வழிப்பயணத்தில் சந்தித்த ஒரு ஆட்டோ ஒட்டுநரை பேச விட்ட போது கிடைத்த விசயம். இனி அவரே பேசுகிறார்….
சரியாத்தான் சார் கேப்பேன், தகராறு வேண்டான்னுதான் பார்ட்டிகிட்ட பேரம் பேசுவேன். அவ்ளோ தூரம் ஓட்றதுக்கு இவ்ளோ வாங்குனாதான் பத்தோ இருபதோ எனக்குத் தேறும்
பெட்ரோலுக்கே பாதி காசு போயிடுது. வண்டிக்கு வாடகை தொனோம் கொடுக்கணும். இது எல்லாம் போக ஒரு  நாளைக்கு சம்பாதிக்க வேண்டும். தினசரி வாடகை 150 ரூபாய் பகலுக்கு, ராத்திரிக்கு 80 ரூபாய். 24 மணி நேரம் ஓட்டிட்டு வண்டியை ஓனர்கிட்ட் கொடுத்துட்டுதான் வீட்டுக்கு போவனும். ஷிப்டு, காலேல 10 மணிக்கு ஆரம்பிக்குதுன்னா ஓனராண்ட பேசி வண்டி எடுக்கும் போது மணி 12 கிட்ட ஆயிடும். அப்புறம் நைட்டு வரைக்கும் ஓட்டி விட்டு எக்மோர்ல வண்டியிலேயே தூங்கி விட்டு, எழுந்து முகம் கழுவி விட்டு மறுபடியும் 10 மணி வரை ஓட்டுவேன்.
வீடு அரக்கோணம் பக்கத்தில ஒரு கிராமம், வண்டி எடுப்பது சிந்தாதிரிப் பேட்டையில்.
இப்படி என் பொழைப்பு ஓடுது சார். 1990-ல் இருந்து 20 வருஷமா ஆட்டோ ஓட்றேன். மெட்ராசில எல்லா இடமும் ஓரளவுக்குத் தெரியும். அதிகமா படிக்கல. 3ம் கிளாஸ் படிக்கும் போதே அப்பா செத்துட்டார். அதனால் வேலை செய்ய வந்துட்டேன். முதலில் கந்தசாமி கோயிலாண்ட ஒரு கடையில் டெலிவரி வேலை பார்த்தேன். பொருள் எல்லாம் எடுத்துப் போய் கொடுத்து விட்டு வர வேண்டும். சைக்கிளில் போவேன். அதற்கு பிறகு மாத்தி மாத்தி சம்பள வேலை. ஒரு நேரத்தில ஆட்டோ ஓட்டக் கத்துக்கிட்டு தொழில்ல விட்டேன். ஏதோ முன்ன இருந்ததுக்கு நல்லாத்தான் இருக்கிறேன்.
1000 ரூபாய் வரை வருமானம் வந்தால் 500 ரூபாய் பெட்ரோலுக்கே போயிடும். ஒரு டியூட்டி சென்ஞா 700 ரூபாய் வரை நிக்கும். அவ்வளவு இருந்தாதான் குடும்பம் நடத்த முடியும், ரெண்டு பசங்க ஒருத்தன் 7ம் கிளாஸ் இன்னொருத்தன் 4. ரெண்டு பேரும் பிரைவேட்டு ஸ்கூல்தான். இங்கிலீஷ் மீடியத்துலதான் படிக்க வைக்கிறேன். நான்தான் படிக்கலை. படிப்பு வேணும் சார். எம் பசங்களை பார்க்கும் போது சந்தோஷமா இருக்கு. பெரிய படிப்பு படிச்சவன் மாதிரி நோட்டுல எழுதுகிறாங்க சார்.
ஸ்கூல் பீஸ் பெரியவனுக்கு வருஷத்துக்கு 22,000 ரூபாய், சின்னவனுக்கு 20,000 ரூபாய் ஆவுது. வருமானம் ஆட்டோ ஓட்டறது மட்டும்தான். சொந்த வீடு கிராமத்தில அதை ரிப்பேர் கூட செய்யமுடீல. வெலவாசி ஏற ஏற கஷ்டமா இருக்கு சார். மதியம் சாப்பாடு 50 ரூபாய் வரை ஆகிடுது. ஒரு டீயும் வடையும் கூட 10  ரூபாய்க்கு கம்மியா இல்ல. ராத்திரீல ஒரு தோசையும், இரண்டு பரோட்டாவும் சாப்பிட்டா 60 ரூபாய் ஆகி விடுகிறது. இப்படி எனக்கு சாப்பாட்டுச் செலவே ஒரு நாளில் கணிசமாக ஆவுது. அன்னைக்கு என்னடான்னா ஒரு கடையில டீ விலை 6 ரூபாய் ஆக்கிட்டதா சொல்றான்.
மாசக் கடைசில சவாரி குறைவாத்தான் கிடைக்கும், பிசினஸ் செய்றவங்கதான் ஏறுவாங்க. மாச ஆரம்பித்தில சம்பளம் கிடைத்த புதுசில சவாரி அதிகமா கிடைக்கும். குளிர் காலத்தில எதுக்கு வெளியில் அலைகிறோம் என்று வீட்டுக்குப் போயிடுவாங்க, அப்பவும் குறைவுதான்.
நல்லவேளை எனக்கு குடிப்பழக்கம் எல்லாம் இல்ல,  இல்லைன்னா அதுக்கு வேற தெனோம் 100 ரூபா மொய்யெழுதனும்.
ஆட்டோக்கு எப்சி காலாவதி ஆகி ஒரு மாசம் ஆவுது. அதை ரின்யூ பண்ண போனா அங்கேயும் பணம்தான். போக நாலஞ்சு நாள் ஓட்ட முடியாது. எங்க ஊரில் ஒருத்தன் நிலங்களை வளைச்சுப் போட்டு நாலஞ்சு வீடு கட்டிட்டான் சார். இப்போ பெரிய கடை வச்சிருக்கான். அவங்களும் எங்களை மாதிரிதான் 5 அண்ணன் தம்பிகள், அவன் நடுவில் உள்ளவன், நான் எங்க வீட்டில் நடுவில் உள்ளவன். சிந்தாதிரிப் பேட்டையில் பல வகையான கடைகள் வச்சிருக்கான், பாபுன்னு பேரு.
என் கூடப் படிச்சவன்தான், சின்ன வயசிலேயே நல்லா படிக்கிறவன்தான். நான் ஏதாவது தொழில் ஆரம்பிச்சா ஒன்ன வாட்ச்மேன் வேலைக்காவது வைச்சுக்கிறேன் என்று அப்போ சொல்வான் சார். கொஞ்சம் பெயின்ட் வாங்க அவன் கடைக்குப் போனா, எல்லாம் லிஸ்ட போட்டு விலை சொன்னான். டிஸ்கவுண்டு எதுனா குடுன்னா 1200 ரூபாய் பில்லில் 100 ரூபாய் குறைச்சுக்கிறேன் என்றான், அவ்வளவுதான் சார் நட்பு எல்லாம்!
நமக்கு சொந்தமா ஆட்டோ வாங்க எல்லாம் முடியலை சார். சிட்டில வீடு இருந்தாத்தான் கொடுப்பாங்களாம். தெரிஞ்சவங்க, சொந்தக்காரங்க சிட்டில இருந்தாலும் அவங்க கிட்டப் போய் கேட்க முடியாது சார். அந்த சின்ன வயசு பிரண்டுகிட்ட ஒன் அட்ரஸ் போட்டு ஆட்டோ எடுத்துக் கொடு என்று கேட்டா முடியாதுன்னு சொல்லிட்டான் சார். ஏதாவது பிரச்சனை வந்தா என் தலையிலதானே விழும் என்று காரணம் சொல்றான். பாசம்லாம் எதுவும் கிடையாது சார். எல்லாம் பணம்தான்.
சம்பாதிக்கிறது எல்லாம் செலவுக்கே சரியாகப் போயிடுது. அரை காணி நிலம் இருக்கு, ஆனா அதுலேருந்து எந்த வருமானமும் கிடையாது. ரெண்டு சீட்டு போட்டிருக்கிறேன். எங்க வீட்டுக்காரி கல்யாணம் ஆகி இத்தனை வருஷத்தில ஒரு நகை கூட வாங்கித்தலேன்னு என்று தொணதொணக்க, 1 லட்ச ரூபாய் சீட்டு 3 மாதம் இருக்கும் போது 7000 ரூபாய் தள்ளி எடுத்தேன். அதை வச்சு நகை வாங்கப் போனோம், அப்போ சவரன் 16,500 ரூபாய், அஞ்சர சவரன் வாங்கினோம். 82,500 ரூபாய் சேட்டு பில் போட்டான்.
ஒரு மாசம் கழிச்சு அக்கா பொண்ணுக்கு கல்யாணச் செலவு வந்தது. அக்கா செத்து போச்சு சார், நாமதான் செய்யணும். அந்த நகையை சேட்டுக்கிட்ட திரும்பக் கொண்டு கொடுத்தா, 70,000 ரூபாய் தரேன் என்கிறான். கேட்டா செய்கூலி, சேதாரம் எல்லாம் கழிக்கிறானாம். என்னா சார் நியாயம் இது. நகைய வாங்கிக்கிட்டுப் போய் அப்படியே வச்சிருந்தோம். போட்டுக் கூடப் பார்க்கவில்லை. அதுக்கு என்ன சேதாரம். நாம ஒன்னரை மாசம் ஆட்டோ ஓட்டி சம்பாதிக்கிறத இவன் சும்மா உட்கார்ந்துகிட்டே ஒரே நொடியில அடிச்சுக்கிட்டுப் போகப் பார்க்கிறான். பேசாம எழுந்துட்டேன். நான் போலீசில போய் கம்ப்ளெயின்ட் கொடுக்கலாம்னேன் ஆனா பக்கத்தில இருக்கிறவன் எல்லாம் எதுக்கு போலீஸ் வம்பு எல்லாம் பேசித் தீத்துக்கோன்னு சமாதானம் சொல்றான். நம்ம நாடு உருப்படாது சார். இவனுங்களே இப்படி இருந்தா எப்படி.
அப்புறம் திரும்பப் பேசி எடுத்து 75,000 ரூபாய் தந்தான். ஏதோ 1000 – 2000 கழிச்சுக்கிட்டு கொடுப்பான்னு பாத்தா இப்படி ஒரேயடியாக 7,500 ரூபாய் அடிச்சுட்டான் சார். இப்படி சும்மா இருந்துகிட்டே சம்பாதிக்கிறானுங்க சார். நீ உருப்படவே மாட்டே என்று சொல்லிட்டுத்தான் வந்தேன். இப்படி சம்பாதிக்கிறவனுங்க, ஆட்டோல ஏற வந்தா பேரம் பேசுவானுங்க, இவ்வளவு தூரத்துக்கு 40 ரூபாயா, கொஞ்சம் நியாயமா, தருமமா கேளுப்பான்னு சொல்லுவானுங்க!
இது மாதிரி சேட்டுங்க வந்து என்னா அட்டூழியம் பண்ணுறானுங்க, நம்ம ஊர்க்காரனுங்க இந்த சரவணா ஸ்டோர்ஸ் மாதிரி வச்சிருந்தா அங்க போய் வம்பு செய்து கடையை மூடுறான். இந்த சவுகார்பேட்டையில் சேட்டுங்களும் அப்படித்தான் கடை வச்சிருக்கானுங்கள, அவனுங்கள கேட்க ஆள் கிடையாது.
ஏழை பாழைங்க ஒரு குடிசை வைக்க நிலம் வேணும்னா வாங்க முடியாது, எங்க ஊரிலேயே  60க்கு 20 நிலம் 5 லட்ச ரூபாய் சார். இந்த அரசாங்கம் எல்லாம் என்னதான் செய்யுதுன்னே தெரியல  கலைஞர் போய் ஜெயலலிதா வந்தா அவங்களும் அப்படித்தான். விஜயகாந்த் வந்தா என்ன செய்வாரோ!’
- பேசி முடித்து விட்டு ஆட்டோக்காரர் அவர் பிழைப்பை பார்க்க போய்விட்டார். அவர் பேசியது அனுபவப் பேச்சு. படித்து தெரிந்து  கொண்டதில்ல. அவற்றில் ஒரு சிலவற்றை தவிர்த்து விட்டுப் பார்த்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது. முக்கியமாக எந்த வேலையும் செய்யாமல் அந்த சேட்டு உட்கார்ந்த இடத்திலேயே விற்ற நகையை மீண்டும் வாங்கி 7,500 ரூபாய் சம்பாதித்து விட்டார். இல்லை சுருட்டி விட்டார்.
இனி அதே நகையை மீண்டும் 82,500 ரூபாய்க்கு விற்பார். மேலும் சுருட்டலாம். அதை திரும்ப வாங்கினாலும் சுருட்டல் தொடரும். இது சேட்டுக்கு மட்டும்தானா? பங்கு சந்தை, ஆன்லைன் வர்த்தகம், வங்கிகள், நிதி நிறுவனங்கள், அம்பானி, டாடா, பிர்லா, மிட்டல்…எல்லோரும் இதுதானே செய்கிறார்கள்?
முதலாளிகளின் தொழில் முனைப்பு என்ன என்பதை ஒரு ஆட்டோ ஓட்டுநர் தெரிந்து கொள்ளும் போது அதியமான் போன்ற ‘படிப்பாளிகள்’ அதற்கு திறமை, புத்துயிர்ப்பு, சாகசம் என்று புரிந்து கொள்கிறார்கள். ஒரு வேளை அதியமான் அவர்கள் ஒரு வருடம் ஆட்டோ ஓட்டித்தான் பிழைக்க வேண்டும் என்று இருந்தால் அவரும் புரிந்து கொள்வாரா? இவ்வளவிற்கும் அனுபவம்தான் பெரிய ஆசிரியன் என்பது அவரது கூற்று, எங்களதல்ல…..
___________________________________________________
- வினவு செய்தியாளர்.