முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து தற்போது மத்திய அரசு எடுத்துள்ள முடிவு தமிழகத்துக்கு ஓரளவு ஆறுதலை தந்துள்ளது.முல்லைப் பெரியாறு அணையில் ஏதேனும் பிரச்னை திடீரென்று ஏற்பட்டால், அதை சமாளிக்க மத்திய அரசின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (என்.டி.எம்.ஏ.) அவசர கால நடவடிக்கை திட்டத்தை உருவாக்க நிபுணர் குழு அமைக்க உத்தரவிட்டது. கேரள அரசின் மனுவின் பேரில் இந்த குழு அமைக்கப்பட்டது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட அதிகாரக் குழு உச்ச நீதிமன்றத்தில் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் வரையில் இந்த நிபுணர் குழு அமைப்பதை நிறுத்தி வைத்து, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் சில தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டது. முல்லைப்பெரியாறு விஷயத்தில் மவுனம் காத்து வந்த மத்திய அரசு, குறைந்தபட்சம், முதல்வர் ஜெயலலிதா மற்றும் தலைவர்களின் குரலுக்கு செவிசாய்த்து, இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுத்து, குழு அமைப்பதை தடுத்து நிறுத்தியது கண்டிப்பாக முதல் வெற்றி தான். கேரளாவின் தந்திரம் ஒரு நதியில் அணை கட்ட வேண்டும் என்றால் அந்த அணை கட்டப்படும் இடத்துக்கு மேல் பகுதியில் (அப்பர் ஸ்ட்ரீம்) இருக்கும் மாநிலம், நாடு மற்றும் கீழ்பகுதியில் (டவுன் ஸ்ட்ரீம்) இருக்கும் மாநிலம், நாடு ஆகியவற்றின் அனுமதியை பெற வேண்டும். அணை கட்டப்படும் நதியினால் குடிநீர் வசதி பெறும் மக்கள், பாசன வசதி பெறும் விவசாயிகள் நலனைக் காக்கவே இந்த ஏற்பாடு. ஐ.நா.சபையில் ஏற்கப்பட்ட ‘ஹெல்சிங்கி’ தீர்மானமும் இதை வலியுறுத்துகிறது. முல்லைப் பெரியாறில் புதிய அணையை கேரளா கட்ட வேண்டும் என்றால், தமிழக அரசு, மத்திய அரசு, உச்ச நீதிமன்றம் மற்றும் சுற்றுச்சூழல் துறை உட்பட 3 உயர்நிலை குழுக்கள் ஆகியவற்றின் அனுமதியை பெற வேண்டும். கேரள அரசு இந்த அனுமதி எதையும் பெறவில்லை. பெறவும் முடியவில்லை.
புதிய அணை கட்டுவதற்கு தமிழக அரசு, மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தின் அனுமதியை பெற பிரதமர் உதவ வேண்டும் என்று கேரள அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதுபற்றிய தகவல் கேரள அரசு தயாரித்த புதிய அணை வரைவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இடுக்கி அணை கட்டப்பட்ட பிறகு அந்த அணைக்கு தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டும் என்பதால் முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டு 100 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. அணை பலவீனமாக உள்ளது என்ற வாதத்தை முன்வைத்து அணையின் நீர்மட்டத்தை 152 அடியிலிருந்து 136 அடியாகக் குறைத்தது. பழைய அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட அப்போது யோசனை தெரிவித்தது. மத்திய நீர் வள ஆணையம் பல்வேறு அம்சங்களை பரிசீலனை செய்து பார்த்ததில் பெரியாறு புலிகள் சரணாலயப் பகுதியில் பாறைகள் கடினமாக இல்லாமல் லேசாக இருந்ததால் புதிய அணை கட்டும் வாய்ப்பு இல்லை என்பதை உறுதி செய்தது. இதை கேரள அரசும் தமிழக அரசும் மத்திய அரசும் ஏற்று கையெழுத்திட்டுள்ளன. இதையடுத்து, அணையை மூன்று கட்டங்களாக புதுப்பிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அவசரகால நடவடிக்கை, இடைக்கால நடவடிக்கை, நீண்ட கால நடவடிக்கை என்று மூன்று கட்டங்களாக அணையை பலப்படுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, அணை வலுப்படுத்தப்பட்டது. 2006ம் ஆண்டு தீர்ப்பு மூலம் உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. இதை எல்லாம் மூடிமறைத்துவிட்டு, மக்கள் பாதுகாப்புக்காக புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரளா பிடிவாதம் பிடித்து வருகிறது. தென் தமிழக மக்களின் வாழ்வாதார உரிமையை முடக்கிவிட்டு தண்ணீரை திசை திருப்பி கொண்டு செல்லவே இந்த நடவடிக்கையை கேரளா மேற்கொண்டுள்ளது. கேரள அரசியல்வாதிகளின் தொடர் பிரசாரத்தால் கடந்த 32 ஆண்டுகளாக தமிழக மக்களின் ஜீவாதார உரிமை மறுக்கப்பட்டுள்ளது. புதிய அணை கட்ட அனுமதி கிடைக்காது என்பதால், குறுக்கு வழியில் சென்று தனது எண்ணத்தை நிறைவேற்ற முயற்சி மேற்கொண்டுள்ளது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் என்பது பிரதமர் தலைமையில் துணைத் தலைவர் மற்றும் 8 உறுப்பினர்களைக் கொண்டது. இந்த 8 உறுப்பினர்களின் தலைமையில் தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டு இயற்கை மற்றும் செயற்கை பேரிடர்களை சமாளிப்பது, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது பற்றி முடிவு செய்யப்படும். இந்த குழு பரிந்துரை செய்தால் அந்த திட்டத்தை கண்டிப்பாக மத்திய அரசும், மாநில அரசுகளும் நிறைவேற்ற வேண்டும். அதை யாரும் தடுக்க முடியாது. அந்த அளவுக்கு அதற்கு சட்ட அந்தஸ்து தரப்பட்டுள்ளது. இதனிடம் பல ஆயிரம் கோடி நிதி (ரிசர்வ் பன்ட்) உள்ளது. திட்டத்தை செயல்படுத்த இதுவே நிதி ஒதுக்கீடு செய்யலாம். இதை குறுக்கு வழியில் பெறவே கேரளா முயற்சி மேற்கொண்டுள்ளது. அணை உடையும் இதனால் மக்களின் உயிர், உடைமைகளுக்கு ஆபத்து என்று 32 ஆண்டுகளாக கூறி வருகிறீர்களே, அப்படி ஒரு விபத்து நடந்தால் அதை சமாளிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அண்மையில் கேரள உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு கேரள அரசு தலைமை வழக்கறிஞர் அளித்த பதிலில் அணை உடைந்தால் பெரிய ஆபத்து ஏதும் ஏற்படாது. அணையிலிருந்து வெளியேறும் தண்ணீர் மலைகளுக்கு நடுவே ஓடி இறுதியில் இடுக்கி அணைக்குதான் வரும். அந்த தண்ணீரை தாங்கும் திறன் இடுக்கி அணைக்கு உள்ளது என்று பதிலளித்துள்ளார். உயர் நீதிமன்றம் கேட்ட கேள்வியை அடிப்படையாகக் கொண்டு ஒரு அறிக்கையை தயாரித்து பிரதமர் தலைமையிலான தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திடம் கேரளா சமர்ப்பித்தது. அதன் அடிப்படையில் தமிழக அரசின் கருத்தை கேட்காமல் அவசரகால நடவடிக்கை திட்டம் தயாரிக்க நிபுணர் குழுவை நியமிக்க ஆணையம் முடிவு செய்தது. உச்சநீதிமன்றம் நியமித்த நீதிபதி ஆனந்த் தலைமையிலான அதிகாரமிக்க குழுவின் அறிக்கையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியை கேரளா மேற்கொண்டது. உரிய நேரத்தில் தமிழக மக்களின் கடும் எதிர்ப்பு மற்றும் அரசின் முயற்சியால் அது தடுத்து நிறுத்தப்பட்டது. முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் குழுவிடம் கடந்த செப்டம்பரில் கேரள அரசு கொடுத்துள்ளது. அதில், பக்கம் 37-ல் பெரியாறு நதியைப் பொறுத்த வரையில் இது, மாநிலங்களுக்கு இடையில் ஓடும் நதி அல்ல. முழுக்கமுழுக்க கேரளாவில் ஓடும் நதிதான். இதனால், இந்த நதியின் தண்ணீரில் தமிழ்நாட்டுக்கு எந்த உரிமையையும் இல்லை. நீர்பிடிப்பு பகுதி முழுவதும் கேரள மாநிலத்தில் தான் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. அதேபோல், பக்கம் 23-ல் திட்டத்தில் மாநிலங்களுக்கு இடையிலான அம்சங்கள் என்ற பகுதியில், சி-பிரிவில் தண்ணீர் இருப்பதைப் பொறுத்து தான் தமிழகத்துக்கு கொடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது. மாநிலங்களுக்கு இடை யில் ஓடும் நதிகளை தேசிய சொத்தாக அறிவித்து அவற்றை நிர்வகிக்கும் பொறுப்பை மத்திய அரசு ஏற்றால்தான் இதுபோன்ற வாழ்வாதார உரிமை, உணர்வுப் பூர்வமான பிரச்னைகளை சமாளிக்க முடியும். மக்களும் மொழி, இனம், மாநிலம் என்ற பாகுபாட்டில் சிக்காமல் நம் நாடு, நாம் அனைவரும் இந்த நாட்டின் மக்கள் என்ற அடிப்படையில் நல்லிணக்கத்துடன் வாழ்வார்கள். நாடும் வளம் பெறும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக