வியாழன், 2 மே, 2019

தஞ்சாவூர் பாமக கந்துவட்டி கும்பலால் பாலிடெக்னிக் மாணவர் கொலை! 5 லட்சத்துக்கு 30 லட்சம் வட்டி செலுத்தியும் ... பாமக நகர செயலாளர் பாலகுரு ....

மாலைமலர் :குடும்பச் செலவு மற்றும் வியாபாரத்துக்காகவும் பா.ம.க. முன்னாள் நிர்வாகி பாலகுருவிடம் ரூ.7 லட்சம் வரை சிவசுப்பிரமணியன் கடன் வாங்கியிருந்தார். ஆனால் கடன் தொகையை திரும்பி கொடுக்க முடியாமல் வட்டியாக மட்டும் பல லட்சம் கொடுத்துள்ளார். இதற்கிடையே கடன் கொடுத்த பா.ம.க. பாலகுரு  கடன் பணத்தை கேட்டு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளார். அப்போது ‘கந்து வட்டி போட்டு அசலுக்கு மேலே எங்களிடம் பணத்தை வசூலித்து விட்டீர்கள். இனிமேல் நாங்கள் கடன் தொகையை கொடுக்க மாட்டோம்’ என்று அருண் கூறினார். இதுதொடர்பாக பா.ம.க. பாலகுருவுக்கும்  அருணுக்கும் இடையே காரசாரமாக வாக்குவாதம் நடந்து வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு மளிகை கடையில் தனது தந்தை சிவசுப்பிரமணியனுடன், அருண் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் அடையாளம் தெரியாத 2 பேர் மளிகை கடைக்குள் புகுந்தனர்.அவர்கள் திடீரென அங்கு நின்ற அருணை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் நிலைகுலைந்து போன அருண், ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார்.

மின்னம்பலம் : கும்பகோணத்தில் கந்துவட்டி கும்பலால் பாலிடெக்னிக் மாணவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டது அவ்வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள பானாதுறையைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன். இவர் அப்பகுதியில் மளிகைக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு இரண்டு மகள்களும், அருண் என்ற மகனும் உள்ளனர். அருண் பாலிடெக்னிக் ஒன்றில் படித்து வந்தார்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு பிரமுகரிடம் 3 லட்சம் ரூபாய் வட்டிக்குக் கடன் வாங்கினார் சிவசுப்பிரமணியன். கிட்டத்தட்ட 30 லட்சம் ரூபாய் வரை, அவர் திரும்பச் செலுத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அசல் தொகை 3 லட்சத்தைத் தர வேண்டுமென்று கூறி சிவசுப்பிரமணியன் வீட்டில் தகராறு செய்தனர் கந்துவட்டிக் கும்பலைச் சேர்ந்த பாலகுரு, செந்தில் ஆகியோர். சிவசுப்பிரமணியன் மகள்களிடம் தரக்குறைவாகப் பேசியுள்ளனர். இதனால் மனமுடைந்த சிவசுப்பிரமணியம் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அவரைக் காப்பாற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் குடும்பத்தினர். இந்த நிலையில், மருத்துவமனையிலும் பணம் கேட்டு பிரச்சினை செய்துள்ளனர் அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள். சிவசுப்பிரமணியத்தின் மகன் அருண் இதனைத் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.
நேற்று (மே 1) இரவு மளிகைக் கடையில் அருண் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த இரண்டு பேர் அவரைச் சராமரியாக வெட்டினர். இதில் அவர் பலியானார்.
இரவு நேரம் என்பதால், அப்பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லை. மீறி அவ்வழியாக வந்த ஒரு சிலரும் கொலைச் சம்பவத்தைக் கண்டு பயந்து ஓடினர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் போலீசார். கொலை தொடர்பான சிசிடிவி காட்சி சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை: