நியாயமான மாநில உரிமைக்காகவும் தேசிய இன உரிமைக்காகவும் நடத்தப்படும் போராட்டங்களை பிரிவினைவாத முத்திரை குத்தி ஒடுக்குவதுதான் இந்திய தேசியத்தையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் வழி என்பது பாரதீய ஜனதா, காங்கிரசு மற்றும் போலி கம்யூனிஸ்டு கட்சிகளின் கொள்கை. என்றபோதிலும், நதிநீர்ப் பங்கீடு மற்றும் எல்லைப் பிரச்சினைகள் போன்ற மாநிலங்களுக்கிடையிலான தகராறுகளில் நியாயஅநியாயங்களைப் பரிசீலித்து, இவர்கள் நிலைப்பாடு எடுப்பதில்லை. மாறாக, ஓட்டுப் பொறுக்குவதற்காக மாநிலவெறி, இனவெறியைத் தூண்டுவதுதான் இந்தத் தேசியக் கட்சிகளுடைய மாநிலப் பிரிவுகளின் நடைமுறையாக இருந்து வருகிறது.
இக்கட்சிகளின் அனைத்திந்தியத் தலைமைகள், பிராந்திய நலன்களைக் கைவிட்டுச் சுமுகமாகப் பிரச்சினைகளைப் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று பொதுவில் உபதேசிக்கின்றன. அதேநேரத்தில், சம்பந்தப்பட்ட இரு மாநிலங்களிலும் ஓட்டுப் பொறுக்கும் நோக்கில் இரு மாநிலப் பிரிவுகளையும் தனித்தனியே தூண்டிவிடுகின்றன. முல்லைப் பெரியாறு பிரச்சினையில் தேசியக் கட்சிகளின் நிலைப்பாடுகள், அவர்களிடம் நிலவும் தமிழக விரோதப் போக்கை மட்டுமின்றி, அவர்களால் விதந்தோதப்படும் தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரான சந்தர்ப்பவாதத்தையும் மிகத் தெளிவாக அம்பலப்படுத்தியிருக்கின்றன.
இந்திய தேசியத்தையே தனது பார்வையாகக் கொண்ட அல்லது அதற்கு விலைபோய்விட்ட ஊடகங்களும், “தேசிய மொழியாக” ஆங்கிலத்தை வரித்துக் கொண்டுள்ள ஊடகங்களும் அந்தந்த மாநிலங்களுக்குத் தகுந்தாற்போன்று சந்தர்ப்பவாதமாக நடந்து கொள்கின்றன. இரண்டு மாநிலங்களிலும் பத்திரிகை நடத்தும் இந்துவும் எக்ஸ்பிரசும், ஏன், சன் தொலைக்காட்சி குழுமமும், இடத்துக்கும் மொழிக்கும் ஏற்ப எழுதியும் பேசியும், தேசியவாத சமரச நாடகமாடுகின்றன. இங்கே தமிழகத்துக்கு ஆதரவாக சண்டப்பிரசண்டம் செய்யும் தினமணி, இந்தியாடுடேயின் முதலாளிகள், கேரளத்தில் வெளியாகும் இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் மலையாள இந்தியா டுடேயில் வேறு மாதிரி எழுதுகின்றனர். அந்தந்த மாநில ஆசிரியர் குழுக்களின் “சுதந்திரம்’’, “உரிமை” அல்லது சமரசவாதம் என்ற போர்வைக்குள் ஒளிந்து கொண்டு இந்த அயோக்கியத்தனத்தை நியாயப்படுத்துகின்றனர்.
காங்கிரசு, பா.ஜ.க. மற்றும் அவற்றுடன் கூட்டுச் சேர்ந்துள்ள கூட்டணிக் கட்சிகள் மட்டுமல்ல; தேசியவாதத்தை வரித்துக் கொண்டுள்ள போலி கம்யூனிஸ்டு கட்சிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. குழுச் சண்டை மற்றும் ஊழல் அரசியலில் மூழ்கி நாறும் போலி மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர் அச்சுதானந்தன்தான் கேரளத்தில் இனவெறித் தலைவராக முன்னின்று தமிழர் எதிர்ப்பைத் தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் அடைய எத்தனிக்கிறார். கட்சிக்குள் நடக்கும் பதவிச் சண்டையில் தமிழர் எதிர்ப்பு தரும் ஆதரவைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்.
அச்சுதானந்தனின் இனவெறி நடவடிக்கைகளைக் கண்டு கொள்ளாமல் இருக்கிறது, மத்தியத் தலைமை. தமிழகத்திலுள்ள போலி மார்க்சிஸ்ட் தலைமையோ துரோகத்தனமான மௌனம் சாதிக்கிறது. இங்கே, முல்லைப் பெரியாறு பிரச்சினையில் தமிழகத்துக்கு ஆதரவான போராட்டங்களில் சேர்ந்து கொள்ளும் இங்குள்ள போலி கம்யூனிஸ்டுகளின் தலைமையோ, அச்சுதானந்தனின் தமிழர் எதிர்ப்பு இனவெறிப் பிரச்சாரம் குறித்தும், அதற்கு அங்குள்ள வலது, இடது போலிகளின் ஆதரவு குறித்தும் மூடிமறைத்துக் கொண்டே தமிழக உரிமைக்குக் குரல் கொடுப்பதாக நாடகமாடுகின்றன.
1970களின் இறுதியில் இடுக்கி அணை கட்டப்பட்ட பிறகுதான் இப்பிரச்சினை தொடங்கியது. அந்த அணைக்குப் போதிய நீர் கிடைக்காததால், அதன் முழுத்திறனில் மின் உற்பத்தி செய்ய முடியாத நிலையில், முல்லைப் பெரியாறு நீர்த்தேக்கத்திலிருந்து தமிழகத்துக்குச் செல்லும் நீர் முழுவதையும் இடுக்கி அணைக்குத் திருப்பி விட வேண்டும் என்பதற்காகவே, “மலையாள மனோரமா” நாளேட்டுடன் கூட்டுச் சேர்ந்து ஒரு புரளியை கிளப்பிவிட்டார் அச்சுதானந்தன். 1979இல் நடந்த நிலநடுக்கத்தால் முல்லைப் பெரியாறு அணையில் விரிசல் ஏற்பட்டுவிட்டதென்றும், அது உடைந்தால் 5 மாவட்டங்களில் பேரழிவும் 60 இலட்சம் மலையாளிகளின் உயிருக்குப் பேராபத்தும் நேரிடும் என்ற பீதியை அச்சுதானந்தன் தலைமையிலான இனவெறிக் கும்பல் கிளப்பி வருகிறது.
இந்தப் பொய்ப் பிரச்சாரத்தின் மூலம் கிளப்பப்பட்ட பீதி, இடுக்கி அணைக்கான நீர்த் தேவைக்காக கேரளம் கொடுத்து வந்த நிர்ப்பந்தம் ஆகியவற்றை முகாந்திரமாகக் கொண்டு எம்.ஜி.ஆர். ஆட்சியும் அதன் மலையாள அதிகாரிகளும் சதித்தனமாக கேரளாவுக்குப் பல சலுகைகளைத் தந்தனர். அணையின் பாதுகாப்பு பொறுப்பு கேரள அரசுக்கு அளிக்கப்பட்டது. நீர்த்தேக்கப் பகுதிக்கான நில வாடகை, மின் உற்பத்திக்கான குத்தகை ஆகியவற்றை உயர்த்தவும், இடுக்கி அணையிலிருந்து மின்சாரம் விலைக்கு வாங்குவதும் ஒப்பந்தமானது. முல்லைப் பெரியாறு நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 152 அடியிலிருந்து 136 அடியாகக் குறைத்துக் கொள்ளப்பட்டது . நீர்மட்டம் 16 அடி குறைக்கப்பட்டதால், கம்பம் பள்ளத்தாக்கின் 40 சதவீத நீர்ப்பாசனமும் 40 சதவீத விவசாய உற்பத்தியும் குறைந்தன. இவ்வளவு சலுகைகளைப் பெற்ற பிறகுதான் முல்லைப் பெரியாறு அணையையும் அதன் ஒரு பகுதியான பேபி அணையையும் வலுப்படுத்திய பிறகு, வல்லுநர்கள் ஆய்வு செய்து பரிந்துரைத்த பிறகு, அணையின் நீர்மட்டத்தை உயர்த்திக் கொள்வது பற்றி பரிசீலிப்பதற்கு ஒப்புக் கொண்டது, கேரள அரசு.
இதன்படி, தமிழக அரசு பல கோடி ரூபாய் செலவில், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பெரியாறு அணையைப் பலப்படுத்திய பின்னும், போலி மார்க்சிஸ்டுகள் மற்றும் காங்கிரசு தலைமையிலான கூட்டணி அரசுகளும் ஊடகங்களும் இந்தப் பொய்ப்பிரச்சாரத்தைத்தான் தொடர்ந்து வருகின்றனர். பேபி அணையைப் பலப்படுத்த தமிழக அரசு எடுத்த முயற்சிகளைத் தடுத்தும் வந்தனர். கேரள திரையுலகைச் சேர்ந்த கதாசிரியர் வாசுதேவன் நாயர் போன்ற சிலர் மட்டுமே இத்தகைய இனவெறிப் போக்கைக் கண்டித்திருக்கின்றனர். அணையின் உறுதிப்பாடு குறித்த வல்லுநர் குழுவின் ஆய்வு முடிவுகளை ஏற்ற உச்ச நீதிமன்றம் அணையின் நீர்மட்டத்தை உடனடியாக 142 அடிக்கும், பேபி அணையை வலுப்படுத்திக் கொண்ட பிறகு 152 அடிக்கும் உயர்த்திக் கொள்ளவும், தமிழகத்துக்கு உரிமை வழங்கியது. அதற்கு கேரள அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்றும் 2006ஆம் ஆண்டு உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்க மறுத்ததோடு, போலி மார்க்சிஸ்டு கட்சியின் அச்சுதானந்தன் தலைமையிலான கேரள கூட்டணி அரசு அவசர அவசரமாக சட்டமன்றத்தைக் கூட்டி, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை முறியடிக்கும் வகையில் ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. “முல்லைப் பெரியாறு உட்பட கேரளாவில் உள்ள 22 அணைகளின் கட்டுப்பாட்டை நிர்வகிக்கும் அதிகாரம் கொண்ட ஆணையம் ஒன்றை நிறுவி, அதன் செயல்பாட்டில் வேறு எந்த அரசும் நீதிமன்றங்களும் தலையிடவோ குறுக்கிடவோ முடியாது” என்று கேரள அரசு அணைகள் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றியது. அதோடு, உச்ச நீதிமன்ற ஆணைக்கு எதிராக முல்லைப் பெரியாறு மற்றும் அதன் பேபி அணையை வலுப்படுத்தவும், அவற்றை நிர்வகிக்கவும் தமிழகத்துக்குள்ள உரிமையைச் செயல்படுத்தும் தமிழக அதிகாரிகளையும் தாக்கித் தடுத்தது.
கேரளத்தில் எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரசு மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள், பா.ஜ.க. முதலிய இந்திய தேசியவாதக் கட்சிகள் அச்சுதானந்தன் அரசின் இந்த அடாவடிகளுக்கு ஒத்துழைத்து ஆதரவளித்தன. உச்ச நீதிமன்றமும் தனது உத்தரவை கிடப்பில் போட்டு, அதன் உத்தரவுகளுக்குப் பணிய மறுத்த கேரள அரசைக் கண்டிக்கவோ, தண்டிக்கவோ முன்வராமல் சமரச நாடகமாடத் தொடங்கியது.
கேரள அணைகள் பாதுகாப்புச் சட்டம் அரசியல் சட்டத்துக்கு விரோதமானது; குறிப்பாக, இரு மாநில ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்ட முல்லைப் பெரியாறு அணைக்குப் பொருந்தாது என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் வழக்குத் தொடுத்தது. உச்ச நீதிமன்றத்தின் 2006ஆம் ஆண்டின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும்படி கேரள அரசும் வழக்குத் தொடுத்தது. தனது முந்தைய தீர்ப்பைப் புதைகுழியில் போட்ட உச்ச நீதிமன்றம், புதிதாக வழக்குகள் வந்ததைப் போல விசாரணையைத் தொடங்கியது. அதன் பரிந்துரையின்படி நடந்த இரு மாநில முதல்வர்களின் பேச்சுவார்த்தை முறிந்தது. அதன் பிறகு, இரு மாநில மத்திய அரசுகளின் பிரதிநிதிகளைக் கொண்ட அதிகாரத்துடன் கூடிய உயர்மட்டக் குழுவை ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஆனந்த் தலைமையில் அமைத்தது, உச்ச நீதிமன்றம். அது, அணையின் உறுதித் தன்மையை ஆய்வு செய்ய ஒரு வல்லுநர் குழுவை அமைத்துள்ளது. மொத்தத்தில், மீண்டும் 30 ஆண்டுகளுக்குப் பின்னோக்கி சக்கரத்தைச் சுற்றவிட்டது.
இதற்கிடையே அணை வலுவிழந்துவிட்டது என்று காட்டும் நோக்கில் மத்திய இராணுவ அமைச்சரும் கேரளத்தைச் சேர்ந்தவருமான ஏ.கே. அந்தோணி மூலம் கடற்படைக் குழு, ரூர்கி ஐ.ஐ.டி.யிலிருந்து நில அதிர்ச்சி பாதிப்புகளை ஆய்வு செய்யும் வல்லுநர் குழு ஆகியவற்றை வைத்துத் தனக்குச் சாதகமான ஆதாரங்களைத் திரட்டி, அவற்றை வைத்து கேரள அரசு ஒருபுறம் வழக்காடியது. மறுபுறம், குறும்படங்கள், பிரச்சாரங்கள் மூலம் அணை உடைந்து பேரழிவு ஏற்படும் என பீதி திட்டமிட்டுப் பரப்பப்பட்டது. இறுதியாக, உச்ச நீதிமன்ற உயர்மட்டக் குழு அறிக்கையும் தீர்ப்பும் தனக்குச் சாதகமாக இராது என்ற அச்சம், வரவிருக்கும் பிரவம் சட்டமன்ற இடைத்தேர்தல் ஆகியவை காரணமாக இந்தப் பொய்ப்பிரச்சாரம் உச்சத்துக்குச் சென்றிருக்கிறது. ‘தமிழகத்துக்குத் தண்ணீர், கேரளத்துக்குப் பாதுகாப்பு’ என்ற நயவஞ்சகமான நோக்கம் கொண்ட ஒரு முழக்கத்தை வைத்துப் புதிய அணை கட்டும் திட்டம் நியாயப்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசில் அமைச்சர்கள், அதிகாரிகள் மட்டத்தில் பெருமளவில் உள்ள தமது இனத்தவர்களை வைத்து புது அணைக்கான ஆதரவும் திரட்டப்படுகிறது.
இவர்களின் பீதியூட்டும் பொய்ப்பிரச்சாரம் காரணமாக வெறிபிடித்த அணிகள், கேரளத்துக்குத் தோட்ட வேலை செய்யப் போன தமிழகத் தொழிலாளர்களைத் தாக்கி, பெண்களைச் சிறைபிடித்து அவமானப்படுத்தியிருக்கின்றனர். சபரிமலைக்குப் போன பக்தர்களையும் தாக்கியுள்ளனர். காங்கிரசின் கேரள அமைச்சர் உண்ணாவிரதமிருந்து மேலும் வெறியேற்றினார். “தண்ணீர் கொடுத்த கேரள மக்களுக்கு தமிழர்கள் துரோகம் செய்து விட்டனர் ” என்று அச்சுதானந்தன் நஞ்சு கக்கினார். காங்கிரசு, பா.ஜ.க. வினர் அணையைத் தாக்கவும் செய்தனர்.
இவற்றின் காரணமாகக் கொதித்துப்போன தமிழக மக்கள் தன்னெழுச்சியாகப் போராட்டங்களில் குதித்துள்ளனர். தமிழக போலீசின் வடநாட்டு அதிகாரிகள் தடுத்தும் தடியடி நடத்தியும் மக்கள் எழுச்சியை அடக்க முடியவில்லை. அன்றாடம் பல ஆயிரம் மக்கள் கேரள எல்லை நோக்கி அணிவகுத்துச் செல்கின்றனர். மூன்று வாரங்களுக்கு மேலாகப் போராட்டம் நீடிக்கிறது. பல நாட்கள் எல்லைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, கேரளத்தில் காய்கறி விலைகள் உயர்ந்தன. தமிழக மக்களுடைய கொதிப்பின் சூடு தெரியத்தொடங்கியவுடனே, சபரிமலை பக்தர்களை வரவேற்பது போன்ற நாடகங்களை கேரள அரசு அரங்கேற்றத் தொடங்கியிருக்கிறது.
அதேநேரத்தில் அணையின் உறுதியைச் சோதிப்பதற்காக தற்போது வந்திருந்த உச்ச நீதிமன்றம் நியமித்த வல்லுநர் குழுவிடமும் கேரள அதிகாரிகள் அடாவடித்தனம் செய்திருக்கின்றனர். தமக்கு சாதகமான முடிவு வராத வரை, எத்தகைய நடுநிலை வல்லுநர்களின் முடிவுக்கோ, தீர்ப்புகளுக்கோ கட்டுப்பட முடியாது என்பதே கேரள அரசின் நிலை என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. 1979இல் அணையின் நீர்மட்டம் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதிகளில் ஏராளமான சுற்றுலா விடுதிகள் கட்டப்பட்டிருக்கின்றன. முல்லைப்பெரியாறு அணையைத் தகர்ப்பதன் மூலம், வனவளமிக்க அப்பகுதியைத் தமது சுற்றுலாக் கொள்ளைக்கு விழுங்கிக் கொள்ள முனைகிறார்கள் கார்ப்பரேட் தரகு முதலாளிகள். சொல்லப்போனால், பழைமையான அரை வட்ட வடிவிலான 500 மீட்டருக்கும் மேல் உயரமான இடுக்கி அணைதான் ஒப்பீட்டளவில் அபாயகரமானதும், அவர்கள் அச்சுறுத்துவதைப் போன்ற நிலநடுக்கம் ஏற்பட்டால் முதலில் உடையக்கூடியதும் ஆகும். எனினும், இந்த உண்மைகள் எதுவும் காதில் ஏறாத அளவுக்கு கேரள மக்கள் மத்தியில் திட்டமிட்டே பீதி பரப்பப்பட்டிருக்கிறது.
ஏறக்குறைய 60 இலட்சம் மலையாளிகள் தமிழகத்திலும் இலட்சக்கணக்கான தமிழர்கள் கேரளத்திலும் வாழ்கின்றனர். முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ள இடுக்கி மாவட்டத்தின் ஆகப்பெரும்பான்மையினர் தமிழ் மக்களே. வரலாற்றுப் பாரம்பரியம், பண்பாடு மற்றும் பொருளாதார ரீதியான பொதுநலன்களையும் நீண்ட எல்லையையும் கொண்டுள்ள இரு இனங்களுக்கும் இடையிலான முரண்பாடு நட்பு ரீதியில் தீர்த்துக் கொள்ளக் கூடியதே. இதனைப் பகைமையானதாகவும் நிரந்தரமானதாகவும் மாற்றுவதற்கு இரு இனங்களிலும் உள்ள இனவாதச் சக்திகள் மேற்கொள்ளும் எத்தணிப்புகளுக்கு இடங்கொடுக்கக் கூடாது.
தமிழகத்தின் நீர்பிடிப்புப் பகுதியில் உருவாகி மேற்கு நோக்கி ஓடும் ஆறுதான் பெரியாறு என்ற போதிலும், இந்தத் தண்ணீர் ‘கேரளம் தமிழகத்துக்குக் கொடுக்கும் தானம்’ என்ற கண்ணோட்டம் அச்சுதானந்தன் உள்ளிட்ட மலையாள இனவெறியர்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது. நீதிமன்றத் தீர்ப்பை மீறுவதற்கும், அணையை உடைப்போம் என்று மிரட்டுவதற்கும் இந்தக் கருத்துதான் அடிப்படை. இதனை முறியடிக்க வேண்டுமானால் உணவு, காய்கறி, இறைச்சி, பால் ஆகிய அனைத்துக்கும் கேரளம் தமிழகத்தைச் சார்ந்திருக்கிறது என்ற உண்மையை அவர்கள் உணரச்செய்ய கேரளத்துக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும். கேரளத்துடனான எல்லைகள் அனைத்தையும் தமிழக அரசே மூடவேண்டும். இப்பிரச்சினையில் நயவஞ்சக நாடகம் நடத்துவதற்கு திமுக, அ.தி.மு.க. உள்ளிட்ட மாநிலக் கட்சிகளை இனிமேலும் அனுமதிக்கக் கூடாது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு, அனைத்திந்திய அரசமைப்பின் அதிகாரத்துக்கு கேரளம் கட்டுப்படாதபோது, தமிழகமும் கட்டுப்படக்கூடாது. இதனால் ஏற்படக்கூடிய பொருளாதார இழப்பை தமிழக மக்கள் சகித்துத்தான் தீரவேண்டும். இல்லையேல், தமிழகம் பாலைவனமாகும். இத்தகைய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தாமல் தமிழகம் நீதியைப் பெற முடியாது.
2006 உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த மறுக்கும் கேரளத்துக்கு எதிரான பொருளாதாரத் தடை மட்டுமின்றி, மைய அரசின் அதிகாரத்தை நிராகரிக்கும் நடவடிக்கைகளையும், இரட்டை வேடம் போடும் தேசியக் கட்சிகளுக்கு எதிரான நடவடிக்கைகளையும் தொடங்க வேண்டும். நிபந்தனையற்ற முறையில் இத்தீர்ப்பினை அமல்படுத்த கேரளம் சம்மதித்தால், கேரள மக்களிடம் பரப்பப்பட்டிருக்கும் பீதியை அகற்றத் தமிழகம் ஒத்துழைக்கலாம். இந்திய அல்லது சர்வதேச வல்லுநர்களைக் கொண்டு அணையின் வலிமையைச் சோதித்து உறுதி செய்து கொள்ள அனுமதிக்கலாம். ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதுதான் நமது நோக்கம். கேரள மக்களின் உயிரைப் பலியிட்டு தம் வாழ்வைப் பாதுகாத்துக் கொள்ள தமிழ் மக்கள் யாரும் விரும்பவில்லை. அது கேரள இனவெறியர்கள் செய்துவரும் பொய்ப்பிரச்சாரம்.
காவிரி, ஈழம், தமிழக மீனவர் பிரச்சினை, முல்லைப்பெரியாறு எனத் தமிழகம் வஞ்சிக்கப்படுவது தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது. ஒருமைப்பாடு என்பது ஒரு வழிப்பாதையல்ல.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக