திங்கள், 2 ஜனவரி, 2012

சென்ற ஆண்டின் சொதப்பல்ஸ் ஆஃப் 2011'


Rajapattai and Osthi Movies


தமிழ் சினிமாவில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட அல்லது தாங்களாகவே பணம் செலவழித்து ஏக எதிர்ப்பார்ப்பை உருவாக்கி, அதை பூர்த்தி செய்யத் தவறிய படங்களின் வரிசை இது.
1. ஒஸ்தி
கஷ்டப்பட்டு திறமையான இயக்குநர் எனப் பெயரெடுத்த தரணியின் இயக்கத்தில் வெளியாகி சென்ற ஆண்டின் சொதப்பல்களின் சிகரம் என்ற 'சிறப்பைப்' பெற்றது இந்தப் படம். ஸ்கூல் பையனுக்கு காக்கி யூனிபார்ம் மாட்டி, மாறுவேஷப் போட்டிக்கு அனுப்பிய மாதிரி இருந்தது என பலரும் நக்கலடிக்கும் அளவுக்கு பொருந்தாத ஹீரோயிஸம், நெல்லைத் தமிழ் என்ற பெயரில் சகிக்க முடியாத உச்சரிப்பு, 10 நிமிடம் கூட தொடர்ந்தார் போல இருக்கையில் உட்காரமுடியாத அளவுக்கு எரிச்சலூட்டும் காட்சிகள் என.... பார்த்த அத்தனை பேரையும் படுத்தி எடுத்த படம் இது.

தமாஷ் என்னவென்றால், படம் வெளியானபோது 'ஒரு முறை பார்க்கலாம்' என்ற ரீதியில் தடவிக் கொடுத்து எழுதிய சிலரே, ஆண்டு கடைசியில் மோசமான படங்களின் லிஸ்டில் ஒஸ்தியை சேர்த்ததுதான்!
2. வேங்கை
'யப்பா... இதெல்லாம் உனக்கே கொஞ்சம் ஓவராத் தெரியல..' , என ஸ்க்ரீனில் வந்த தனுஷைப் பார்த்து ரசிகர்களை உரக்கக் கேட்க வைத்த படம் வேங்கை. முதல் இரண்டு காட்சிகளைப் பார்த்ததுமே, 'அட இது ஹரி படமா' என்று சொல்லும் அளவுக்கு சவ சவ காட்சிகள்.
3. வித்தகன்
வித்தகன் - With the Gun என்று தலைப்பில் போட்டதாலோ என்னமோ, படம் முழுக்க துப்பாக்கியால் சுட்டுக் கொண்டே இருந்தார் பார்த்திபன். முன்பெல்லாம் பார்த்திபன் படம் என்றால் பெரிய எதிர்ப்பார்ப்பிருக்கும். பச்சக்குதிரையில் அந்த எதிர்ப்பார்ப்பு அடியோடு விழுந்தது. அப்போது விழுந்த குதிரை இன்னும் எழுந்திருக்கவில்லை, ஒரு இயக்குநராக. நல்ல படைப்பாளியான பார்த்திபன் மீண்டு ஃபார்முக்கு வருவாரா... பார்க்கலாம்!
4. ராஜபாட்டை
நல்ல இயக்குநர், அருமையான நடிகர் இருவரும் சேர்ந்திருக்கிறார்கள்... இன்னொரு திரைவிருந்து காத்திருக்கிறது, என ஆசையோடு போன ரசிகனை 'வருவியா வருவியா...' என கேட்டு கேட்டு அறைந்த மாதிரி ஒரு எஃபெக்ட் ராஜபாட்டை படம் முடிந்ததும்!
5. நடுநிசி நாய்கள்
வித்தியாசமான படங்களைத் தருபவர் என்று பெயரெடுத்திருந்தாலும், ஆங்கிலத்தில் உள்ள கெட்ட வார்த்தைகளையெல்லாம் வசனமாக வைப்பவர் என்ற குற்றச்சாட்டு கவுதம் மேனன் மீது உண்டு. இந்த நடுநிசி நாய்கள் மூலம், அந்தக் குற்றச்சாட்டை விலக்கிக் கொள்ள வைத்தார் கவுதம் மேனன். பதிலுக்கு, வக்கிரத்தின் உச்சமான படம் தந்தவர் என்ற மோசமான பழிக்கு ஆளாகியுள்ளார்!!
6. மாப்பிள்ளை
இந்தப் படத்தின் முதல் சில காட்சிகளைப் பார்த்துதுக் கொண்டிருந்தபோதே, திட்டியபடி வெளியேறிய தீவிர ரஜினி ரசிகர்களை திரையரங்குகளில் பார்க்க முடிந்தது. ரஜினியின் பழைய மாப்பிள்ளையில் 1 சதவீதம் கூட இல்லை என்ற விமர்சனம் மட்டும்தான் இந்தப் படம் எடுத்ததால் கண்ட பலன்!
7. வெடி
பிரபுதேவா அடுத்தடுத்த தந்த தோல்விகளில் லேட்டஸ்ட் இது. மார்க்கெட் உள்ள நடிகர்கள் இருந்தும் அவர்களை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை பிரபுதேவா. போதாக்குறைக்கு மிக பலவீனமான திரைக்கதை, சன் பிக்சர்ஸின் பிரமாண்ட விளம்பரங்களைக் கூட தோற்கடிக்க வைத்தது.
8. 7 ஆம் அறிவு
வசூலுக்கும் தரத்துக்கும் சம்பந்தமில்லை என்பதை நிரூபித்த படம். இந்தப் படத்துக்கு இருந்த எதிர்ப்பார்ப்பு கொஞ்சமல்ல. அந்த எதிர்ப்பார்ப்புடன் ஒப்பிட்டால், படத்தின் தரம் ஒன்றுமே இல்லை, முதல் அரைமணி நேர அசத்தல் காட்சிகளைத் தவிர.
9. வேலாயுதம்
வேலாயுதம் வசூல் திருப்தியாக இருந்தாலும், விஜய்யின் மற்ற படங்களிலிருந்து இது எந்த வகையிலும் வித்தியாசமாகவோ புதுமையாகவோ இல்லை. இல்லாத ஊருக்கு இலுப்பை பூ சமாச்சாரம் மாதிரிதான்... தீபாவளி ரேஸில் இந்தப் படமும் தாக்குப் பிடித்தது. வசூல் நன்றாக இருந்தாலும், தரம் அந்த அளவுக்கு இல்லை என்ற விமர்சனத்தை விஜய் புறக்கணிக்க முடியாது.
10. இளைஞன்
இந்தப்படத்துக்கு செலவழிக்கப்பட்டதாக சொல்லப்பட்ட பணத்தில் நான்கு தரமான படங்களை எடுத்திருக்கலாம். கலைஞரின் வசனங்கள் படத்துக்கு பெரும் பலம் என்று சொல்லப்பட்டது போய், அவர் வசனமே மைனஸாகக் கருதப்பட்ட நேரத்தில் வெளியான படம். கிடைத்த வாய்ப்பை முடிந்தவரை வீணடித்திருந்தார் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா.

கருத்துகள் இல்லை: