தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஒரு பாமரனை பந்தாடிய கதை!
ஐக்கிய முன்னணி அரசின் சாதனைகளில் ஒன்றாக போற்றப்படுவது தகவல் அறியும் உரிமைச் சட்டம். அந்தச் சட்டத்தின் மூலம் அரசு அலுவலங்களில் நடக்கும் குளறுபடிகளை வெளியில் கொண்டு வந்து ஊழலற்ற ஜனநாயகத்தை கட்டி அமைக்கிறார்கள் என்று பத்திரிகைகளும் ஆளும் கட்சி பேச்சாளர்களும் வியந்தோதுகிறார்கள். நடைமுறையில் அது எப்படி செயல்படுகிறது என்பது குறித்த நேரடி அனுபவம் ஒன்று:‘சார் அடுத்த திங்கள் கிழமை மாநில தகவல் ஆணையர் அலுவலகத்துக்கு என்னை வரச் சொல்லி லெட்டர் வந்திருக்கு சார். தப்புத்தப்பா தகவல் தந்தாங்கன்னு நான் அனுப்பிய புகாரை விசாரிக்க வரச்சொல்லியிருக்காங்க. நான் கிளம்பி வருகிறேன்’.
சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டிக் கொடுப்பதாக பல தொண்டு நிறுவனங்கள் பெருமளவு ஊழல் செய்து விட்டதாகவும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 3,500 வீடுகள் கட்டியதாகச் சொல்லிக் கொண்டிருந்த ஒரு நிறுவனம் உண்மையில் 2178 வீடுகள்தான் கட்டினார்கள் என்றும், கட்டப்பட்ட வீடுகளுக்கு காப்பீடு செய்ய வேண்டும் என்ற அரசாணைக்குப் புறம்பாக காப்பீடு செய்யயாமல் ஏமாற்றி விட்டார்கள் என்றும் கடற்கரை கிராமம் ஒன்றைச் சேர்ந்த கனகசபை சில வாரங்களுக்கு முன்பு தொடர்பு கொண்டார். ஆதாரங்களாக பத்திரிகைச் செய்திகள், அரசு அலுவலகங்களுக்கு அனுப்பிய மனுக்கள், போராட்ட தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் ஸ்கேன் செய்து மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார்.தொலைபேசியில் மேல் விபரங்கள் கேட்டுக் கொண்டோம். ‘பலபேருக்கு வீடு கட்டிக் கொடுத்ததாக கணக்கு எழுதி காசு அடித்து விட்டாங்க சார், இன்சூரன்சு செய்யாமலேயே இன்சூரன்சு செய்ததாக காட்டிவிட்டாங்க, பெரிய ஊழல் நடந்திருக்கு. இதற்கு ஒரு தீர்வு காணாமல் விட மாட்டேன்’ என்று சொன்ன அவர், சொன்னதற்கு ஏற்ப விடாமல் வாரத்துக்கு இரண்டு முறை தொலைபேசி விபரங்களை தெரிவித்துக் கொண்டிருந்தார்.
அவரது தொடர்ச்சியான போராட்டங்களின் ஒரு கட்டமாக மாவட்ட நிர்வாகம் தவறான தகவல் கொடுத்ததாக அவர் அனுப்பிய புகாரின் மீது மாநில தகவல் ஆணையம் விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது.
மாநில தகவல் ஆணையத்தில் நடக்கவிருக்கும் விசாரணைக்கு அவருடன் போவதாக ஒத்துக் கொண்டோம். ஞாயிற்றுக் கிழமை மதியவாக்கில் தொலைபேசினார்.
‘இன்னைக்குக் சாயங்காலம் கிளம்பி வாரேன் சார், நீங்கதான் உதவி செய்யணும். காலையில ஒம்பதரை மணிக்கு தேனாம்பேட்டையிலை தியாகராயர் சாலையில் இருக்கும் தகவல் ஆணைய அலுவலகத்துக்கு வரச் சொல்லியிருக்காங்க. கோயம்பேட்டில் இறங்கியதும் உங்களுக்கு போன் செய்கிறேன்’.
ஒன்பதரை மணிக்கு தேனாம்பேட்டை தியாகராயர் சாலையில் இருக்கும் மாநில தகவல் ஆணைய அலுவலகத்துக்குப் போய் விட்டோம். புதிய கட்டிடம். நவீன கார்பொரேட் அலுவலகம் போல இருந்தது. உள்ளே நுழைந்தால் வரவேற்பு பகுதியில் நாற்காலிகளில் பலர் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களில் கனகசபை யார் என்று தெரியவில்லை. அவரது தொலைபேசியை அழைத்தால் பதில் இல்லை. இன்னொரு தொலைபேசி இணைப்பே இல்லை. ஒவ்வொருவரையும் இவராக இருக்குமா அவராக இருக்குமா என்று பார்த்துக் கொண்டு நின்றேன். செக்யூரிட்டியிடம் ‘இப்படி வந்தவர் எங்கு காத்திருப்பார்’ என்று கேட்டால் இங்குதானாம்.எல்லோரையும் பதிவேட்டில் பெயர் எழுதி கையெழுத்து போட்டு விட்டு மேலே முதல் மாடிக்குப் போகச் சொன்னார்கள். குள்ளமாக, சிவப்பாக, சட்டை டக் இன் செய்து, இடுப்பில் மொபைல் செருகி ஸ்டைலாக ஒருவர் வந்தார். ஒரு கையில் சில கோப்புகளும், இன்னொரு கையில் அடக்கமான பயணப்பையும். வெளியூர்க்காரர் போலத் தெரிந்தார்.
‘நீங்கதான் கனகசபையா?’ என்று விசாரித்தோம்.
‘கையில அரசாங்க பைல் வைச்சிருக்கேன், ஏன் அப்படி கேட்கறீங்க’ என்று கடுப்பானார்.
‘சாரி சார், கனகசபை என்று ஒருவரைப் பார்க்க வந்தோம். தொலைபேசியில்தான் பேசியிருக்கிறோம், நேரில் பார்த்ததில்லை, அவரைத்தான் தேடிக் கொண்டிருக்கிறோம் அதான்’ என்று வருத்தம் தெரிவித்தேன். ‘நீங்க இங்கதான் வேலை பார்க்கிறீர்களா’ என்று கேட்டதற்கு சரியாக பதில் சொல்லவில்லை.
பின்னர்தான் தெரிந்தது அவர்தான் பிரதிவாதி. தவறான தகவல் கொடுத்ததாக கொடுத்த புகார் பற்றிய விசாரணைக்கு பதில் சொல்வதற்கு மாவட்ட அதிகாரிகள் வந்திருக்கிறார்கள். அவரில் ஒருவர் இவர். கனகசபையை இன்னும் காணவில்லை. மணி 9.45 ஆகி விட்டிருந்தது. அவர் உள்ளே போய் விட்டிருந்தால் முடித்து விட்டு வரட்டும், நாம் காத்திருந்து பார்க்கலாம் என்று முடிவு செய்தோம்.
அப்போது கனகசபை தொலைபேசியில் அழைத்தார். அலுவலகத்துக்கு முன்பு நிற்கிறாராம். எங்கோ கோயிலுக்குப் போயிருந்தாராம்.
‘கறுப்பு கலர் பேகும், துணிக்கடை பையும் வைத்திருப்பேன்’ என்று அடையாளம் சொன்னார்.
இரண்டு கைகளில் இரண்டு பைகளோடு வந்தார். கறுப்பான, உயரமான, உறுதியான உடல் வாகு. கண்கள் தூக்கமின்மையால் சிவந்திருந்தன. கைகளில் வைத்திருந்த பைகளின் கனம் பார்க்கும் போதே தெரிந்தது. துணிக்கடை பை நிறைய ஆவணங்கள். அவர் இதுவரை அனுப்பிய மனுக்கள், அவற்றிற்கு கிடைத்த பதில்கள், பத்திரிகை செய்திகள், புகைப்படங்கள், தபால் வந்த உறைகள் என்று எல்லாவற்றையும் பத்திரமாக சேர்த்து வைத்திருந்தார்.
அவர் ஒரு ஓட்டுனர். லாரி ஓட்டுனர் வேலை செய்கிறாராம். முன்பு இந்தியா முழுவதும் ஓட்டப் போவார். இப்போது, உள்ளூரில் மட்டும்தான் ஓட்டுகிறார். ஊர்த்தலைவராக இருந்தார். சுனாமி சமயத்தில் அவர்தான் தலைவர். அவரது வீடு கடற்கரையிலிருந்து 800 மீட்டரில்தான் இருக்கிறதாம். சுனாமி அன்று முதலில் தண்ணீர் வீட்டை விட்டு கொஞ்ச தூரம் வரை வந்திருக்கிறது. என்ன என்று பார்க்கப் போய் பாலத்துக்கு அப்பால் போன பிறகு மீண்டும் தண்ணீர் உள்ளே வந்து வீட்டை எல்லாம் அடித்துக் கொண்டு போய் விட்டது. அவரது தங்கை மகள் மரத்துக்கு மேல் அடித்துச் செல்லப்பட்டு இறந்திருக்கிறார்.
ஒரு தொண்டு நிறுவனத்திலிருந்து வந்து குழந்தைகளை போட்டோ எடுத்துக் கொண்டு போவார்கள். மாதா மாதம் அது நடக்கவே அந்த வீட்டுக் காரர்கள் இவரிடம் வந்து சொல்லியிருக்கிறார்கள். ‘போட்டோ எடுத்து அதை வைத்து காசு பார்க்கிறாயா, இவங்களுக்கு அதை கொடுக்கணும் இல்லை என்றால் போட்டோ எல்லாம் திரும்பிக் கொடு’ என்று அவர்கள் பைக்கை பிடித்து வைத்துக் கொண்டாராம். அவன் போய் போலீஸில் புகார் கொடுத்து இவர் மீது போலீஸ் கேஸ் ஒன்று போட்டு 15 நாட்கள் சிறையில் வைத்து விட்டார்கள். 6 மாதம் போய் கையெழுத்து போட்டு விட்டு வந்தார். இவரை சிறையில் வைத்து விட்டு வீட்டுக்கு 50 போலீஸ் காரங்க வந்து ரெயடு. அதையெல்லாம் பார்த்துட்டு ஊர் மக்கள் பயந்து ஒதுங்கி விட்டார்கள்.
இந்தப் போராட்டத்தில் இப்போது அவருக்கு யாரும் ஆதரவு இல்லை. வீட்டில் குழந்தைகள் வேறு வேலை இல்லையா என்று திட்டுகிறார்கள். இரண்டு பையன்கள் படித்து வேலை பார்க்கிறார்கள்.
இரவு முழுவதும் பேருந்து பயணம் செய்து காலையில் தெருவோர குழாயில் குளித்து தயாராகி, அரசு அலுவலகத்துக்குப் போவதற்கான மிடுக்குடன் தயாராகியிருந்தார். கீழே வருகைப் பதிவில் பெயர் எழுதி கையெழுத்து போடச் சொல்லி விட்டு முதல் மாடிக்குப் போனோம். காத்திருக்கும் பகுதி நவீனமாக வசதியான நாற்காலிகள் போடப்பட்டு விசாலமாக இருந்தது. மேலே மின்விசிறி, குடிதண்ணீருக்கு பிளாஸ்டிக் பாட்டில் டிஸ்பென்சர் என்று இருந்தது. முன்பே வந்திருந்தவர்கள் உட்கார்ந்திருந்தார்கள்.
அழைப்பு வந்த கடிதத்தை வாங்கிப் பார்த்தேன். ‘நீங்கள் தகவல் கேட்ட மனுவுக்கு தவறான தகவல் தந்தது குறித்த விசாரணைக்கு தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு வரவும்’ என்று கடிதம். ’10.30க்கு விசாரணை. அரை மணி நேரத்துக்கு முன்பாகவே வந்து விட வேண்டும்.’ அலுவலக உதவியாளர் வந்து வருகை பதிவு செய்து கொண்டு, படிவத்தை நிரப்பி வைத்துக் கொள்ளச் சொன்னார். செல்பேசியை அணைத்து விட வேண்டும்.
அவரது ஆவணங்களைப் பார்த்ததில் தகவல் மனுவில் கேட்ட கேள்விகளில் இரண்டு தவறான தகவல்கள்.
1. கிராமத்தில் தொண்டு நிறுவனம் எத்தனை வீடுகள் கட்டியிருக்கிறார்கள் என்ற கேள்விக்கு 50 வீடுகள் என்று பதில் சொல்லியிருந்தார்கள். உண்மையில் 23 வீடுகள்தான் கட்டப்பட்டிருந்தன. இன்னொரு ஆவணத்தில் அந்த தகவல் வந்திருந்தது.
2. வீடுகளுக்கு காப்பீடு செய்யப்பட்டது என்று தகவல். நிரந்தர வீடுகளுக்கு காப்பீடு கட்டாயமாக செய்யப்பட வேண்டும் என்று அரசாணை இருக்கிறது. ஆனால் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட வீட்டுக்கு இழப்புத் தொகை தரவில்லை. கேட்டால் சுனாமிக்கு மட்டும்தான் காப்பீடாம்.
மீனவர்களுக்கு கட்டுமரம் நிவாரணம் வழங்குவதில் பொய்யான பெயர்களைச் சேர்த்து கணக்கு காட்டியிருக்கிறார்கள். ஒரே ஆளுக்கு இரண்டு மூன்று தடவை நிவாரணம் அளித்திருக்கிறார்கள் என்பது இன்னொரு குற்றச்சாட்டு. ‘இதைச் சொல்ல முடியாது, இந்த விசாரணையில் தவறான தகவல் கொடுத்ததை மட்டும்தான் பேச முடியும்’.
சரியாக 10.30க்கு அழைத்து விட்டார்கள். விசாரணைக் கூடம் 1க்குள் போக வேண்டும். உள்ளேயிருந்து ஒரு அம்மா வந்து ஊரிலிருந்து வந்திருந்த அதிகாரிகளுடன் பேசி உட்கார வைத்தார். நானும் கனகசபையும் நின்று கொண்டிருந்தோம். உயரமாக, 50 வயதுகளில் ஆணையர், விசாரணை கூடத்துக்கு உள்ளே போயிருந்தார். எவ்வளவு நேரம் நிற்பது போய் உட்காரலாம் என்று நாற்காலிக்குப் போனதும் அழைத்தார்கள்.
முதலில் நாங்கள் இரண்டு பேரும் போனோம். மேடை போன்ற இடத்தில் உயரமான இருக்கையில் ஆணையர். கீழே இரண்டு பக்கமும் நாற்காலிகள், நடுவில் குறிப்பெடுப்பவரின் இருக்கை. ஆணையருக்கு வலது புறம் வாதிகள், நாங்கள் இரண்டு பேரும் போய் உட்கார்ந்தோம். இடது புறத்தில் பதில் சொல்ல மூன்று அரசு அதிகாரிகளும் வந்தார்கள். ஒருவர் முதலில் பார்த்த குள்ளமான சிவப்பான இளைஞர், இன்னொருவர் திராவிட கறுப்பில் ஒல்லியாக நடுத்தர வயதினர். இன்னொருவர் குண்டான ஒரு அம்மா.
‘சொல்லுங்க‘ என்று எங்கள் பக்கம் கேட்டார் ஆணையர்
‘ஐயா நிறைய முறைகேடு நடந்திருக்குங்க, பொய்யான தகவல்களை தந்திருக்காங்க‘ என்று ஆரம்பித்தார்.
‘அலிகேஷன் எல்லாம் சொல்லக் கூடாது. அப்படி எல்லாம் பேசினா வெளியேற்றி விடுவேன். என்ன தகவல் தவறு என்று மட்டும்தான் நான் விசாரிக்க முடியும். எந்த மனு குறித்து புகார் சொல்லப் போறீங்க என்று தெளிவா புரிஞ்சுக்கோங்க. சுனாமி நிவாரண பணிகளில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்தது என்று எனக்கும் தெரியும், ஆனால அதை எல்லாம் இங்கே விசாரிக்க முடியாது. தகவல் தருவதில் இருந்த தவறுகள் மட்டும்தான் விசாரணை. எந்த மனுவைப் பற்றி பேசுறீங்க? 21 கேள்விக்கான மனுதான் விசாரணைக்கு’ என்று ஒரு போடு போட்டார்.
‘சரிங்கய்யா, சரிங்கய்யா’ என்று கையெடுத்து கும்பிட்டார்.21 கேள்விகளுக்கு பதில் அனுப்பியிருந்த மனுவை எடுத்து கையில் கொடுத்தோம். முதல் கேள்விக்கு 50 வீடுகள் கட்டியிருப்பதாக தகவல்.
‘ஐயா, அது தவறுதலா ஆகிப் போச்சு. இன்னொரு சேவை நிறுவனம் கட்டிய வீடுகளின் எண்ணிக்கையை இவங்க கட்டினதா சொல்லிட்டோம். இதற்கு முன்பு இன்னொரு மனுவுக்கு சரியான தகவல் சொல்லியிருக்கிறோம்’ என்று அதைக் காட்டினார் சிவப்பாக குள்ளமாக இருந்தவர்.
‘என்னய்யா பேசுறீங்க, தவறா எப்படி தகவல் கொடுப்பீங்க. இங்க என்ன விளையாடிட்டு இருக்கீங்களா‘ என்று சரமாரியாக அவர்களைத் திட்டித் தீர்த்தார்.
கனகசபை ‘ஐயா இத்தோடு தொடர்புடையது, 4 வது விடையில்…’ என்று ஆரம்பித்ததும் முறைத்தார். நான் ஒவ்வொரு கேள்வியாகத்தான் பார்ப்பேன். இடையிடையே பேசக் கூடாது என்று ஒரு மிரட்டல். மாவட்டம் முழுவதும் 2173 வீடுகள்தான் கட்டியிருப்பதாக தகவல் கொடுத்திருந்தார்கள். ஆனால், தொண்டு நிறுவனம் 3500 வீடுகள் கட்டியதாக பலகை வைத்திருக்கிறார்கள். இந்த நூலைப் பிடித்துக் கொண்டு இழுத்தால் அந்த விவகாரமும் வெளியில் வரும் என்பதைச் சொல்ல விடவில்லை.
அடுத்த கேள்வி காப்பீடு குறித்து, ‘காப்பீடு இருக்கிறது என்று பதில். அது சரிதானா? சரி என்றால் காப்பீடு செய்த விபரங்கள் காண்பியுங்கள்’ என்று அதிகாரிகளைக் கேட்க கொண்டு வந்திருக்கவில்லை.
‘மூணு பேர் எதுக்குய்யா வந்தீங்க, இங்க கத்திரிக்கா விளையுதுன்னு பறிச்சுட்டுப் போக வந்தீங்களா? பேப்பர்ஸ் இல்லாம ஏன் வந்தீங்க’ என்று காய்ச்சி எடுத்தார்.’அலுவலகத்தில் இருக்கிறது, தொண்டு நிறுவனத்திடம் இருக்கிறது‘ என்று சமாதானம்.
கனகசபை வேதாரண்யத்திலிருந்து நாகப்பட்டினம் வந்து பேருந்து பிடித்து இரவு முழுவதும் பயணம் செய்து காலையில் கார்பொரேசன் குழாயில் குளித்து விட்டு பை நிறைய ஆவணங்களோடு வந்திருக்கிறார். பயணச்செலவுக்கு லாரி ஓட்டி சம்பாதித்த காசை செலவழிக்கிறார். இந்த மூன்று அதிகாரிகளும் அரசு செலவில் பயணப்படி, தங்கும் செலவு வாங்கிக் கொண்டு கையில் ஒரே ஒரு தாளுடன் நிற்கிறார்கள். தொடர்புடைய ஆவணங்கள் எதுவும் இல்லை.
‘மூணுபேர் எதுக்குய்யா வந்தீங்க! மூணு பேர் ஏன் வந்தீங்கன்னு சொல்லுங்க’ என்று இன்னொரு அதட்டல்.
தொண்டு நிறுவனங்கள் கட்டும் வீடுகளுக்கு காப்பீடு கட்டாயம் வேண்டும் என்று அரசாணை இருப்பதாக பின்னால் ஒரு பதில் இருந்தது. ஆனால், தீ விபத்துக்குள்ளான வீடுகளுக்கு இழப்பீடு வழங்கவில்லை. ஏனென்றால் காப்பீடு சுனாமிக்கும் நிலநடுக்கத்துக்கும் மட்டும்தான், தீவிபத்துக்கு இல்லை.
‘உங்களுக்கு இன்சூரன்ஸ் என்றால் என்னவென்று தெரியுமா குறிப்பிட்ட நிகழ்வுக்குத்தான் இன்சூரன்ஸ் எல்லாத்துக்கு இன்சூரன்ஸ் செய்ய முடியாது’ என்று கனகசபைக்கு ஒரு மிரட்டல்.
அரசாணைப் படி முழுமையான காப்பீடு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதைப் பேச தயாராக இல்லை. ‘காப்பீடு விண்கல் தாக்குவதற்கு மட்டும்தான் என்று செய்திருந்தால் இன்னும் செலவு குறைந்திருக்கும்’ என்று அடுத்த தடவைக்கு யாராவது தொண்டு நிறுவனத்துக்கு ஆலோசனை சொல்ல வேண்டும்.
வரிசையாக ஒவ்வொரு கேள்வியாக டிக் அடித்துக் கொண்டே வந்தார். ‘மேல் முறையீடு விபரங்கள் இல்லை. மேல் முறையீடு செய்து விட்டுதான் நீங்க வந்திருக்க வேண்டும்‘ என்று ஒரு மிரட்டல். கடைசியில் சுனாமி நடந்த தேதியில் ஆணையராக இருந்தது யார் என்ற கேள்விக்கு பதில் சொல்லியிருக்கவில்லை.
‘சரி, நீங்க வந்தீங்க! இந்த இன்சூரன்சு தொடர்பான பேப்பர்களை அவங்க ஆபிசில் போய் பார்க்க அனுமதி தரச் சொல்லி உத்தரவு போடுகிறேன். அதுக்கு காசு எதுவும் கொடுக்க வேண்டாம். என்றைக்குப் போக முடியும்’. எழுத்தரை நோக்கி, ‘இந்தாம்மா எழுதிக்கோ, இனம் 4ல் குறிப்பிட்ட இன்சூரன்சு தொடர்பான பேப்பர்களைப் போய்ப் பார்க்க மனுதாரருக்கு வசதி செய்து கொடுக்க வேண்டும். இனம் 19ல் கேட்கபட்ட ஆணையரின் பெயரை தெரிவிக்க வேண்டும். இந்த லெட்டர் உங்களுக்கு வந்து விடும். போய்ப் பாருங்க’
‘ஐயா, கட்டிய வீடுகளின் எண்ணிக்கையை தவறாக சொன்னது குறித்து எதுவும் ஆர்டர் இல்லையா’
‘அதுதான் சொல்லிட்டாங்களே, தப்பாக் கொடுத்துட்டோம் என்று. இன்னொரு ஆவணத்தில் சரியா சொல்லியிருக்காங்க. இல்லைன்னா அவங்களை காய்ச்சி எடுத்திருக்கலாம்’
‘இல்லைங்கய்யா, முழுப்பூசணியை சோத்தில மறைக்கப் பார்க்கிறாங்க. மாவட்டம் முழுக்க பல நூறு வீடுகள் கட்டாமலேயே கட்டினதா கணக்குக் காட்டியிருக்காங்க. அதில் ஒரு பகுதிதான் இந்த கிராமத்தில் நடந்த விவகாரம். இதில் எப்படியாவது நியாயம் வேணும் அய்யா. இதன் மூலமா நீங்க ஒரு உத்தரவைப் போட்டு விஷயங்களை வெளியில் கொண்டு வர முடியாதா’
‘அதெல்லாம் முடியாதுங்க! சுனாமியில எவன் எவன் எவ்வளவு அடிச்சான்னு எனக்கே தெரியும். நானும் அந்த மாவட்டத்துக்காரன்தான். ஒரு ஐஏஎஸ் அதிகாரி, பேர் சொல்ல மாட்டேன், மாவட்ட அதிகாரியா இருந்தார் என்று கூடச் சொல்கிறேன், முடிஞ்சா கண்டு பிடிச்சுக்கோ. சுனாமி நிவாரணத்தில் அடிச்ச பணத்தை வச்சு வடநாட்டில ஒரு மெடிக்கல் காலேஜே கட்டி விட்டான். அதுக்கு நாம என்ன செய்ய முடியும். தகவல் அறியும் உரிமையில் தகவல் தெரிவிப்பதையும் அதில் நடந்த தவறுகளையும்தான் விசாரிக்க முடியும். சமூகத்தையே திருத்தி விட முடியாது’
‘இதை நான் விடப் போவதில்லை சார். எப்படியாவது ஒரு முடிவு காணாம விடப்போவதில்லை’ என்று சொல்லி விட்டு கனகசபை மாலை பேருந்தை பிடித்து ஊர் திரும்ப தயாராகிறார். அது வரை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் படுத்து ஓய்வெடுத்துக் கொள்ளலாம். வெளியில் வந்து அவருக்கு ஒரு காபி வாங்கிக் கொடுத்து விட்டு வரும் போது மூன்று மாவட்ட அதிகாரிகளும் அலுவலகத்திலிருந்து வெளியில் வந்து ஆட்டோ ஒன்றில் ஏறுகிறார்கள். பெண் அதிகாரியை அழைத்துப் போக இரு சக்கர வண்டியில் ஒருவர் வந்திருக்கிறார். மாநகரில் செய்ய வேண்டிய மற்ற பணிகளை முடித்து விட்டு அவர்களும் மாலை அல்லது அடுத்த நாள் முன்பதிவு செய்யப்பட்ட, ரயில் பயணத்தை மேற்கொண்டு ஊர் திரும்பி விடலாம்.தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்காக புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஆணையர் அலுவலகம் மௌன சாட்சியாக நின்று கொண்டிருக்கிறது.
( பாதுகாப்பு காரணமாக பெயர், ஊர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.)
____________________________________________
- வினவு செய்தியாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக