திங்கள், 2 ஜனவரி, 2012

விரைவில் Indian bullet train புல்லட் ரயில்

ஒரு மணி நேரத்தில் 300 கி.மீ., தூரத்தை, அசுர வேகத்தில் கடக்கும் அதிவேக புல்லட் ரயில்களை அறிமுகப்படுத்த தேவையான நடவடிக்கைகளை, ரயில்வே அமைச்சகம் முடுக்கி விட்டுள்ளது. முதற்கட்டமாக மும்பை - புனே - ஆமதாபாத் வழித்தடம் தேர்வாகி, அதற்கான ஏற்பாடுகள் துவங்கவுள்ளன.


இந்தியாவிலும்  புல்லட் ரயில் சேவைக்கு இறுதி வடிவம் நெருங்கியுள்ளது. இதற்கான அமைச்சரவை குறிப்பை (கேபினட் நோட்) ரயில்வே ஆணையம் தயாரித்துள்ளது. வெகு விரைவில் இந்த குறிப்பு, மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும்.

முதல்கட்டமாக என்ன? இதன்படி முதல்கட்டமாக, டில்லி - சண்டிகர் - அமிர்தசரஸ், புனே - மும்பை - ஆமதாபாத், ஐதராபாத் - சென்னை, ஹவுரா - ஹால்தியா, சென்னை - பெங்களூரு - கோயம்புத்தூர் - எர்ணாகுளம் - திருவனந்தபுரம், டில்லி - ஆக்ரா - லக்னோ - வாரணாசி - பாட்னா என, ஆறு வழித்தடங்கள் தேர்வு செய்யப்பட்டு, ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், தற்போது மும்பை - புனே - ஆமதாபாத் வழித்தடம் முதல்கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதன் அறிக்கை முழுவதுமாக தயாராகியுள்ளது. எனவே, இதற்கான ஏற்பாடுகள் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளன. 530 கி.மீ., தூர தனிபாதைக்காக 53 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்படும். இந்த திட்டச் செலவை, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநில அரசுகள் பங்கிடவுள்ளன. ஒரு கி.மீ., பாதையை அமைக்க மட்டும் 100 கோடி ரூபாய் வரை செலவிடப்படும்.

தனி அதிகார ஆணையம்: மெட்ரோ ரயில் சேவைக்காக தனி கார்ப்பரேஷனை ஏற்படுத்தியது போல, புல்லட் ரயில் சேவைக்கு என்றே தனி அதிகார ஆணையத்தை ஏற்படுத்தவும் முடிவெடுத்துள்ளது. புல்லட் ரயில் அமைப்பதற்கான பணிகளை முழுவதுமாக அரசே ஏற்று நடத்துவதா அல்லது தனியாருடன் இணைந்து செயல்படுவதா என்பதையெல்லாம், இந்த அதிகார ஆணையமே முடிவு செய்யும். இரண்டாம் கட்டமாக, ஐதராபாத் - விஜயவாடா - சென்னை வழித்தடத்திற்கான ஆய்வறிக்கை தயார் செய்யும் பணிகள் முடுக்கி விடப்படவுள்ளன.

ஜப்பான் நிதியுதவி: புல்லட் ரயில் திட்டத்திற்கான செலவில் பாதியை, சம்பந்தப்பட்ட மாநிலங்கள் ஏற்கவுள்ளன. மொத்தத் திட்டத்தில் ஏறத்தாழ 80 சதவீதம் வரை, ஜப்பான் நாட்டிடம் இருந்து நிதியுதவி பெற்று நிறைவேற்றவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் டில்லி வந்திருந்த ஜப்பான் நாட்டு பிரதமரை, ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி சந்தித்துப் பேசிய போது, இந்த புல்லட் ரயில் திட்டம் பற்றித் தான் ஆலோசனை நடத்தியுள்ளார். தவிர, கடந்த நவம்பர் மாதமே ஜப்பான் தொழில்நுட்ப வல்லுனர்களும் டில்லி வந்து புல்லட் ரயில் திட்டம் குறித்து, தனியாக அமைச்சர் தினேஷ் திரிவேதிக்கு விளக்கம் அளித்துள்ளனர். ஏறத்தாழ 3,800 கி.மீ., தூரத்திற்கு புல்லட் ரயில் போக்குவரத்து அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. புல்லட் ரயில் திட்டம் குறித்து, புத்தாண்டு பிறந்த ஜனவரி மாதத்தில் முறைப்படியான அறிவிப்பு வெளியாகும்.

புல் முளைத்து விடும்: வடக்கில் இருந்து இயக்கப்படும் நிறைய ரயில்களை தமிழகத்துக்கு என, பெயரளவில் வைத்துக் கொண்டு, அப்படியே கோவை மார்க்கமாக கேரளாவுக்குள் கொண்டு சென்று, அம்மாநில மக்கள் முழுவதுமாக பயன் பெறும் வகையில் செய்து விடுகின்றனர். ஆனால், தமிழகத்திலோ திருச்சி, மதுரை, நெல்லை என, பெரும்பாலான பகுதிகள் புறக்கணிக்கப்படுகின்றன. அடுத்ததாக கோரிக்கை மனுக்களை நீட்ட வேண்டுமானால் செய்யலாம். ஆனால், உள்ள ரயில்களுக்கே தமிழகத்தில் ஒற்றையடிப்பாதை தான், இரட்டைப்பாதை கூட இல்லை. சதாப்தி, ராஜ்தானிக்கே வழியில்லை. இதில், புல்லட் ரயில் குறித்து புரிந்து கொள்வதற்குள் புல் முளைத்து விடும்.

மும்பை - ஆமதாபாத் 112 நிமிடத்தில் போகலாம்: எங்கேயும் நிற்காத துரந்தோ ரயில், மும்பையிலிருந்து கிளம்பி ஆமதாபாத்தை அடைய ஆறரை மணி நேரமாகிறது. புனேவுக்கு மூன்று மணி நேரமாகிறது. ஆனால், புல்லட் ரயில் மூலம் மும்பையிலிருந்து ஆமதாபாத்தை வெறும் ஒரு மணி, 52 நிமிடங்களில் அடையலாம்; புனேவுக்கு 40 நிமிடங்களில் செல்லலாம்.

- நமது டில்லி நிருபர்

கருத்துகள் இல்லை: