திங்கள், 2 ஜனவரி, 2012

முஸ்லீம் கட்சிகளை ஆதரிப்பதைவிட திராவிட கட்சிகளை ஆதரிப்பதில் தீவிரம்

தமிழ்நாட்டில் முஸ்லீம் கட்சிகள் வளரவே இல்லை!ஏன்?


தமிழ்நாட்டில் நிறைய முஸ்லீம்கள் இருந்தும் முஸ்லீம் கட்சிகள் வளரவே இல்லை. கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் முஸ்லீ்ம் கட்சிகள் பலமாக இருக்கினறன?
-எஸ். ஜமால், மதுரை.
கேரளா போன்ற மாநிலங்களில் முஸ்லீம் கட்சிகள் எந்த அளவிற்கு வளர்ந்திருக்கிறதோ, அந்த அளவிற்கு ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க போன்ற இஸ்லாமியர் விரோதக் கட்சிகளும், இஸ்லாமியர் மீதான காழ்ப்புணர்ச்சி, வன்முறையும் வளர்ந்திருக்கிறது.
தமிழ்நாட்டில் தந்தை பெரியாரின் பகுத்தறிவு பிரச்சாரத்தின் காரணமாக, இந்துக்கள் மத்தியில் இந்து தீவிரவாத உணர்வு மழுங்கடிக்கப்பட்டது. இஸ்லாமியர்களை தங்கள் நேசத்திற்குரியவர்களாக பார்க்க, திராவிட இயக்கத்தின் சிறுபான்மை ஆதரவு நிலைபாடும் காரணமாக இருந்தது,

அதன் விளைவாகத்தான் மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் இஸ்லாமியர்கள் மீதான மதவாத வன்முறை மிக மிக குறைவு. அதன்பொருட்டே முஸ்லீம்கள் தங்கள் மத உணர்வையும், அரசியலையும் வேறு வேறாக பார்த்தார்கள். அதனால்தான் முஸ்லீம் கட்சிகளை ஆதரிப்பதைவிட திராவிட கட்சிகளை ஆதரிப்பதில் தீவிரம் காட்டினார்கள்.
திமுகவின் சந்தர்ப்பவாத அரசியல் காரணமாக, பி.ஜே.பி ஆதரவு, கோவை குண்டு வெடிப்பை தொடர்ந்து ஒட்டு மொத்த இஸ்லாமியர் மீதான நடவடிக்கை போன்ற கசப்பான சம்பவங்கள் நடந்திருந்தாலும், தங்கள் மத உணர்வுக்கு எந்த வகையில் முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ, அதுபோலவே தாங்கள் சார்ந்த கட்சியின் தலைமைக்கும் முக்கியத்துவம் கொடுத்தார்கள்.
குறிப்பாக திமுகவில் இருக்கிற இஸ்லாமியர்கள் கலைஞரை தங்கள் குடும்ப உறுப்பினரைப் போலவே கருதினார்கள். கருதுகிறார்கள்.
இஸ்லாமியர்கள் மத சார்பற்ற சக்திகளின் பின்னால் அணிதிரண்டால்தான் இந்து தீவிரவாதத்தை எதிர்கொள்ள முடியும். அவர்கள் தேர்தல் அரசியலைத் தாண்டி முற்போக்காளர்களோடு கை கோர்ப்பதுதான் சிறந்தது.
அந்த வகையில் தமிழக இஸ்லாமியிர்கள் தங்களை திராவிட இயக்கத்தவர்களாக, தமிழர்களாக அடையாளப்படுத்திக் கொள்வது பாராட்டப்படக் கூடியது.

கருத்துகள் இல்லை: