சனி, 7 ஜனவரி, 2012

பெரியார், அண்ணா, கலைஞருக்குப் பிறகு கனிமொழிக்கு மட்டுமே கழகத்தினர் Happy birhtday

முன்பெல்லாம் கனிமொழியின் பிறந்தநாள் தேதிகூட கட்சியின் நிர்வாகிகளுக்குத் தெரியாது. ஆனால், இன்றோ நிலைமை தலைகீழாகியிருக்கிறது.
பெரியார், அண்ணா, கருணாநிதி வரிசையில் கனிமொழியும் இடம்பிடித்துவிட்டார். கனிமொழியின் பிறந்தநாளை வியாழனன்று தமிழகம் முழுவதும் தடபுடலாக கொண்டாடி அசத்தியிருக்கிறார்கள் உடன்பிறப்புகள்!
வழக்கமாக கருணாநிதியின் பிறந்த நாளுக்கு மட்டுமே தொண்டர்கள் திரண்டுவந்து வாழ்த்துச் சொல்வார்கள். கடந்த தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்பு கருணாநிதிக்கு இணையாக அவரது பிறந்தநாளை வட மாவட்டத் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். அதேபோல், அழகிரியின் பிறந்த நாளை தென் மாவட்டத்தில் உள்ள உடன்பிறப்புகள் கொண்டாடி வருகின்றனர். இந்த கொண்டாட்டங்களை எல்லாம் விஞ்சும் வகையில் இப்போது கனிமொழியின் பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார்கள் உடன்பிறப்புகள். திகார் ஜெயிலில் இருந்து சென்னை திரும்பிய கனிமொழிக்கு பல்வேறு பட்டங்கள் வழங்கி உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. கருணாநிதி மட்டுமல்லாது ஒட்டுமொத்த கோபாலபுரமே சென்று அவரை விமான நிலையத்தில் வரவேற்றது. இதனைத் தொடர்ந்து கனிமொழிக்கு கட்சியில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்; மாநில அளவில் பொறுப்புகள் கொடுக்க வேண்டும் என்று அவரது தாயார் ராசாத்தி அம்மாள் கருணாநிதியை வலியுறுத்தத் தொடங்கினார். இது குடும்பத்துக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில்தான் எப்போதும் இல்லாத அளவிற்கு பிறந்த நாளை தமிழகம் முழுவதும் கொண்டாடியிருக்கிறார்கள்.

இது குறித்து ராசாத்தி அம்மாளுக்கு நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் ஆண்டுதோறும் கனிமொழி பிறந்தநாளை அந்த மாவட்டத்தில் கொண்டாடுவார்கள். அவர்கள் பலர் இப்போது சென்னைக்கு வந்துவிட்டனர். இந்த ஆண்டு சென்னையில் கனிமொழி பிறந்த நாளை கொண்டாட வேண்டும் என்று நினைத்து ராசாத்தி அம்மாளை அணுகினார்கள். அவரும் பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் கொண்டாட சம்மதித்தார். இதுகுறித்து போஸ்டர், அழைப்பிதழ் அடித்தபோது, வட சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.டி.சேகர் ‘என்னுடைய பெயரைப் போடக்கூடாது. நான் வர மாட்டேன்’ என்று சொல்லிவிட்டார். இதையடுத்து அவர் பெயர் போடாமல் அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டது. இதை சிலர் பிரச்னையாக்கிவிட்டார்கள். கருணாநிதி தலையிட்ட பின்னரே அவர்கள் விழாவை நடத்த சம்மதித்தார்கள்’’ என்று கூறினர்.

தி.மு.க. புள்ளிகள் சிலரிடம் கேட்டபோது, ‘கனிமொழிக்கு கட்சியிலும் அரசியலிலும் முக்கியத்துவம் கிடைக்க வேண்டும் என்று அவர் தாயார் விரும்புகிறார். அவர் பின்னணியில்தான் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடந்தது. அவர்கள் ஸ்டாலின் பெயரையோ, கட்சியின் மாநில நிர்வாகிகள் பெயரையோ போடாமல் அழைப்பிதழ் அச்சிட்டுவிட்டார்கள். இது ஸ்டாலின் தரப்புக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் அவர்கள் விழாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தது உண்மைதான். இந்த கொண்டாட்டத்தை கோபாலபுரம் வீட்டினர் யாரும் விரும்பவில்லை. பின்னர் தலைவர் தலையிட்டு பேசினார். அழைப்பிதழில் ஸ்டாலின் பெயரைப் போட வேண்டும் என்று அவர் சொன்னதை ஏற்றுக் கொண்டனர். கூடவே பேராசிரியர் பெயரையும் இணைத்துக் கொண்டனர். மாவட்டச் செயலாளர் சேகரை தலைவரே போனில் தொடர்பு கொண்டு விழாவை சிறப்பாக நடத்த உத்தரவிட்டுள்ளார்’’ என்றார்.

கனிமொழிக்கு கட்சியில் முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என்பதால்தான் கோபாலபுரத்து வீட்டினர் இது போன்ற தடங்கல்களை ஏற்படுத்துவதாக ராசாத்தி தரப்பு நினைக்கிறது. கோபாலபுரத்தைச் சேர்ந்தவர்களோ, ‘வழக்கில் சிக்கிய கனிமொழியால் கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்பட்டு இருக்கிறது. ஆளும் கட்சியில்கூட அவப்பெயருக்கு பயந்துதான் ஒரு குடும்பத்தினரையே ஒதுக்கி வைத்துள்ளார்கள். இதனால் அவர்கள் கட்சியின் ‘இமேஜ்’ மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கனிக்கு எந்த பதவி கொடுத்தாலும் மக்கள் விரும்ப மாட்டார்கள் அதனால்தான் வேண்டாம் என்று சொல்கிறோம்.’ என்று கருணாநிதியை வலியுறுத்துகிறார்களாம்.

உள்விவகாரங்கள் இப்படி ஒருபக்கம் இருக்க, சென்னை பாரிமுனையில் உள்ள ராஜாஅண்ணாமலை மன்றத்தில் நடந்த விழாவில், 50 லட்சம் வரை செலவு செய்து நலத்திட்ட உதவிகள் வழங்கி கட்சியினரையே ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்கள் கனி தரப்பினர். இப்படி கனிமொழி பிறந்தநாள் தமிழகத்தில் தடபுடலாக நடந்து கொண்டிருக்க, 2ஜி வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியிருந்ததால் பிறந்த நாளை டெல்லியில் கொண்டாடினார் கனிமொழி. சென்னையில் இருந்த அவரது மகன் ஆதி, அம்மாவிற்காக ஸ்பெஷலாக ஆர்டர் செய்து கேக் வாங்கிக்கொண்டு 4-ம் தேதி மாலை டெல்லி சென்றான். 5-ம் தேதி காலையில் கணவர் அரவிந்த், மகன் ஆதியுடன் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடிய கனிமொழிக்கு, கருணாநிதி, அழகிரி, ஸ்டாலின் உள்ளிட்டோர் தொலைபேசியில் வாழ்த்துத் தெரிவித்தனர். பின்பு 9.30 மணிக்கெல்லாம் பாட்டியாலா நீதிமன்றத்துக்கு கனிமொழி சென்றார். அங்கு ராசா, அவரது மனைவி, எம்.பி.ஹெலன் டேவிட்சன் உள்ளிட்டோர் வாழ்த்துக் கூறினர்.

‘‘பெரியார், அண்ணா, கலைஞருக்குப் பிறகு கழகத்தினர் தமிழகம் முழுவதும் பிறந்த நாள் கொண்டாடியது கனிமொழிக்கு மட்டுமே’’ என்று உற்சாகமாக கூறுகிறார்கள் உடன்பிறப்புகளில் ஒரு பிரிவினர்.

படங்கள்: ஞானமணி, கணேஷ்.
thanks kumudam +rahuman HCM City

கருத்துகள் இல்லை: