டாடா நிறுவனத்தின் நானோவுக்குப் போட்டியாக பஜாஜ் ஆட்டோ நிறுவனம் குட்டிக் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆர்இ60 என்ற பெயரிலான இந்தக் கார் டெல்லியில் (03.01.2012) அறிமுகப்படுத்தப்பட்டது.
புதிய ரகக் கார் இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வரும் என்று நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜீவ் பஜாஜ் தெரிவித்தார். ஆர்இ60 ரகக் காரில் 200 சிசி திறன் கொண்ட இன்ஜின் உள்ளது. இதில் மணிக்கு அதிகபட்சம் 70 கி.மீ. வேகத்தில் செல்ல முடியும். ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 35 கி.மீ. தூரம் ஓடக்கூடியது என்று ராஜீவ் பஜாஜ் தெரிவித்தார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தக் கார் உருவாக்க முயற்சியில் நிறுவனம் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாக அவர் கூறினார். நகர்ப்புற மக்களின் வசதியைக் கருத்தில் கொண்டு இந்தக் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கார் தயாரிப்பில் ஈடுபடுவதென முடிவு செய்து சிறிய ரகக் காரை அறிமுகப்படுத்தப் போவதாக 2008ம் ஆண்டு பஜாஜ் நிறுவனம் அறிவித்தது. ரெனால்ட் நிசான் நிறுவனங்களின் தொழில்நுட்பக் கூட்டுடன் இந்தக் கார் தயாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்தக் காரின் விலை 3,000 டாலராக (ரூ. 1.5 லட்சம்) நிர்ணயிக்கலாம் என தீர்மானிக்கப்பட்டது. இதன்படி 2011 ம் ஆண்டு இந்தக் கார்கள் சாலைகளில் ஓடும் எனஅறிவிக்கப்பட்டது.
ஆனால் விலை நிர்ணயிப்பது தொடர்பாக நிறுவனங்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ரெனால்ட் நிசான் நிறுவனங்கள் புதிய ரக சிறிய காரின் விலையை 2,500 டாலர் (ரூ. 1.25 லட்சம்) என நிர்ணயிக்கலாம் என தெரிவித்தது. ஆனால் அதற்கு பஜாஜ் நிறுவனம் சம்மதிக்காததால் அத்திட்டம் பாதியில் நின்றுபோனது.
2010ம் ஆண்டில் ரெனால்ட் நிசான் நிறுவனங்கள் பஜாஜ் நிறுவனத்துடன் இணைந்து குட்டிக் காரைத் தயாரிக்க முடிவு செய்தன. இதன்படி புதிய ரகக் கார் உருவானது.
புதிய காரை வடிவமைத்து தயாரிக்கும் பொறுப்பை பஜாஜ் நிறுவனம் மேற்கொள்ளும். இருப்பினும் மூன்று நிறுவன கூட்டுத் தயாரிப்பாக இந்தக் கார் வெளிவரும் என்று ராஜீவ் பஜாஜ் தெரிவித்தார்
இந்தக்காரின் விலை இன்னும் முடிவு செய்யப்படவில்லை. கூட்டணி நிறுவனங்கள் இந்தக் காரை இதுவரை பார்க்கவில்லை என்றும், ஆட்டோமொபைல் கண்காட்சியில்தான் அவை பார்க்க உள்ளன என்று அவர் மேலும் தெரிவித்தார். இத்தகைய குட்டிக் கார் தயாரிப்பில் தங்களை இணைத்துக் கொள்ள ஆர்வம் இல்லையெனில் அவர்கள் வெளியேறலாம் என்றார் பஜாஜ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக