புது தில்லி, ஜன. 5: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்ட பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்கிற குற்றச்சாட்டு குறித்து விளக்கமளிக்குமாறு கேட்டு சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது. எஸ்ஸார் டெலி ஹோல்டிங்ஸ், லூப் டெலிகாம் ஆகிய நிறுவனங்களிடம் மென்மையாக நடந்து கொள்வதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்றும் சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. சிபிஐ இயக்குநர் மற்றும் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆகியோரின் தலையீட்டின் காரணமாக எஸ்ஸôர் டெலி ஹோல்டிங்ஸ், லூப் டெலிகாம் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்படவில்லை என்று கூறி தன்னார்வ அமைப்பு மனு தாக்கல் செய்திருந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் 9-ம் தேதி தயாநிதி மாறன் மீது சிபிஐ எஃப்ஐஆர் பதிவு செய்தது. அதற்கு மறுநாள் அவரது இடங்களில் அதிரடிச் சோதனை நடத்தப்பட்டது. அதன்பிறகு இரண்டு மாதங்களுக்கு மேலான பிறகும் இது தொடர்பாக எந்தக் கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மனுதாரர் சார்பாக ஆஜரான மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண், "சம்பந்தப்பட்ட இரு நிறுவனங்கள் மீதும் ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் குற்றச்சாட்டுப் பதிவு செய்வதற்கான ஆதாரங்கள் இருப்பதாக சிபிஐ புலனாய்வு அதிகாரிகள் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்திருக்கின்றனர். ஆனாலும் அந்த இரு நிறுவனங்கள் மீது சிபிஐ ஊழல் குற்றச்சாட்டு பதிவு செய்யவில்லை. இது முரண்பாடாக உள்ளது. இதை ஏற்றுக் கொள்ள முடியாது' என்று வாதிட்டார். மத்திய அரசில் செல்வாக்குப் படைத்த சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித், இரு நிறுவனங்களுக்கும் வெளிப்படையாகவே நற்சான்று அளித்திருக்கிறார். வழக்கில் தலையீடு இருப்பதற்கு இதுவே சான்று என்றும் பிரசாந்த் பூஷண் கூறினார். ஆ.ராசாவைப் போலவே முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனும் 2ஜி வழக்கில் குற்றம் புரிந்திருக்கிறார். ஆனாலும் தயாநிதி மாறன் மீதான விசாரணையை சிபிஐ வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாக பிரசாந்த் பூஷண் குற்றம்சாட்டினார். இதையடுத்து, மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக 10 நாள்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவுக்கு உத்தரவிட்டது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக