வெள்ளி, 3 மே, 2019

300 பேரில் ஒருவர் கூட தமிழரில்லை .. வெடித்தது போராட்டம் திருச்சி ரயில்வே பணிமனையில்..

தமிழர்களுக்கு வேலை கோரி திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை முற்றுகைvikatan.com - tamilnadu :திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில், பணி நியமனம் செய்யப்பட்ட 300 பேரில் ஒருவர்கூடத் தமிழர் இல்லை" என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனையடுத்து, திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையை முற்றுகையிட முயன்ற தமிழ்த் தேசிய பேரியக்கம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டதால் திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் சமீபகாலமாகத் தமிழர்களுக்கு வேலைவாய்ப்புகள் மறுக்கப்படுவதுடன், வட மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் அதிக அளவில் சேர்க்கப்படுவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்துவருகின்றன. இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு, தென்னக ரயில்வே துறையில் சுமார் 300 பேர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவர்கூடத் தமிழர்கள் இல்லை என்று குற்றம்சாட்டிவரும் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் தலைமையில், தமிழக விவசாயிகள் சங்கம் மாவட்டத் தலைவர் மா.பொ. சின்னதுரை, சமூக நீதிப் பேரவை மாவட்டச் செயலாளர் ரவிக்குமார் மற்றும் விவசாயச் சங்கங்கள் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட இயக்கங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர், “வெளியாரை வெளியேற்று” , “இந்திய அரசே... தமிழர்களுக்கு எதிராக இனப்பாகுபாடு காட்டாதே”,  “தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கே 90 சதவிகிதம் வேலைகொடு” என்பது உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன்,   திருச்சி பொன்மலை பேருந்து நிலையத்திலிருந்து பேரணியாக முழக்கமிட்டு வந்தவர்கள்,  பொன்மலை ரயில்வே பணிமனையை முற்றுகையிட முயன்றனர்.

முன்பாக, இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், திருச்சி மாநகர போலீஸார் மற்றும் ரயில்வே பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பொன்மலை ரயில்வே பணிமனை முன்பு குவிக்கப்பட்டார்கள். போராட்டக்காரர்கள் ரயில் பணிமனையை  முற்றுகையிட முயல்வதைப் பார்த்த போலீஸார், அவர்களை மறித்து நின்றார்கள். இதனால் கோபமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், காவல் துறைக்கு எதிராகவும் ரயில்வே துறை அதிகாரிகளுக்கு எதிராகவும் கோஷமிட்டபடி, சாலையில் படுத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. அதனையடுத்து, திருச்சி மாநகரம் பொன்மலை பகுதி போலீஸார், மணியரசன் உள்ளிட்ட போராட்டக்காரர்கள் அனைவரையும் கைதுசெய்தனர். தொடர்ந்து கைதுசெய்யப்பட்டவர்கள் பொன்மலை பகுதியில் உள்ள ரயில்வே பணிமனை திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.
கூட்டத்தில் பேசிய தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன், “ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசுக்குச் சொந்தமான 18 பொதுத்துறை நிறுவனங்களில், தமிழ்நாட்டில் தமிழர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டுவருகிறது.  குறிப்பாக ரயில்வே துறையில் முழுவதுமாக வெளிமாநிலத்தவர்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டுவருகிறது. தமிழ்நாட்டில் உள்ள படித்த பட்டதாரி இளைஞர்கள், 90 லட்சம் பேருக்குமேல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்துவிட்டு வேலை கிடைக்காமல் தவித்துவரும் நிலையில், தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில், மத்திய அரசு தமிழ்நாட்டினருக்கான வேலையை முறைகேடாக வட மாநிலத்தினவருக்கு கொடுத்து, தென்னாப்பிரிக்காவைப் போன்று இனப்பாகுபாடு காட்டி வருகிறார்கள். இதனால் தமிழக இளைஞர்கள் டி.என்.பி.எஸ்.சி முதற்கொண்டு அனைத்து அரசு வேலைகளையும் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில், பொன்மலை ரயில்வே பணிமனை மற்றும் பல்வேறு  கோட்ட அலுலகங்களில் 300 பேருக்குப் பணிநியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். அதில், ஒருவர்கூட தமிழர் இல்லை. முறைகேடாகப் பிறமாநிலத்தவர்களைச் சேர்த்தது, மத்திய அரசின் தமிழர்கள் மீதான இனப் பாகுபாடு, மொழிவழி மாநிலச் சட்டத்துக்கு எதிரானது. எனவே, அதிகபட்சமாக 10 சதவிதம் வெளிமாநிலத்தவருக்கு வேலைவாய்ப்பு வழங்கலாம், அதனைத் தவிர்த்து அதைவிட, அதிகமாக உள்ள வெளிமாநிலத்தவரை  அப்புறப்படுத்திவிட்டு, அந்த இடங்களில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். இதனைச் செய்யத் தவறினால் அடுத்தடுத்து மாபெரும் போராட்டங்களைக் கையிலெடுக்க உள்ளோம்” என்றார்

கருத்துகள் இல்லை: