வியாழன், 5 ஜனவரி, 2012

சுப்பிரமணிய சாமி.. ப.சிதம்பரம் !சிபிஐ நீதிமன்றத்தில்..(சனிக்கிழமை


P Chidambaram and Subramanian Swamy
டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு எதிரான முக்கிய ஆவணங்களுக்கு மத்திய அரசின் சான்றிதழைப் பெற்றுள்ளார் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி. இந்த ஆவணங்களை வரும் சனிக்கிழமை அவர் சிபிஐ நீதிமன்றத்துக்கு தாக்கல் செய்யவுள்ளார். இதையடுத்து இந்த விவகாரத்தில் ப.சிதம்பரத்துக்கு பெரும் சிக்கல் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணை டெல்லி பாட்டியாலா ஹவுசில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் நடந்து வருகிறது. தற்போது இந்த வழக்கின் முக்கிய சாட்சியான ஆசீர்வாதம் ஆச்சாரியிடம் குறுக்கு விசாரணை நடந்து வருகிறது. முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவிடம் செயலாளராக பணியாற்றிய இவரை சிபிஐ தனது தரப்பு சாட்சியாக சேர்த்துள்ளது. ஆனால், இவர் சிபிஐ உருவாக்கிய பொய் சாட்சி என ராசா கூறி வருகிறார்.


இந் நிலையில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு அனைத்தும் பிரதமருக்கும், ப.சிதம்பரத்துக்கும் தெரிந்தே நடந்ததாக ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி குற்றம் சாட்டி வருகிறார். இது குறித்தும் ஆசீர்வாதம் ஆச்சாரியிடம் நீதிமன்றத்தில் கேள்வி கேட்கப்பட்டபோது, ஸ்பெக்ட்ரம் தொடர்பாக சிதம்பரத்துடன், ஆ.ராசா பேசினாரா என்று எனக்கு நினைவில்லை என்று பதிலளித்துள்ளார்.

இந் நிலையில் இந்த வழக்கில் ப.சிதம்பரத்தையும் சேர்க்க வேண்டும் என்று கோரி சிறப்பு நீதிமன்றத்தில் சுப்பிரமணிய சாமி மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் சிதம்பரத்துக்கு தொடர்புள்ளதை நிரூபிக்க முன்னாள் சிபிஐ இணை இயக்குனர் ஹிதேஷ் அவஸ்தி, முன்னாள் நிதித்துறைச் செயலாளர் சிந்துஸ்ரீ குல்லார் ஆகியோரையும் நீதிமன்றத்துக்கு விசாரணைக்கு அழைக்க வேண்டும் என்றும் சாமி கோரினார்.

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி சைனி, வழக்கில் ப.சிதம்பரத்துக்கு தொடர்பு இருப்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு சாமிக்கு உத்தரவிட்டார். ஆவணங்களை தாக்கல் செய்தால், அவஸ்தி, குல்லாருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க வேண்டியதில்லை என்றும் நீதிபதி கூறினார். (அதாவது, நேரடியாக சிதம்பரத்துக்கே சம்மன் அனுப்பிவிடலாம் என்பது தான் இதன் அர்த்தம்)

இதையேற்று சுப்பிரமணிய சாமி சில ஆவணங்களை நீதிமன்றத்தில் சமீபத்தில் தாக்கல் செய்தார்.

அதில் முக்கியமானது, ஸ்பெக்ட்ரத்தை அடிமாட்டு விலைக்கு ராசா விற்ற முயன்றபோது அப்போது நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் அதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மத்திய நிதியமைச்சகம் பிரதமர் அலுவலகத்துக்கு எழுதிய கடிதமும் அடங்கும். இந்தக் கடிதத்தை பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தார் இப்போதைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி. இந்தக் கடிதத்தின் நகலையும் சுப்பிரமணிய சாமி சேகரித்துவிட்டார்.

(13 பக்கம் கொண்ட இந்தத் கடிதத்தில், 2008ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி மிகக் குறைந்த விலைக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகளை ராசா மேற்கொண்டார். அதற்கு ஒரு நாள் முன்னதாகவே, ராசாவின் இந்தச் செயல் குறித்து எச்சரித்து சிதம்பரத்துக்கு நிதியமைச்சக அதிகாரி கடிதம் எழுதினார். அப்போது சிதம்பரம் நினைத்திருந்தால், ஸ்பெக்ட்ரம் மிகக் குறைவான விலைக்கு விற்கப்படுவதை தடுத்து நிறுத்தியிருக்கலாம்.)

இதையடுத்து இந்த ஆவணங்களின் அடிப்படையில் ப.சிதம்பரத்துக்கு சம்மன் அனுப்ப வேண்டும் என்று சுப்பிரமணிய சாமி கோரிக்கை விடுத்தார். ஆனால் அந்த ஆவணங்கள் சான்றிளிக்கப்பட (certification) வேண்டும். அத்தகைய அங்கீகரிப்பு இல்லாமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என்று நீதிபதி கூறிவிட்டார்.

இதையடுத்து இந்த ஆவணங்களுக்கு சான்றிதழ் பெறும் முயற்சிகளில் சுப்பிரமணிய சாமி ஈடுபட்டார். இந் நிலையில் அந்த ஆவணங்களுக்கு பிரதமர் அலுவலகமும், மத்திய நிதியமைச்சகமும் நேற்று சான்றிதழித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில், பிரதமர் அலுவலகத்துக்கு ப.சிதம்பரம் பற்றி பிரணாப் முகர்ஜியின் அலுவலகம் எழுதிய கடிதமும் அடங்கும்.

மேலும் ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக கடந்த 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை ப.சிதம்பரமும்- ராசாவும் 5 முறை சந்தித்துப் பேசியபோது நடந்த உரையாடல் குறிப்புகளுக்கும் சான்று கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த உரையாடல் குறிப்புகளில், 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் ஒதுக்கீடுகளை 7 ஆண்டுக்கு முந்தைய விலையில் கொடுக்க ப.சிதம்பரம், ராசா இருவரும் சம்மதித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த குறிப்புகளுக்கும் மத்திய அரசிடம் சுப்பிரமணிய சாமி சான்றிதழ் பெற்றிருப்பது ப.சிதம்பரத்துக்கு கடும் சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

மேலுமந், ராசாவின் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முடிவை ஏற்க வேண்டாம் என்று நிதியமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் ப.சிதம்பரத்தை அறிவுறுத்தி இருந்தார்.
அவரது எச்சரிக்கை குறிப்பு தொடர்பான ஆவணத்தையும் சுப்பிரமணிய சாமி சேகரித்திருந்தார். அந்த ஆவணத்துக்கும் மத்திய அரசிடம் அவர் சான்றிதழ் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

இவ்வாறு அங்கீகாரம் அளிக்கப்பட்ட இந்த ஆவணங்களை நாளை மறுநாள் (சனிக்கிழமை) சிபிஐ நீதிமன்றத்தில் சுப்பிரமணிய சாமி தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அன்றே சிதம்பரத்துக்கு எதிரான தனது வாதத்தையும் சாமி நிறைவு செய்யவுள்ளார்.

அதன் பிறகு இந்த விவகாரத்தில் நீதிபதி சைனி தனது தீர்ப்பை வெளியிடுவார். சுப்பிரமணிய சாமியின் இந்த புதிய ஆவண தொகுப்பு ப.சிதம்பரத்துக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.

கருத்துகள் இல்லை: