திங்கள், 2 ஜனவரி, 2012

கட்சியில் சேருவோரிடம் சத்தியம் வாங்க ராமதாஸ் உத்தரவு

சென்னை: கட்சியில் சேர்க்கும் புதிய உறுப்பினர்களிடம், பா.ம.க.,வுக்கு ஓட்டுப் போட, குல தெய்வத்திடம் சத்தியம் வாங்க ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்ட பா.ம.க.,வின் பொதுக்குழு, சென்னை அடுத்த பாடியில் நடந்தது. இதில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: பா.ம.க., ஆரம்பித்த ஐந்து மாதத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் தனித்து நின்று 7 சதவீத ஓட்டுகள் பெற்றோம். தற்போது நடந்த தேர்தலில் கூட்டணி வைத்து வெறும், 2.15 லட்சம் ஓட்டுகள் மட்டுமே பெற்றோம். கூட்டணி வைத்ததால் வந்த பின்னடைவு இது. நாம் அடிக்கடி கூட்டணி மாறுகிறோம் என்று பொதுமக்கள் கிண்டல் செய்தனர். இரண்டு திராவிட கட்சிகளும் நம்மை இழுத்தடித்தனர்.
எனவே, இனிமேல் திராவிட கட்சிகளோடு கூட்டு இல்லை என்று முடிவெடுக்கப்பட்டது. கடந்த 45 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் திராவிடக் கட்சிகள், இலவசங்களை கொடுத்து மக்களை சோம்பேறிகளாக்கினர். மதுபானம், சினிமா போன்றவற்றை கொடுத்து இளைஞர்களை சீரழித்தனர்.

மக்களின் வாழக்கை இன்னும் முன்னேற்றம் அடையவில்லை. தமிழகத்தில் மூன்றரை கோடி பேர் வறுமையில் உள்ளனர். இந்த நிலை மாற தமிழகத்தில் உழைக்கும் கட்சி பா.ம.க., தான். எனவே, ஒன்றியத்துக்கு 50 ஆயிரம் பேரை கட்சியில் சேர்க்கும் பணியில் தீவிரமாக இயங்க வேண்டும். கட்சியில் உறுப்பினர்களை சேர்த்த பிறகு, பா.ம.க.,வுக்கு தான் ஓட்டு போடுவேன் என்று குல தெய்வத்திடம் சத்தியம் வாங்குங்கள்.இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

கருத்துகள் இல்லை: