சனி, 4 மே, 2019

அமேசன் போட்டியில் 5 இலட்சம் பெற்ற நூல் ! ..தீவிர இலக்கியத்தை மீறி வணிகரீதி எழுத்துக்கென வெற்றிடம் உள்ளது .. வெற்றி பெற்ற சென் பாலன்

Sen Balan : சற்றே நீண்ட.... நன்றி
மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அமேசான் கிண்டில் pen to publish 2018 போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. எனது "பரங்கிமலை இரயில் நிலையம்" புத்தகம் முதல் பரிசாக ரூபாய் ஐந்து இலட்சம் வென்றுள்ளது.

கல்தோன்றி மண் தோன்றா காலத்தில் இருந்து இருக்கும் தமிழ் மொழியின்
எழுத்துலகில் "முதல் பரிசு - ஐந்து இலட்சம்" எனும் மெகா அறிவிப்புடன் இதுவரை எந்த எழுத்துப் போட்டியும் வந்ததில்லை என்று தான் நினைக்கிறேன். இதுவரை நான் கண்ட, சிறுகதை / பெருங்கதை / குறுங்கதைப் போட்டிகள் எல்லாம் "முத்திரைக் கதைகள்; முதல் பரிசு பத்தாயிரம்" எனும் அளவில் தான் வந்துள்ளன. ஒரு கதைக்கு பத்தாயிரம் வந்ததே எழுத்துலகின் ஆரோக்கியமான சூழல் என்றெல்லாம் பேசப்பட்டது. ஏனெனில் இங்கு நம் கதைகளை பிரசுரிக்க நாம் தான் பணம் தரவேண்டும் என்ற நிலைமை. எனக்குத் தெரிந்து விகடன் மட்டும் தான் ஓரளவு மதிப்பாக வெளியில் சொல்லக்கூடிய அளவு சன்மானம் தருபவர்கள். ‌

எழுத்தாளர்களும் வருமானத்திற்கு புத்தக ராயல்டியை மட்டும் நம்பினால், ஒரு முழுமாத ராயல்டியை வைத்து செங்கல்பட்டு பரனூர் டோல்கேட்டில் "ஒன் வே" டிக்கெட் எடுக்கக் கூட முடியாது (விலை 45 ரூபாய்).
அதேநேரம் வாசகர் தரப்பில் நின்று யோசித்தால், பளபளப்பான அட்டையுடன் நல்ல தயாரிப்பில் அச்சிடப்பட்டு வரும் இருநூறு பக்க புத்தகம் 150 ரூபாய்க்கும் குறையாமல் வருகிறது. கொஞ்சம் புகழ்பெற்ற எழுத்தாளர், அதிக பக்கங்கள் என்றால் அதன் விலையே வேறு. பணம் கொடுத்து வாங்குவதைக் கூட செய்துவிடலாம். அதைப் படிப்பது அதைவிடக் கொடுமை. இந்த புத்தகத்திற்காகவா இத்தனை மரங்களை அழித்து காகிதம் செய்தனர் என திடீர் இயற்கை ஆர்வலராக நம்மையே நினைக்க வைப்பவை. ஒரு நடுத்தர வர்க்க வாசிப்பாளனாக ஒரு மாதம் புத்தகம் வாங்குவதற்காக ஒரு தொகை ஒதுக்கினால், அந்தத் தொகையில் வாங்கக்கூடிய புத்தகங்களை வார இறுதியின் முதல் நாள் காலை உணவிற்கு முன்னரே முடித்துவிட முடிகிறது. இதற்காகவா இந்த ஆர்ப்பாட்டம் என மறுமுறை புத்தகம் வாங்குவதையே தள்ளிப்போட வைக்கிறது.
பதிப்பகத்தின் தரப்பில் நின்று யோசித்தால் உலகத்தரமாக அச்சிட்டு, பெரிய வெளியீட்டு விழா நடத்தி, பேனர் எல்லாம் அடித்து தமிழகம் முழுவதும் கிடைக்கும் வகையில் லாஜிஸ்டிக்ஸ் செய்து தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தால் ஆயிரம் புத்தகம் விற்கிறது. பத்து புத்தகம் போட்டால் ஒன்று ஹிட் அடிக்கிறது. மீதி ஒன்பதும் மூட்டை மூட்டையாக குடோனில் பதுங்குகின்றன (ரமணிச் சந்திரன், கல்கி தவிர). நூலக ஆர்டர் எனும் ஒற்றைச் சொல்லை நம்பி தான் பதிப்பகத் துறையே இயங்குகிறது. இல்லையெனில் பழைய கால சர்கஸ் கம்பெனி, நாடகக் கம்பெனி நிலை தான். இதில் முதலீடு செய்யும் பணத்தை புறநகர்ப்பகுதியில் அபார்ட்மென்ட் வாங்கி வாடகைக்கு விட்டால் இதைவிட அதிக வருமானம் கிடைக்கும்.
இப்படி எழுத்தாளருக்கு, வாசகருக்கு, பதிப்பகத்தாருக்கு என அனைத்து பக்கமும் திருப்தி இல்லாமல், பகைமையுடன், நம்பிக்கையற்று இருந்தாலும் இத்துறை இயங்குவதற்கு காரணம் புத்தக ஆர்வம் மட்டுமே. அது மட்டுமே வருடாவருடம் புதிய எழுத்தாளர்களை உருவாக்குகிறது. புதிய வாசகர்களை இழுத்து வருகிறது. பதிப்பகங்களைத் தொடங்க வைக்கிறது.

இங்கு நல்ல எழுத்துக்களுக்கு எப்பொழுதும் தேவை இருக்கவே செய்கிறது. ஆனால் முழுமையாக நோக்கும் போது ஒரு மிகப்பெரிய சீர்திருத்தம் தேவைப்படும் துறையாக உள்ளது. அது நிகழ்ந்தால் மட்டுமே எழுத்தாளர் செலுத்தும் உழைப்பிற்கு ஈடான பலன் கிடைக்கும். வாசகன் கொடுக்கும் பணத்திற்கு மதிப்பான எழுத்தைக் கொடுக்கும்.
அந்த வகையில் அமேசான் கிண்டில் KDPஐ ஒரு புரட்சி என்று தான் சொல்லலாம்.
நம்மிடம் உள்ளீடு இருந்தால் மட்டும் போதும். ஒரு பைசா செலவில்லாமல் புத்தகத்தைப் பதிப்பிக்கலாம். காதித செலவு இல்லை. அச்சு செலவு இல்லை. லாஜிஸ்டிக்ஸ் பிரச்சனை, availability பிரச்சனை இல்லை. இதனால் எத்தனை குறைந்த விலையில் பதிப்பித்தாலும் எழுத்தாளருக்கு உரிய பங்கு வந்துவிடுகிறது.
அதேபோல வாசகர் தரப்பில் நினைத்த அடுத்த நொடியே புத்தகங்களை தரவிறக்கி படிக்க முடிகிறது. வாங்கிய புத்தகங்களை சேமித்து வைக்க தனியாக இடம் தேவையில்லை. வீடு மாறும் போது மூட்டை மூட்டையாக தூக்கிக் கொண்டு செல்லத் தேவையில்லை. அன்லிமிடெட் வாய்ப்பு மூலம் எண்ணற்ற புத்தகங்களை குறைந்த விலையில் படிக்க முடிகிறது. அச்சுப் பதிப்பை விட மிகக்குறைந்த விலையில் வாங்கிப் படிக்கமுடிகிறது‌. சில நேரங்களில் இலவசமாகக் கூடப் படிக்க முடிகிறது (சட்டப்பூர்வமாக; திருட்டுத்தனமாக அல்ல). முக்கியமாக இந்த புத்தகத்திற்கா மரங்களை அழித்தனர், எனும் எண்ணம் வராமல் தவிர்க்கிறது.
ஆனாலும் புத்தகங்களைப் பக்கம் பக்கமாக புரட்டிப் படிக்கும் உணர்வு இவற்றில் இருப்பதில்லை. புதுப் புத்தகங்களின் வாசனை கிண்டிலில் இருப்பதில்லை போன்ற காரணங்கள் கூறப்படுகின்றன. பனை ஓலைச் சுவடிகளில் இருந்து காகிதப் புத்தகங்கள் வந்த போது இதே போன்ற காரணங்களை முதுபெரும் தமிழ் வாசகர்கள் கூறினார்கள் என்று அபிப்பிராய குந்தாமணி பதிவு செய்து வைத்துள்ளது. இனி வரும் காலங்களில் வன்புத்தகங்களை (தவறான சொல்லாடல்) விட மென் புத்தகங்கள் தான் ஆதிக்கம் செலுத்தும் என்பதற்கு மூன்று வயதில் ஸ்கிப் ஆட் என்பதை அழுத்தி யூட்யூப் வீடியோ பார்க்கும் குழந்தைகளே சாட்சி. அவர்கள் தலைமுறையில் புதுப் புத்தக வாசனை, பக்கம் திருப்பும் சுகம் என்றால் ஏற இறங்கப் பார்ப்பார்கள். இந்தச் சூழ்நிலையில் கிண்டிலில் படிப்பது எனக்கு பிடிக்கவில்லை என்று கூறுபவர்களை கால ஓட்டத்தில் பின்தங்குபவர்களாகவே நாம் கருத வேண்டியுள்ளது. வேண்டுமானால் புதுப் புத்தக வாசனை வரும் ஸ்பிரேக்களை அமேசான் அறிமுகப்படுத்தலாம். கிண்டிலில் அதை அடித்துவிட்டு முகர்ந்து பார்த்துக் கொண்டே படிக்கச் சொல்லலாம்.
எழுத்துலகில் அடுத்த நிலைப் பாய்ச்சலாக கிண்டில் உருவெடுத்து வருகிறது. எழுத்தாளர், வாசகர் என அனைவருக்கும் win-win வாய்ப்பாக அமைந்துள்ளது. பதிப்பகத்துறையின் தவிர்க்கக் கூடிய செலவுகளை 99% குறைத்து ஒரேநேரத்தில் எழுத்தாளருக்கும் வாசகர்களுக்கும் நன்மை அளிக்கிறது. ஏற்கனவே தமிழ் இலக்கிய உலகின் முக்கிய பதிப்பகங்களும் எழுத்தாளர்களும் கிண்டிலில் தடம்பதித்துவிட்டனர். பா.ராகவன், விமலாதித்த மாமல்லன் போன்றோரின் கிண்டில் பங்களிப்புகள், விழிப்புணர்வு பதிவுகள் மிக முக்கியமானவை. அதேபோல கிண்டில் படிப்பான்/செயலி பயன்படுத்தும் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே உள்ளது.
இந்த வியாபார வாய்ப்பு தான் அமேசானின் ஐந்து இலட்சம் பரிசுப் போட்டி என்பதை தமிழ் எழுத்துலகில் சாத்தியமான ஒன்றாக ஆக்கியுள்ளது. இந்திய மொழிகளிலேயே இரண்டே இரண்டு மொழிகளில் தான் அமேசான் கிண்டிலின் pen to publish போட்டி நடைபெற்றது. ஒன்று இந்தி. மற்றொன்று தமிழ். இந்தியில் போட்டி நடைபெறுவது புரிந்து கொள்ளத்தக்கதே. ஆனால் இரண்டாவதாக தமிழ் வருவது நமது இத்தனை ஆண்டுகால அரசியல், வாசிப்பு பழக்கத்தின், புதுமையை ஏற்றுக் கொள்ளும் திறனின் சான்று.
அமேசான் கிண்டில் போட்டியில் அறிமுக எழுத்தாளர்கள் தான் பங்கு பெற வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் இல்லை. ஆனாலும் புதுமுக எழுத்தாளர்களைத் தவிர வேறு யாரும் பங்கெடுக்கவில்லை. ஒருவேளை வளரும் எழுத்தாளர்களுக்கு வாய்ப்பளித்து ஒதுங்கி நிற்போம் என அனைத்து சீனியர்களும் ஒரு மனதாக முடிவெடுத்துவிட்டனரோ என்னவோ. (இந்த ஒரு விசயத்திலாவது எல்லாரும் ஒரு பக்கம் நின்றார்களே)
அவரவர் எடுக்கும் முடிவு நமக்கு சாதகம் என்பது போல இது எனக்குத் தான் சாதகமாக அமைந்தது. தமிழ், ஆங்கிலம், இந்தி எனச் சேர்த்து மொத்தம் 4000 புத்தகங்களுக்கு மேல் பங்கேற்றன. தமிழின் Long form வகையில் கிட்டத்தட்ட 122 புத்தகங்கள் போட்டியில் இருந்தன. அவை பெரும்பாலும் புதுமுக / கிண்டில் எழுத்தாளர்கள் எழுதியது. எனது புத்தகம் உட்பட.
இதன் முடிவுகளில், அமேசான் கிண்டில் pen to publish 2018 போட்டியின் வெற்றிப் புத்தகமாக எனது "பரங்கி மலை இரயில் நிலையம்" புத்தகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
பல்வேறு அங்கீகாரங்களுடன் ஐந்து லட்சம் பரிசையும் வென்றுள்ளது.
இது என் வாழ்வில் முக்கிய தருணம். இதற்காக உழைத்த / ஆதரவளித்த பலருக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
புத்தகத்தைப் படித்து பொறுமையாக பிழைத்திருத்தம் செய்து, நேர்மையாக விமர்சனம் செய்து, சமூக வலைதளங்களில் பிரபலப்படுத்திய திரு ரவிசங்கர் அய்யாக்கண்ணு அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.
‎ஆங்கில நாவல்களுக்கு இணையாக மிகுந்த நேர்த்தியுடன் அட்டைப்படம் வடிவமைத்து தந்த திரு. இராஜாராமன் அவர்களுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் தகும். அவரது அட்டைப்படம் மட்டுமே இந்த புத்தகத்திற்கு "புரஃபசனல் லுக்" வர முக்கியக் காரணம்.
மேற்கு திசையில் செல்லலாம் என நான் கூறினால் கிழக்கு திசையில் சென்றாலும் உலகைச் சுற்றிக் கொண்டு மேற்கே வரலாம் என எதிர்திசையில் செல்லத்துணியும் இணையர் திருமதி. பால சரண்யா, இம்முறை அதிசயமாக வாட்ஸ்ஆப், முகநூல் என அனைத்திலும் இந்தப் புத்தகத்திற்காக மெனக்கெட்டு பிரச்சாரம் செய்தார். சிலரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு வாங்கவைத்ததும் இவரது சாதனை. இவருக்கு மிகவும் நன்றி.
எழுத முடிவெடுத்தபின் தானுண்டு தனது ஐபேட் உண்டு என தொல்லை செய்யாமல் பெரிய மனதுடன் புத்தகம் எழுதவிட்ட அன்புமகள் ஆதிரா பாலன் அவர்களுக்கும் மிகுந்த நன்றி. 60 வயதில் கிண்டில் ஆப்பில் புத்தகத்தை தேடிப்படித்த எனது பெற்றோருக்கு நன்றி.
"தேமே" என்று விற்காமல் நின்றிருந்த போது தனது ஒரே ஒரு பதிவின் மூலம் அன்றைய விற்பனையில் முதலிடத்திற்கு தள்ளிய எழுத்தாளர் டான் அசோக்கிற்கு நன்றி.
என்னை நம்பி முதல் பிரதியை கிண்டிலில் வாங்கிய திராவிட ஐகான் பழுவூரான் விக்னேஷ் ஆனந்த் அவர்களுக்கு வணக்கங்கள்.
எந்தவித ஈகோவும் பார்க்காமல், எனது வெற்றியை தன் வெற்றியாக எண்ணி மகிழ்ச்சி கொண்டு சமூகவலைதளங்களில் இந்தப் புத்தகத்தைப் பற்றி எழுதிய திரு. அப்துல்லா அண்ணன், உமா மகேஷ்வரன் பன்னீர்செல்வம், கார்த்திக் இராமசாமி, ஆர்எஸ் பிரபு, மருத்துவர் சாய் லட்சுமிகாந்த், மருத்துவர் புருனோ, பத்திரிக்கையாளர் எல்.ஆர். ஜெகதீசன் மருத்துவர் சிவக்குமார் (ரேடியல் ஆர்த்தோ), சிவசங்கரன் சரவணன், ஜோ மில்டன், அசோக் குமார் (சிங்கப்பூர்), முனைவர் சுதாகர் பிச்சைமுத்து, தமீம் தந்திரா, தனசேகர் சுப்பிரமணியம், மருத்துவர் சத்வா, சீனியர் சதிஷ்குமார், வெற்றிச் செல்வன் (டான் வெற்றியோ செல்வினி), மருத்துவர் பூவண்ணன் கணபதி சங்கரலிங்கம் பொ.செ., உதயமாறன், பெரியார் புக்ஸ் பிரபாகரன் அழகர்சாமி, பிரபாகரன் பாண்டியன், குருநாதர் வினையூக்கி செல்வா, கோபாலகிருஷ்ணன், ராஜ்குமார் (பஹ்ரைன்), பிலால் அலியார், ஜெயகணபதி.வி, தீனா ஆகியோருக்கு நன்றிகள். தனது பத்து ஃபேக் ஐடிகளில் இருந்தும் பாராட்டி எழுதிய உமா மகேஸ்வரனுக்கு சிறப்பு நன்றி. (எண்ணிக்கை குறைந்தால் மன்னிக்கவும்)
யூட்யூப் வலைதளத்தில் தனி வீடியோ பதிவேற்றி புத்தகத்தைப் பற்றி விவரித்த ஜாக்கிசேகர், அண்ணி சுதா ஸ்ரீனிவாசன் ஆகியோருக்கு நன்றி.
இந்தப் போட்டியைப் பற்றிக் கூறி கலந்து கொள்ளச் செய்த முருகேசன் சித்தூராருக்கு நன்றி.
அமேசான் தளத்தில் ஒரு ஸ்டார் நெகடிவ் ரேட்டிங் இட்டு, 97 சதவிகித மக்களிடம் இந்தப் புத்தகத்தைப் பிரபலமாக்கிய அந்த முகம் தெரியாத நண்பர்களுக்கு நன்றி. நீங்கள் மயிலாப்பூரா, மாம்பலமா, நங்கநல்லூரா எனத் தெரியவில்லை. முகவரி கொடுத்தால் பருப்பு உசிலி பார்சல் அனுப்புகிறேன்.
ஆழ்ந்த வாசிப்புடன் நெடிய விமர்சனத்தை அளித்த இராஜராஜன் ஆர்ஜே, மருத்துவர் அருணா ராஜ், கதிர் ஆர்எஸ், வாஷிங்டன் சிவக்குமார், மருத்துவர் சிவச்சந்திரன், அனு ஜெகன், சத்ய நாராயணன் ஆகியோருக்கு நன்றிகள் பல.
என்னால் அனைவரையும் நினைவு கூற முடியுமா எனத் தெரியவில்லை. ஒவ்வொருமுறை திருத்தும் போதும் விடுபட்ட பெயர்கள் வந்துகொண்டே உள்ளன. இத்தனை முறை திருத்திய பின்பும் பல பெயர்கள் நினைவுக்கு வருகின்றன. என்னைக் குற்ற உணர்ச்சி சூழ்ந்து கொள்கின்றது. ஆயினும் உடனடியாக நன்றி கூற வேண்டி இப்போது இந்தப் பதிவை பகிர்கிறேன். இதன் அர்த்தம் இவர்களுக்கு மட்டும் தான் நன்றி என்பதல்ல.
எண்ணற்ற நண்பர்கள் தாங்கள் வாங்கிப் படித்தும் பிறரைப் படிக்கச் செய்தும் முகநூலிலும் வாட்ஸ்ஆப்பிலும் ஷேர் செய்தனர். அவர்கள் அனைவருக்கும் நன்றி. ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நன்றி கூற விழைகிறேன். தனிச் செய்தியில் அனைவருக்கும் நன்றி அனுப்புகிறேன்.

‎ முக்கியமாக முகநூல் அரக்க நண்பர்கள் இந்த வெற்றிக்காக கடுமையாக உழைத்தனர். அவர்களில் பலரை நேரில் கூட நான் கண்டதில்லை. அனைவருக்கும் நன்றி.
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நண்பர்களிடம் புத்தகத்தைப் பற்றி பகிர்ந்து கொண்ட ராஜேஷ் ராஜகோபால், வினோத் வேலன், கோபினாத் கணேசன், சரண்ராஜ், ஜெய்சக்தி ராமன், இராமகிருஷ்ணன் (சிங்கப்பூர்), ஆசிரியர் கிருத்திகா கிருத்தி, சையது அபு, உமா கணேஷ், ராஜ் குமார், ரமேஷ் கோசலைராமன், முரளி இராமகிருஷ்ணன் கணபதி, பூர்ணிமா இரகுநாத், AK ஆனந்த் ராஜா, அருள் ஜெகன்(மஸ்கட்), ரொனால்டு ராய், இராஜேஷ் கண்ணன், நல்லசிவம், பிரதீப் ஜெயக்குமார், ஸ்ரீநாத் இராம், நிக்சன் ஆனந்த், பிரபு மணிகண்டன், கார்த்திக் தாமோதரன், சந்தோஷ் குமார், கார்த்திக் கண்ணன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.
இதே போட்டியில் பத்தாயிரம் வார்த்தைகளுக்கு குறைவான குறுங்கதைப் பிரிவில் வென்ற விக்னேஷ் சி செல்வராஜ் அவர்களுக்கு வாழ்த்துகள்
இத்தனை பேரா என, படிக்கிற உங்களுக்கே மலைப்பா இருக்கா? இவ்வளவு பேரும் சேர்ந்து சப்போர்ட் செய்த போது எனது மனநிலை எவ்வாறு இருந்திருக்கும்? எழுத்துலகில் ஒரு மாதத்தில் 1000 பிரதி விற்பது என்பது ஜாம்பவான்களுக்கு மட்டும் தான் சாத்தியம். இந்தப் புத்தகம் கிண்டில் வடிவில் மட்டுமே ஆயிரம் பிரதிகளுக்கு மேல் விற்றுள்ளது புதுமுக எழுத்தாளருக்கு இது மிகப் பெரிய சாதனை. இவர்கள் உதவியின்றி இதில் 10% கூட அடைந்திருக்க முடியாது.
இந்தப் போட்டியில் நான் பெற்ற பெரிய பரிசு அமேசான் தந்ததல்ல. எனக்கென்று ஆதரவு தர இத்தனை நண்பர்கள் உள்ளனர் எனும் உளவியல் பலம் தான்.
இதற்கு வெறும் வார்த்தையில் நன்றி எனக் கூறுவது ஈடாகாது. ஆயினும் ஆயிரம் முறை கூறுகிறேன். அனைவருக்கும் நன்றி.
இதுவரை தமிழில் வந்துள்ள உன்னத எழுத்துகளை நோக்கும் போது இந்தப் புத்தகம் ஒன்றும் பெரிய அப்பாடக்கர் அல்ல. ஆனால் அதை நோக்கிப் பயணம் செய்ய ஒரு ஊக்கத்தையும் நம்பிக்கையையும் அளித்துள்ளது. தமிழ் எழுத்துலகில் தீவிர இலக்கியம் பேசாமல், வணிகரீதியில் ஆன எழுத்துக்கென வெற்றிடம் உள்ளது. அதை நிரப்பும் பயணமாக எனது அடுத்தடுத்த எழுத்துகள் அமையும்.

நன்றி.

கருத்துகள் இல்லை: