புதன், 4 ஜனவரி, 2012

என் உதவியாளர் பொய் சாட்சி அளிக்க சி.பி.ஐ. நிர்ப்பந்தம்- ராசா குற்றச்சாட்டு


Raja
டெல்லி: 2ஜி விவகாரத்தில் குற்றவாளிகளாக காட்டப்படுவோருடன் எனக்கு தொடர்பு இருப்பதை நிரூபிக்க
எந்த ஆதாரமும் கிடைக்காததால், என் முன்னாள் உதவியாளரை எனக்கு எதிராக பொய் சாட்சியம் அளிக்க வைக்க சி.பி.ஐ. நிர்ப்பந்தித்து வருகிறது என்று முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா குற்றம் சாட்டியுள்ளார்.2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், கடந்த நவம்பர் 11ம் தேதி முதல் டெல்லி பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சாட்சிகள் விசாரணை நடந்து வருகிறது. ராசாவிடம் முன்பு கூடுதல் தனிச் செயலாளராக இருந்த ஆசீர்வாதம் ஆச்சாரி, ராசாவுக்கு எதிராக சாட்சி அளித்தார்.

அவர் தனது வாக்குமூலத்தில், ராசாவை அவரது அலுவலகத்திலும், வீட்டிலும் ராஜ்யசபா எம்.பி கனிமொழி, ஸ்வான் டெலிகாம் அதிபர் ஷாகித் பல்வா ஆகியோர் பல முறை சந்தித்து, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். அதேபோல், ராசாவும் பலமுறை கனிமொழியை அவரது இல்லத்தில் சந்தித்தார். கனிமொழியும், சரத்குமாரும், கலைஞர் டிவி துவங்குவது தொடர்பாக ராசாவை தொடர்ந்து சந்தித்துப் பேசி வந்தனர்.

மேலும், கலைஞர் டிவி தொடர்பாக, நிரா ராடியாவும் ஒரு முறை என்னிடம் தொலைபேசியில் பேசினார். அப்போது, கலைஞர் டிவியை டாடா ஸ்கை மூலம் ஒளிபரப்பு செய்ய எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டன என்றார். இந்த உரையாடலின் பதிவை, சி.பி.ஐ. அதிகாரிகள் என்னிடம் காண்பித்து, அது என்னுடைய குரல் தான் என்பதையும் உறுதி செய்து கொண்டனர் என்று கூறியிருந்தார் ஆச்சாரி.

ஆச்சாரியிடம் கனிமொழியின் வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி குறுக்கு விசாரணை செய்தார். அவர், ஆசிர்வாதத்தை பார்த்து, 2ஜி வழக்கில் எத்தனை பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது? அவர்களை அடையாளம் தெரியுமா? என்று கேட்டார். அதற்கு ஆசீர்வாதம், இந்த வழக்கில் எத்தனை பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது என்பது எனக்குத் தெரியாது. ராசா, கனிமொழியைத் தான் தெரியும். கைதான மற்றவர்கள் பற்றி, ஊடகங்கள் வாயிலாகத்தான் தெரிந்து கொண்டேன். அவர்களை என்னால் சரியாக அடையாளம் காட்ட முடியாது என்றார்.

இந் நிலையில், ஆச்சாரியிடம் ராசாவின் வழக்கறிஞர் சுஷில் குமார், கடந்த சில நாட்களாக குறுக்கு விசாரணை செய்து வருகிறார். நேற்று நடைபெற்ற குறுக்கு விசாரணையின்போது, ஆச்சாரியை பார்த்து, `ஆ.ராசா, அரசியலில் உங்களை கைதூக்கி விடாததால்தான், அவருக்கு எதிராக பொய் சாட்சி அளிக்க வந்து விட்டீர்கள். ஆ.ராசாவுக்கும், இதர குற்றவாளிகளுக்கும் இடையிலான தொடர்புக்கு எந்த ஆதாரமும் சி.பி.ஐக்கு கிடைக்காததால்தான், உங்களை பொய் சாட்சி ஆக்க சி.பி.ஐ. நிர்ப்பந்தித்தது. இந்த வழக்கில் நீங்களும் குற்றவாளி ஆக்கப்படுவீர்கள் என்று சி.பி.ஐ. மிரட்டியதால் தான், நீங்கள் பொய் சாட்சி ஆகிவிட்டீர்கள் என்றார்.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை ஆசீர்வாதம் ஆச்சாரி மறுத்தார். அவர் கூறுகையில், ஆ.ராசா, அரசியலில் என்னை கைதூக்கி விடாததால்தான், நான் அவருக்கு எதிராக சாட்சியம் அளித்தேன் என்று கூறுவது தவறு. இதர குற்றவாளிகளுடன் ஆ.ராசாவுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் கிடைக்காததால்தான், சி.பி.ஐ. நிர்ப்பந்தத்தால் நான் சாட்சி அளிக்கிறேன் என்று கூறுவதும் தவறு.

நான் வருவாய்க்கு மீறி சொத்து குவித்திருப்பதாகவும், அதனால் சி.பி.ஐயின் நிர்ப்பந்தத்துக்கு பணிந்து விட்டதாகவும் கூறப்படுவது தவறு. இந்த காரணங்களுக்காக, நான் பொய் சாட்சி அளிக்கிறேன் என்று கூறுவதும் சரியல்ல என்றார் ஆச்சாரி.

கருத்துகள் இல்லை: