி தவிர வேறு எந்த பயிரிலும் குழப்பிக்கொள்ள வேண்டாம்).
Protection of Plant Varieties and Farmers Rights Act இல் Breeders right என்ற ஒன்றும் உள்ளது. அதாவது பயிர் இரகங்களைப் பாதுகாத்து வைத்து அதைத் தொடர்ந்து நல்ல விதைகளை பிரித்தெடுத்து மேம்படுத்தி வருவதால் farmer-உம் ஒரு breeder ஆவார்.
உதாரணமாக கோயமுத்தூர் வரிக் கத்தரி என்ற ஒன்று உண்டு. CVK எனப்படும் ஊதா நிறத்தில் வெள்ளைக் கோடுகள் போட்ட கத்தரி கோயமுத்தூர் சுற்றுவட்டாரத்தில் இயல்பாகக் கிடைப்பது. இதில் வேறு சில இரங்களைக் கலக்கி அதே மாதிரி கத்திரியை உருவாக்கி வந்து இனிமேல் யாரும் CVK எனப்படும் கோயமுத்தூர் வரிக் கத்தரியைப் பயன்படுத்தினால் எங்கள் கம்பெனிக்கு இராயல்ட்டி தர வேண்டும் என்று கேட்க முடியாது. புதிய இரகமானது பொதுப் புழக்கத்தில் (Public domain) உள்ள இரகங்களைவிட முற்றிலும் வேறானது என்று நிரூபிக்க வேண்டும். ஒருவேளை காய்ப்புழுவுக்கு இயற்கையாகவே எதிரான ஒரு இரகத்தைக் கொண்டுவந்தால் (அதை முறையாக பதிவு செய்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் அது பொதுப் பொருளாகிவிடும்) அதற்கு மற்றவர்கள் விதைக்காகப் பயன்படுத்தும்போது இராயல்ட்டி கோரலாம்.
கரும்பில் இன்று 10% சர்க்கரை ரெக்கவரி மட்டுமே ஆலைகளுக்குக் கிடைக்கிறது. அதாவது ஒரு டன் கரும்பைப் பிழிந்து காய்ச்சினால் நூறு கிலோ சர்க்கரை கிடைக்கும். நீங்கள் அரிதான ஏதாவது ஒரு wild இரகம் ஒன்றைப் பிடித்துவந்து ஏற்கனவே இருக்கும் இரகங்களுடன் கலப்பினங்களை உண்டாக்கி 25% சர்க்கரை ரெக்கவரி வருமளவுக்குச் செய்து அதை முறையாகப் பதிவு செய்துகொண்டால் அதை யாரேனும் வர்த்தக ரீதியாகப் பயன்படுத்தும்போது இராயல்ட்டி கோரலாம்.
அதே நேரத்தில் சாதாரண கரும்பில் 10% ரெக்கவரி எடுக்கும் ஆலை ஒன்று புதிதாக சில வடிப்பான்களையோ, வேறு கருவிகளையோ நிறுவி 25% ரெக்கவரி எடுத்தால் அந்த process -ஐ பேடன்ட் செய்ய முடியும். அதாவது சர்க்கரை எடுக்கும் process-க்கு patent. சர்க்கரை என்னும் product-க்கு patent அல்ல. ஆனால் இந்தியாவில் process patent-க்கு எந்த மதிப்பும் கிடையாது. ஒன்றுக்கு இரண்டு கருவிகளை நிறுவி அந்த process patent-ஐ பைபாஸ் செய்துவிடுவார்கள். நீதிமன்றங்களுக்கு இந்த டெக்னிக்கல் விவகாரங்கள் சுத்தமாக புரியாது. புரிந்தாலும் அரசியல் அழுத்தம் அல்லது உணர்ச்சிவசப்பட்ட கூட்டம் எந்தப் பக்கம் அதிகமாக இருக்கிறதோ அந்தப் பக்கமே தீர்ப்பு வரும்.
குஜராத்தைப் பொறுத்தமட்டில் நொறுக்குத்தீனி தயாரிப்பில் பத்துக்கும் மேற்பட்ட பெரிய கம்பெனிகள் உண்டு. மூன்று மாவட்டத்துக்கு ஒரு பிராண்ட் இராஜாவாக இருக்கும். அங்கே Lays, Kurkure, etc. போன்ற பன்னாட்டு நிறுவன பிராண்டு எல்லாம் சேர்ந்து 20% சந்தையை வைத்திருந்தாலே ஆச்சரியம்.
இந்த பிரச்சினையைப் பொறுத்தமட்டில் பெப்சியின் உருளைக்கிழங்கு இரகத்தை சாகுபடி செய்த்தற்காக மட்டுமே வழக்குத் தொடரப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் குஜராத்திகள் சிப்ஸ் போட்டு விற்பனை செய்ய ஆரம்பித்துவிட்டதால்தான் "இதுவரை ஆன சேதத்துக்கும் சேர்த்து" என்று பெரிய தொகைக்கு வழக்கு போட்டிருக்கிறது பெப்சி.
வியாபாரத்தில் எந்த மனசாட்சியும் இல்லாதவர்கள் குஜராத்திகள். E-way bill உட்பட GST-யில் இத்தனை கிடுக்குப்பிடிகள் இருந்தும் வீடுகளுக்கு டைல்ஸ் வாங்கும்போது "பில் போட்டா ஜிஎஷ்டி 28% வரும் பையா" என்று சொல்லி தமிழகத்தில் எப்படி டைல்ஸ் வியாபாரம் நடக்கிறது என்று அனைவருக்கும் தெரியும்.
பி.டி. பருத்தி அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வரும் முன்னரே சட்டைப் பாக்கெட், பேண்ட் பாக்கெட், செக்-இன் லக்கேஜ், ஹேண்ட் லக்கேஜ், குழந்தைகளின் ஹேண்ட்பேக் என எல்லாவற்றிலும் ஒவ்வொரு விதையை மட்டும் மட்டும் போட்டு அமெரிக்காவிலிருந்து எடுத்து வந்து இங்கே back cross செய்து அந்த பண்புக்கூறுகளை interogress செய்து விற்பனை செய்தது, ரவுண்டப் களைக்கொல்லி எதிர்ப்புத்திறன் வாய்ந்த பருத்தி இரகம், பி.டி. கத்தரி இரகம் போன்ற அதிகாரப்பூர்வமாக விற்க அரசு அனுமதியே இல்லாதவற்றையும் விற்பனை செய்வது என நவீன fraud எல்லாமே குஜராத்தில் இருந்துதான் ஆரம்பிக்கும்.
இந்தியாவிலேயே தமிழகத்திலும், குஜராத்திலும்தான் மனைவி பெயரில் Firm-ஐப் பதிவு செய்து கணவர்கள் தொழில் நடத்துவது அதிகம். பெப்சி வழக்குத் தொடர்ந்திருக்கும் அந்த அப்பாவி விவசாயிகள் "மே பேகுன்னாரா சாப்" என்று சொல்லிக்கொண்டே இருந்தாலும் அவர்களது மனைவி, மகன், மகள் பெயரில் நடக்கும் வியாபாரத்தின் வீரியத்தை அறியாமல் ஒரு பன்னாட்டு கம்பெனி கோடை காலத்தில் நடக்கவிருக்கும் குளிர்பான விற்பனை பாதிக்கப்படலாம் என்று தெரிந்தும் இறங்குகிறது என்றால் அதன் முக்கியத்துவம் என்ன, வீரியம் என்ன என்று புரிந்துகொள்ள வேண்டும்.
பெப்சி தனது பொருட்செலவில் உண்டாக்கிய இரகத்தை ஒப்பந்தம் போட்டு வாங்கி - ஏமாற்றிவிட்டு - இன்று உள்ளூர் சிப்ஸ் கம்பெனிகளுக்கு விற்பவர்கள் நாளை அதன் சர்வதேச போட்டியாளர்களுக்கும் விற்பார்கள். அந்த கம்பெனிக்காரன் கேள்வியே கேட்கக்கூடாது. ஏனென்றால் அவர்கள் அப்பாவி விவசாயிகள். பச்சையாக அடுத்தவன் உழைப்பைத் திருடித் தின்றுவிட்டு விவசாயி என்ற போர்வையில் ஒளிந்துகொள்ளும் அயோக்கியர்களை ஆதரிப்பது ஒரு குரூர மனநிலை.
நிலம் வைத்திருப்பவன் அடுத்தவன் உழைப்பை எவ்வளவு வேண்டுமானாலும் சுரண்டிக்கொள்ளலாம். அது மேலிருந்து பணத்தாலும், ஆராய்ச்சியாலும் வரும் இன்டெலெக்சுவல் உழைப்பாக இருந்தாலும் சரி, கீழிருந்து வரும் கூலிக்கார மக்களின் ஃபிஸிகல் உழைப்பாக இருந்தாலும் சரி.
சுற்றுச்சூழல் ஆர்வலர், இயற்கைப் போராளி, விவசாய செயற்பாட்டாளர் என்றாலே பாரம்பரியமான மரபுசார் முறைகள் கேள்வி கேட்கப்படவே கூடாது என்று கிராமப் பொருளாதாரத்தின் சாதிப் படிநிலைகளைப் பாதுகாப்பவர்கள், உழைப்புச் சுரண்டலுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள்தான். எனவே ஆர்வலர்கள் பெப்சியின் நிலையை நியாயப்படுத்தினால்தான் ஆச்சரியம்.
இது நில உரிமையாளர்கள் விவசாயி என்ற போர்வையில் செய்துகொண்டிருந்த அறிவுசார் சுரண்டலின் மீது வைக்கப்பட்டிருக்கும் முதல் அடி. இஃது எமோஷனலாகப் பார்க்கப்பட்டு பெப்சிக்கு பின்னடைவே ஏற்படும் என்றாலும் புதிய தொழில்நுட்பங்களுக்கும் அதன்மேல் இந்தியாவில் செய்யப்பபடும் முதலீட்டுக்கும் என்ன மதிப்பு இருக்கும் என்பதை இந்த விவகாரம் தெளிவுபடுத்தும். மற்றபடி சும்மா கார்ப்பரேட் கம்பெனி, அப்பாவி விவசாயி லபோதிபோ என்று சில்லறைகளைச் சிந்தவிடாமல் வேடிக்கை பார்ப்பது இந்தத் தொழிலில் ஈடுபடாத பொதுமக்களின் உடம்புக்கு நல்லது. இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்.
சட்டத்தின் முன் அனைவரும் சமம். உங்கள் வீட்டை ஒருவர் உள்வாடகைக்கு விடுவது போன்ற விவகாரத்தில் என்ன நிலைப்பாடு எடுப்பீர்களோ அதேதான் பெப்சி-உருளைக்கிழங்கு விவகாரத்திலும் நியாயமாக இருக்கும்.

கருத்துகள் இல்லை: