ஞாயிறு, 31 மார்ச், 2019

ஜெகத் ரட்சகன் சிங்கப்பூரில், கம்பெனி ஆரம்பித்திருப்பது உண்மைதான்!

இரா.தேவேந்திரன் - குமரகுருபரன் விகடன் : தி.மு.க-வின் ‘காஸ்ட்லி’
வேட்பாளர் ஜெகத்ரட்சகன், அரக்கோணம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
நெமிலி பகுதியில் பரபர பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தவரைச் சந்தித்துப் பேசினோம்... ‘‘சிங்கப்பூரில் உங்கள் குடும்பத்தினருக்குச் சொந்தமாக ‘சில்வர் பார்க் இன்டர்நேஷனல்’ நிறுவனம் இருப்பதாகவும், அதன் மூலமாக இலங்கையில், எண்ணைய்ச் சுத்திகரிப்பு வர்த்தகத்தில் 26 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாகவும் வாட்ஸ் அப்பில் வரும் தகவல்கள் உண்மையா?’’ ‘‘
சிங்கப்பூரில், ஒரு கம்பெனி ஆரம்பித்து இருக்கிறோம். அந்தக் கம்பெனியில், என் மனைவி மற்றும் மகன்கள் பங்குதாரர்களாக இருக்கிறார்கள். அவ்வளவுதான்... அதற்குள் பல கோடி ரூபாய்களை விமானத்திலும் கப்பலிலும் ஏற்றிக்கொண்டுபோய் இலங்கையில் வைத்துவிட்டதாகச் சொல்கிறார்கள் எதிரணியினர். அப்பட்டமான பொய் இது.
அப்படி எல்லாம் ஒன்றும் செய்துவிட முடியாது.’’ ‘‘அ.தி.மு.க ஆட்சியில், உங்களுக்குச் சொந்தமான மதுபான ஆலையிலிருந்து பெருமளவில் மதுபானம் கொள்முதல் நடப்பதாகவும், அந்த வகையில் உங்களுக்கும் ஆளும் கட்சிக்கும் இடையில் ஓர் இணக்கம் இருப்பதாகவும் பேசப்படுகிறதே?’’


அந்தத் துறையில் எனக்குச் சம்பந்தம் இல்லை. அதை என் மகன்கள்தான் பார்த்துக் கொள்கிறார்கள். நான் ஆழ்வார்கள் ஆய்வு மையம் வைத்திருக்கிறேன்.

எனவே, அந்தத்துறைக்கு நான் போவதில்லை. எனக்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.’’
 ‘‘ஆண்டாள் விவகாரத்தில், நீங்கள் ஜீயர் சுவாமிகளுக்கு ஆதரவாகத் தந்த அறிக்கை, உங்கள் கட்சியினர் இடையே கடும் விமர்சனத்துக்கு உள்ளானதே?’’ ‘‘அதில் ஒரு விமர்சனமும் இல்லை. என்னை அனைவரும் பாராட்டினார்கள். எங்கள் கட்சியில் எந்த விமர்சனமும் அப்படி வரவில்லை.’’ ‘

‘மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், நீங்கள் 430 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்ததே?’’
 ‘‘வருமானவரி சோதனை என்பது தொழில் செய்பவர்கள் அலுவலகத்தில் வழக்கமாக நடக்கும். தொழில் செய்யாதவர்களுக்கு அது பற்றி ஒன்றும் தெரியாது. வரி ஏய்ப்பு எதுவும் நடக்கவில்லை. கணக்கு பக்காவாக இருக்கிறது.’’

கருத்துகள் இல்லை: