இதில், ராவணன், எம்.ராமசந்திரன் (எம்.ஆர்.), பழனிவேல், மிடாஸ் மோகன், திவாகரன் ஆகிய பவர் பாயின்ட்களின் ஆசியுடன் முக்கிய ஊர்களில் வலம் வந்த 'பூசாரிகள்’ யார் என்று, பட்டியலைத் தயார் செய்து வருகிறார்கள் உளவுத்துறையினர். ஆட்சி மாறிய ஆறு மாதங்களில் இவர்கள் சம்பாதித்த சொத்து, வீடு, முதலீடுகளின் மதிப்பு ஆயிரம் கோடி களைத் தாண்டுகிறதாம். ஐ.பி.எஸ்., மற்றும் எந்த ஒரு லெவல் போலீஸ் டிரான்ஸ்ஃபர் கேட்டு மன்னார்குடி வி.ஐ.பி-கள் யாரிடம் போனாலும், கடைசியாக எம்.நடராஜனின் தம்பியும் முன்னாள் போலீஸ் அதிகாரியுமான பழனி வேலுதான் முடித்துக் கொடுப்பார். இதே போன்று ஐ.ஏ.எஸ்., போன்ற துறை மாறுதல்கள் என்றால், சிறப்பு அமுலாக்க துறை அதிகாரியாக இருந்து நீக்கப்பட்ட பன்னீர்செல்வம் ஓகே., செய்துள்ளார். பொதுப்பணி, நெடுஞ்சாலை, தொழில், போக்குவரத்து ஆகிய நான்கு துறைகளின் நல்லது கெட் டது எல்லாமே, ராவணனின் கைங்கர்யமாக இருந்துள்ளது.
காரியம் வேண்டி வருகிறவர்கள், எடுத்த எடுப்பிலேயே பவர் பாயின்ட்களைச் சந்தித்துவிட முடியாது. முதலில், அவர்கள் ஏரியாவில் உள்ள பூசாரிகளைத்தான் நாட வேண்டும். அவர்களைப் பார்ப்பதற்கே தட்சணை கொடுக்க வேண்டும். பிறகுதான், பிசினஸ் பேசுவார்கள். (தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் வெறும் தட்சணையை மட்டும் கொடுத்துவிட்டு, அடுத்தகட்ட மூவ்மென்ட் இல்லாமல் ஏமாந்தவர்கள் ஏராளம்!) ஒருசில விஷயங்களில் இந்தப் பூசாரிகளே காரியத்தை முடித்துக் கொடுத்து விடுவார்கள். எல்லாம் முடிந்ததும், பவர் பாயின்ட் நடந்துபோகும் போதோ, காரில் ஏறும்போதோ, இந்த நபரைக் காட்டி ஏதோ சொல்வார்கள். அப்போது, சற்று தூரத்தில் நின்று கும்பிட்டு நன்றிக்கடனை செலுத்தவேண்டும். உட்கட்சி பூசலில் எதிரிகளை ஒழித்துக்கட்டுதல், கட்சி நிர்வாகப் பதவி, அரசாங்க டெண்டர், கான்ட்ராக்ட், உத்தியோக மாறுதல் என்று எந்த ஒரு காரியம் என்றாலும் கல்லா கட்டினால், காரியம் சுபமாகும்.
தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை பக்கம் இருந்து காரியம் ஆகவேண்டி வருகிறவர்களிடம் பணம் வசூல் செய்வதற்கான ஒரு கவுன்டர், சென்னை மியூசிக் அகடமி எதிரே உள்ள பிரபல ஒட்டலில் இயங்கி வந்ததாம். இந்தப் பூசாரிகள், ஒரு ஃப்ளோரையே வாடகைக்கு எடுத்து பிசினஸ் செய்திருக்கிறார்கள். சசிகலா மீதான நடவடிக்கைக்கு பிறகு, இப்போது ஊர்வாரியாக ஆட்டம் போட்ட பூசாரிகளைப் பற்றி வெளிப்படையாகப் பேச ஆரம்பித்துள்ளனர்.
சென்னை
ராவணவனுக்கு சென்னையில் இரண்டு பூசாரிகள். ஈரோட்டை தன் பெயருக்கு முன்னே வைத்திருக்கும் மூன்று எழுத்து நபர் ஒருவர். தமிழ்ப் பற்றுப் பெயரைக் கொண்டவர் இன்னொருவர். இவர்களுக்கு பூந்தமல்லி சாலையில் ஈகா தியேட்டர் அருகில் ஆபீஸ். அண்ணாநகரில் ஒரு பங்களாவை வாடகைக்குப் பிடித்து இருந்தார்கள். ராவணனின் கன்ட்ரோலில் இருந்த மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகள் தொடர்பான புகார்கள் வந்தால், அதுகுறித்து விசாரிக்க இந்தப் பூசாரிகள் போவார்கள்.
ஈரோடு நபர், முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் ஒருவரிடம் பி.ஏ-வாக இருந்தவர். அ.தி.மு.க-வை விட்டு தி.மு.க-வுக்கு தாவிய செல்வாக்கான பிரமுகரின் நிழலாகவும் இருந்தவர். யாரையும் ஒருமையில் பேசுவார். மந்திரிகளிடம் 'இதைச் செய்ய முடியுமா? முடியாதா?' என்று கட் அண்ட் ரைட்டாகப் பேசுவது ஈரோட்டுக்காரரின் ஸ்டைல். தமிழ் நபரின் மகனுக்கு பிரபல கல்லூரியில் ஸீட் வாங்கிக்கொடுத்தார் ஒரு பிரமுகர். அதற்கு கைமாறாக, ஏற்கனவே இருந்த மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்தவரை விரட்டிவிட்டு, அந்தப் பதவியில் தனக்கு வேண்டியரை உட்கார வைத்தாராம். இது போலவே, எம்.ஆர்., மற்றும் பழனிவேல் ஆகிய இருவருக்கும் ராசிபுரத்தை தன் பெயருக்கு முன்னே வைத்திருக்கும் சந்திரமானவர்தான் பூசாரி. ஒரே நேரத்தில் இருவருக்கு வரும் அத்தனை புரோகிராம்களையும் தெளிவாகக் கையாள்வாராம். மிடாஸ் மோகன் பெயரைச் சொல்லி நடமாடிய சாலிகிராமம் பிரதர்ஸ் பற்றியும் கதைகதையாகச் சொல்லுகிறார்கள்.
''முன்பு இவர்கள் மதுபானக் கடையில் வேலை பார்த்தார்கள். இன்று, சென்னையில் 40 பார்கள் இவர்கள் கஸ்டடியில். டாஸ்மாக் கடைகளுக்கு சரக்குகளை ஏற்றிப்போகும் வாகனங்கள் பெரும்பாலும் இவரது கண் அசைவில்தான் நடக்கிறது. போயஸ் கார்டனுக்குள் சர்வசாதாரணமாக போவதாகச் சொல்லி, மந்திரிகளிடமும் அதிகாரிகளிடமும், 'கார்டனுக்குள்ளேதான் இருக்கேன். வேணும்னா சாருகிட்டே பேசுறீங்களா?' என்று புரூடா விடுவார்களாம். எம்.ஜி.ஆர். காலத்து பிரமுகர் தி.நகர் கோ. சுவாமிநாதனுக்கு அறிவிக்கப்பட்ட கவுன்சிலர் ஸீட்டை மாற்றி அறிவிக்க வைத்தது, இந்த பிரதர்ஸின் உச்சபட்ச சாதனை.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் கல்குவாரி, மணல் அள்ளுதல் எல்லாமே இந்த பிரதர்ஸ் ஓகே சொன்னால்தான் நடக்கும். கால்நடைத் துறை அமைச்சர் சின்னையா, வேறுவழி இல்லாமல் இவர்கள் சொல்வதை அப்படியே கேட்டு வருகிறாராம். முன்பு ஒருமுறை, அ.தி.மு.க. பொதுக்குழு மேடையில், சசிகலாவுக்கு கட்சியில் பதவி தரவேண்டும் என்று முதலில் முழக்கமிட்டவர் வளர்மதி. இவரும் ராவணனைப் பிடித்துத்தான் மந்திரி பதவி பெற்றதாக கட்சிக்காரர்கள் சொல்கிறார்கள். தற்போது சென்னை மாநகராட்சியில் அ.தி.மு.க. சார்பில் கவுன்சிலர் பதவியைப் பெற்ற பெரும்பாலானவர்களிடம், 'பணம் கொடுத்தீர்களா? யாரிடம்? எவ்வளவு?' என்று ரகசிய விசாரணை நடைபெற்று வருகிறது.
திருச்சி
இன்ஜினீயர் கலியபெருமாள் பெயரைப் பயன்படுத்தும் பூசாரிகள் மூவர். ஒருவர், மாவட்ட அளவில் கட்சியில் பொறுப்பில் இருக்கிறார். மணிகண்டம் யூனியனில் 60 ஏக்கர் நிலம் கைமாறியதுக்கு இவர்தான் முக்கியக் காரணமாம். அடுத்தவர் குணமானவர், மூன்றாவது நபர் - முருகப்பெருமானது பெயரைக் கொண்ட சட்டம் தெரிந்தவர். இந்த மூம்மூர்த்திகள்தான் திருச்சியில் ஆட்சி நடத்தியவர்கள். கடந்த சட்டமன்றத் தேர்தல் சமயத்தில், ஐந்து கோடி ரூபாய் பஸ்ஸில் கடத்தி வரப்பட்ட போது, திருச்சியில் வைத்துப் பிடித்தார் ஆர்.டி.ஒ-வான சங்கீதா. பிறகு, முதல்வர் ஜெயலலிதா கையால் பரிசு பெற்றார். அப்பேற்பட்டவர் மனதை நோகடித்தவர்களும் இவர்கள்தான். மூன்று எழுத்துப் பிரமுகர் ஒருவரின் சகலை சட்டவிரோதமான முறையில் ஆற்று மணல் அள்ளினார். அவரது லாரியை மடக்கிப் பிடித்தாராம் சங்கீதா. அந்தச் சம்பவத்துக்குப் பிறகு, என்ன நடந்ததோ, திடீரென லாங் லீவில் போன சங்கீதா, இப்போதுதான் மீண்டும் டூட்டிக்கு திரும்பி இருக்கிறார்.
கலியபெருமாளின் வீடு கே.கே. நகரில் உள்ளது. முன்பு பள்ளம் மேடாகக் காட்சி அளித்த அவர் ஏரியாவின் ரோடு, இப்போது பளபளவென மின்னுகிறது. 'பொதுக் காரியங்களுக்குச் செலவு செய்யவேண்டிய பல லட்ச ரூபாய், தனி நபருக்காக வீணடிக்கப்பட்டது' என்கிறார்கள் கட்சிக்காரர்கள். திருச்சியில் ஒரு தியேட்டர், ஒரு திருமண மண்டபம் இரண்டின் பின்னணியையும் துருவிக்கொண்டு இருக்கிறார்கள். சமீபத்தில் அது கைமாறி இருக்கிறது. மன்னார்குடி வகையறாவின் சித்தப்பா மகள் என்று சொல்லிக்கொள்ளும் ஒரு பெண்மணி அடிக்கடி வந்துபோகிறாராம்.
கோவை
மேற்கு மண்டல சி.எம். என்றுதான் ராவணனை அழைப்பார்களாம். திருப்பூர் ஏரியாவில் சிவன் பெயரைக் கொண்ட ஒரு பிரமுகர்தான், இவருக்கு முக்கியமான பூசாரியாக செயல்பட்டு வந்தார். சமீபத்தில் சாயப்பட்டறை தொழிலில் ஏற்பட்ட சரிவைச் சரிக்கட்ட, மானியத்துடன் கூடிய உதவி அளிக்க அரசு தயாரானது. அப்படிக் கிடைக்கும் தொகையில், மூன்று சதவிகித கமிஷனை முன்கூட்டியே வசூலிக்கத் தயார் ஆனாராம் அந்தப் பிரமுகர். பேச்சுவார்த்தையில் இருந்தபோதே கல்தா வந்துவிட்டதால், பாதியில் நிற்கிறது விவகாரம்.
சென்னையில் பிரபல தொழிற்சாலைகளின் நிர்வாகத் தரப்பை அழைத்து, 'ஒவ்வொரு மாதமும் இரும்புக் கழிவுகளை (ஸ்க்ராப்) தாங்கள் சொல்லும் ஆட்களுக்குத்தான் தரவேண்டும்’ என்று உத்தரவு போட்டாராம் கோவைப் பிரமுகர். குறைந்த விலைக்கு ஸ்க்ராப் வாங்கி அதிக விலை வைத்து கைமாற்றி விடுவதிலேயே, அவருக்குப் பல கோடிகள் கொட்டியதாம். 'இப்படி ஒரு ரூட் எங்களுக்குத் தெரியவில்லையே?' என்று தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் ஒருவர் வாய் பிளக்கிறார்.
திருப்பூர் அருகேயுள்ள இரண்டெழுத்துப் பிரமுகர் , உடுமலைப்பேட்டையை சேர்ந்த மூன்று எழுத்துப் பிரமுகர் இருவரும் சமீபத்தில்தான் பதவியைப் பிடித்தார்கள். திருப்பூர் பிரமுகரிடம், 'மூன்று சி’ கொடுத்து கோட்டைப் பிரதிநிதியாக ஆனாராம் ஒருவர். ஆனால், போட்ட பணத்தை எடுப்பதற்குள், பதவி பறி போய்விடுமோ என்ற பீதியில் இருக்கிறார்.
இந்த மூன்று நகரங்களைத் தவிரவும், தமிழகம் முழுவதும் பூசாரிகளின் பட்டியல் தயாராகி விட்டது. 'இவர்கள் மீது கட்சி நடவடிக்கை எடுத்தால் மட்டும் போதாது... சொத்துக்களைப் பறிமுதல் செய்யவும் வேண்டும்’ என்று துடிக்கிறார்கள், ரத்தத்தின் ரத்தங்கள்.
அம்மாவின் ஆக்ஷன் எப்போது வேண்டுமானா லும் தொடங்கலாம்.
- ஆர்.பி.
ராவண 'ரீசார்ஜ்'!
பத்து தலைக்கு மேலே ஏவிவிட்டுக் கொழித்த ராவணனின் முக்கிய தலைகளில் அந்த 'ரீசார்ஜ்' சாமியை¬யும் குறிப்பாகச் சொல்கிறார்கள். விமானம் பறக்கும் ஏரியாவில் போக்குவரத்து பார்க்கும் இந்த ஆசாமி பற்றி மிஸ்டர் கழுகு ஏற்கெனவே சொல்லியிருக்கிறார். இப்போது வெளியாவது அதைவிட பகீர் தகவல். தமிழ்நாடு முழுக்க போக்குவரத்துத் துறைதான் என்றில்லாமல், வேறு பல துறைகளிலும் ஆகவேண்டிய காரியங்களை வஞ்சகமில்லாமல் முடித்துக் கொடுத்து வந்தாராம் இந்த 'ரீசார்ஜ்' பார்ட்டி. இவர் பிரமாண்ட லீலைகள் காதுக்கு வந்து இவருக்குக் கிடுக்கிப்பிடி போட உத்தரவிட்டாராம் அப்போதிருந்த உள்துறைச் செயலாளர். ராவண நிழலான இவரோ, தனக்கு வந்த அஸ்திரத்தைத் திருப்பிவிட... உள்துறைச் செயலாளர் மீதே ஆட்சி மேலிடத்துக்கு கசப்பை உண்டாக்கி... அவரையே தூக்கி அடிக்க வைத்தார்களாம். இவருடைய குடும்பத்தில் நடந்த ஒரு திருமணத்துக்கு, வெவ்வேறு 'ஷோ’க்களாக தனித்தனி ரிசப்ஷன்கள் நடத்தி... செட் செட்டாக பெரும்புள்ளிகளை வரவழைத்து... அவர்களிடம் கின்னஸ் ரேஞ்சுக்கு மொய் வசூல் நடத்தியதையும் சொல்லி வாய் பிளக்கிறார்கள் இந்தத் துறையில் இருப்பவர்கள். ''அம்மா இன்னும் இவரை எப்படித்தான் விட்டு வச்சிருக்காங்களோ'' என்றும் ஆச்சரியப்படுகிறார்கள்.
கல்தா... தொடரும் கல்தா...!
'அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெ. ஜெயலலிதா அவர்களின் முக்கிய அறிவிப்பு’ என்று தினமும் நமது எம்.ஜி.ஆர். பத்திரிகையில் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. மாவட்டவாரியாக சசிகலா குடும்பத்தினரால் பதவிக்கு வந்த அத்தனை பேரின் பல்லையும் பிடுங்க ஆரம்பித்திருக்கிறார் ஜெயலலிதா.
''சசிகலா குடும்பத்தினரால் நியமிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்களைத்தான் முதலில் களை எடுக்கணும்னு அம்மா லிஸ்ட் கேட்டாங்க. ஆனா அதுக்குப்பிறகு என்ன நினைச்சாங்களோ தெரியல. 'ஒன்றியம், கிளை கழகம்னு அடி மட்டத்தில் அவுங்க போட்ட ஆட்களோட லிஸ்டு எனக்கு வேணும்’னு கேட்டாங்க. அந்த லிஸ்ட் மாவட்ட வாரியாக அம்மாவோட கைக்குப் போக ஆரம்பிச்சிருக்கு. அதை அம்மாவே படிச்சிப் பார்த்து அவுங்க எல்லோரையும் பொறுப்பில் இருந்து தூக்க ஆரம்பிச்சிட்டாங்க. அந்தப் பட்டியல்தான் இப்போ வந்துக்கிட்டு இருக்கு. இது முடிஞ்சதும் மாவட்டச் செயலாளர்களையும் மாத்திடுவாங்க'' என்று சொல்கிறார்கள் கார்டன் வட்டாரத்தோடு நெருக்கத்தில் இருப்பவர்கள்.
நீக்கப்பட்டவர்கள் பட்டியலில் உள்ளவர்களில் சிலரது 'சசி’மூலத்தைப் பார்ப்போம்.
ஈரோடு மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பொறுப்பில் இருக்கும் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ-வான ஆ.என்.கிட்டுசாமியின் கட்சிப் பதவி அவரிடம் இருந்து பிடுங்கப்பட்டிருக்கிறது. ''மொடக்குறிச்சி தொகுதியில் முன்னாள் அமைச்சரான பி.சி.ராமசாமியை ஓரம் கட்டிவிட்டு கிட்டுசாமிக்கு ஸீட் கொடுத்தது சாட்சாத் ராவணன்தான். உள்ளாட்சித் தேர்தலில் கட்சிக்காக உழைப்பவர்களுக்கு ஸீட் கொடுக்காமல் ராவணன் ஆசிர்வாதத்தோடு தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு ஸீட் வாங்கிக் கொடுத்தார். உள்ளாட்சி தேர்தலில் கட்சி அறிவித்த வேட்பாளருக்கு வேலை செய்யாமல் போட்டி வேட்பாளரை நிறுத்தி, கட்சி நிறுத்திய வேட்பாளரை தோற்கடிக்கவும் செய்தார் கிட்டுசாமி. அத்தனையும் அம்மா கவனத்துக்குப் போகவே, முடிந்தது கிட்டுசாமியின் கதை.
ராசிபுரம் தொகுதிச் செயலாளராக இருந்தவர் சந்திரசேகரன். திருச்சி கலியபெருமாளின் உறவினரான சீனிவாசன், நாமக்கல்லில் டி.எஸ்.பி-யாக இருந்தார். சீனிவாசன் மூலமாக நடராஜனின் சகோதரர் ராமச்சந்திரனுக்கு நெருக்கமாகிறார். பதவியும் தேடி வருகிறது. அந்த நெருக்கம்தான் இப்போது பதவியைப் பிடுங்கி இருக்கிறது' என்று சொல்கிறார்கள் விவரம் அறிந்த அ.தி.மு.க-வினர்.
-கே.ராஜாதிருவேங்கடம்
தளவாய்க்கு அடுத்த அடி!
குமரியை உலுக்கிய கார்டன் பூகம்பம்
கார்டனில் ஏற்பட்ட சசிப் பெயர்ச்சி பூகம்பம் கன்னியாகுமரி வரை எதிரொலிக்கிறது. குமரி மாவட்ட அ.தி.மு.க-வில் தவிர்க்க முடியாத சக்தியாக வலம் வந்த தளவாய்சுந்தரத்தை, அமைப்புச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கி இருப்பதுதான், லேட்டஸ்ட் டாக்.
தளவாய் சுந்தரத்தின் அரசியல் என்ட்ரியே படு சுவாரஸ்யமானது. கடந்த 1996-ம் ஆண்டு தமிழகத்தில் 69 சதவிகித இடஒதுக்கீட்டிற்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் விஜயன் வழக்குத் தொடுத்தார். உடனே ஆவேசப்பட்டு விஜயனைத் தாக்கிய விவகாரத்தில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர், இப்போது இளைஞரணியின் மாநிலச் செயலாளராக இருக்கும் ஆதிராஜாராம். அந்த நேரத்தில் ராஜ்யசபா தேர்தலுக்கு ராஜாராம் பெயரை அ.தி.மு.க தலைமை பரிந்துரைத்தது. 'வக்கீலை அடித்தவருக்குப் பதவியா?’ என்று வழக்கறிஞர் குழாம் டென்ஷனில் எகிறியது. அப்போது சென்னையில் வழக்கறிஞர் அணியில் மாவட்டப் பொறுப்பில் இருந்த தளவாய் சுந்தரம், அ.தி.மு.க. ஆதரவு வக்கீல்களைத் திரட்டி பதில் போராட்டம் நடத்திக்காட்டினார். உடனே ஆச்சர்யப்பட்ட கார்டன், யாருமே எதிர்பார்க்காத வகையில் அவரையே அ.தி.மு.க-வின் ராஜ்யசபா வேட்பாளராக அறிவித்தது. அதன்பிறகு கன்னியாகுமரி எம்.எல்.ஏ. ஆகி பொதுப்பணி, வருவாய், சுகாதாரம் ஆகிய முக்கியத் துறைகளில் அமைச்சராக இருந்தார்.
எதிர்க்கட்சியாக இருந்த போது ஜெ. பேரவை மாநிலச் செயலாளராக இருந்தவர், அதனைத் தொடர்ந்து அமைப்புச் செயலாளர் ஆனார். தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்தவருக்கு, கடந்த சட்டமன்றத் தேர்தலில் குமரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தரப்படவில்லை. அந்த அடியில் இருந்து மீளாதவருக்கு இப்போது மீண்டும் ஒரு அடி.
இது குறித்துப் பேசும் அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர், ''கடந்த தி.மு.க. ஆட்சியில் குமரி மாவட்ட அ.தி.மு.க-வின் தூண்களாக இருந்த மாவட்டப் பொருளாளர் கேட்சன், முன்னாள் மாவட்டச் செயலாளர் சுயம்புலிங்கம், நகரச் செயலாளர் எம்.எம்.பால்ராஜ் உள்பட முக்கியப் புள்ளிகள் எல்லாம் அ.தி.மு.க-வில் இருந்து விலகி தி.மு.க-வில் சேர்ந்துவிட்டனர். இதற்கெல்லாம் காரணம், தளவாயின் தவறான அணுகுமுறைகள்தான். தளவாயின் மனைவி ராஜலெட்சுமியும் வழக்கறிஞரே. இவருக்கும் ஜெயலலிதாவோடு நெருங்கிய நட்பு உண்டு. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ராஜலெட்சுமி நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டார். அதன்பிறகே தளவாயின் அரசியல் வாழ்க்கை மங்கத் தொடங்கியது. இப்போது சசிகலாவுக்கு ஆதரவாக இருந்த காரணத்தால்தான், இருந்த பதவியில் இருந்து நீக்கி இருக்கிறார்கள். இது டிரைலர்தான். விரைவில் இன்னும் பல பெரிய தலைகள் உருளும்' என்றார்கள்.
தளவாய் சுந்தரத்திடமே பேசினோம். ''அம்மா எடுத்த நடவடிக்கை இது. அதற்கு நான் கட்டுப்படுகிறேன். கடைசி சொட்டு ரத்தம் இருக்கும்வரை அம்மாவின் விசுவாசமிக்கத் தொண்டனாக இருப்பேன்' என்றார்.
அப்படிப்போடு!
- என்.சுவாமிநாதன், பி.கே.ராஜ்குமார்.
தோட்டத்திலே பாத்தி கட்டி..!
இப்போதும் தோட்டத்தில் பாத்தி கட்டி செல்வாக்காக தலையாட்டும் 'செடிகொடி' பிரமுகரைப் பற்றித்தான் அ.தி.மு.க-வில் பலருக்கும் ஆச்சரியம்! விமான நிலையத்துக்கும் உள்நகரத்துக்கும் சூப்பர் சர்வீஸ் விடுகிற இந்த பிரமுகர், முதல்வருக்காக பெங்களூரு கேஸில் வாதாடும் வழக்கறிஞர்களையே ஆட்டிப் படைத்து 'லா பாயின்ட்' ஐடியா கொடுப்பாராம். அரசு தொடர்பான வேறு சில வழக்குகளில் வாதாடுவதற்கு டெல்லி வக்கீல்களை அமர்த்துவதிலும் தலையிட்டு தன் விருப்பப்படியே காரியம் நடத்துவாராம். ''இவரோடு சேர்ந்தே வளையவரும் பழனி முருகன் பேர்கொண்ட ஆசாமியின் பாணியும் இதேபோன்றதுதான். இந்த 'செடிகொடி' பிரமுகர் தோட்டத்தோடு தொடர்பில் உள்ளவரையில், சின்னம்மா குரூப்பின் தொடர்பை அறுத்து எந்த பயனும் இல்லை. நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் என்ற கணக்காக, அவர்களுக்காக இவரே தோட்டத்தில் சாலாக்காக காரியங்கள் நடத்துவார்'' என்று எச்சரிக்கை மணி அடிக்கிறார்கள் அ.தி.மு.க-வின் வக்கீல் அணி புள்ளிகள் சிலர்!
thanks vikatan + ramani SF
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக