திங்கள், 2 ஜனவரி, 2012

புது அணை கட்டினால் இரு மாநிலங்களும் பராமரிக்க முடியுமா?- நீதிபதி கேள்விக்கு தமிழகம் கடும் எதிர்ப்பு!


Justice AS Anandh
டெல்லி: முல்லைப் பெரியாறின் குறுக்கே புதிய அணை கட்டினால் அதை தமிழகமும், கேரளாவும் இணைந்து பராமரிக்க முடியுமா என்று இன்றைய விவாதத்தின்போது ஐவர் குழு தலைவரான உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் கேட்டார். இதற்கு தமிழக வக்கீல்கள் கடும் எதிர்ப்பும், ஆட்சேபனையும் தெரிவித்தனர்.
நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையிலான ஐவர் குழு இன்று காலை டெல்லியில் உள்ள மத்திய நீர் ஆணையத்தின் அலுவலக வளாகத்தில் கூடியது. அப்போது சமீபத்தில் முல்லைப் பெரியாறு அணைக்குச் சென்று வந்த தொழில்நுட்ப நிபுணர்கள் தத்தே, மேத்தா ஆகியோர் அறிக்கையை சமர்ப்பித்தனர்.

பின்னர் தமிழகம் மற்றும் கேரள மாநில வக்கீல்கள் தங்களது வாதங்களை எடுத்து வைத்தனர். கேரளவக்கீல்கள் முதலில் பேசினர். அப்போது அவர்கள் ஏற்கனவே கூறி வந்ததையே திரும்பக் கூறினர். கேரள அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவன் வாதிடுகையில், முல்லைப் பெரியாறு அணை தொடர் பூகம்ப நிகழ்வுகளால் வலுவிழந்து, பலமிழந்து காணப்படுகிறது. அணையில் விரிசலோ, உடைப்போ ஏற்படவில்லை என்றாலும் கூட அணை பலமாக இல்லை. இதனால் கேரள மக்கள் தொடர்ந்து அச்சத்தில் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

நூறாண்டுகளைத் தாண்டி விட்ட அணையை இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் திரும்பத் திரும்ப பழுது பார்த்துக் கொண்டிருப்பது. எனவே புதிய அணை கட்டுவதுதான் ஒரே தீர்வு என்று கூறினார்.

பின்னர் பிற்பகலில் தமிழக அரசின் வக்கீல்கள் குரு கிருஷ்ணகுமார், உமாபதி ஆகியோர் வாதாடினர். அப்போது அவர்கள் வாதிடுகையில், கேரள அரசு பொருத்தமற்ற, உண்மைக்குப் புறம்பான, தவறான தகவல்களையும், வாதங்களையும் தொடர்ந்து தந்து வருகிறது.

முல்லைப் பெரியாறு அணை மிகப் பலமாக உள்ளது. அணையில் எந்த இடத்திலும் உடைப்போ, விரிசலோ இல்லை. கேரளாவின் வாதம்தான் மிகவும் பலவீனமாக உள்ளது. எனவே அதைத்தான் ஐவர் குழு நிராகரிக்க வேண்டும். கேரளாவின் வாதத்தை முற்றிலும் நிராகரிக்க வேண்டும் என்றனர்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த், புதிய அணை கட்டினால் இரு மாநிலங்களும் இணைந்து அதை பராமரிக்க முடியுமா என்று கேட்டார். இதைக் கேட்டு தமிழக வக்கீல்கள் அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும் நீதிபதியின் இந்தக் கேள்வியை மிகக் கடுமையாக எதிர்ப்பதாகவும், ஆட்சேபிப்பதாகவும் கூறிய தமிழக வக்கீல்கள், புதிய அணை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாக தமிழகத்தின் கருத்தைப் பதிவு செய்தனர்

கருத்துகள் இல்லை: