வெள்ளி, 6 ஜனவரி, 2012

கேரள மசாலா கம்பெனியில் துன்புறுத்தப்படும் தமிழர்கள்

நெல்லை ஜன,6 - கேரளாவில் உள்ள ஒரு மசாலா கம்பெனியில் தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டு துன்புறுத்தப்படுவதாகவும் அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அங்கிருந்து தப்பி வந்த நெல்லை மாவட்ட தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனுக்கொடுத்தனர். நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில், ஆலங்குளம்,குருவிகுளம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த வாலிபர்கள் 15க்கும் மேற்பட்டவர்கள் கடந்த 7 ஆண்டுகளாக கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள மசாலா கம்பெனி ஒன்றில் பணியாற்றி வருகின்றனர்.
தற்போது முல்லை-பெரியாறு அணை விவகாரத்தால் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக பயந்து போன அவர்கள் விடுமுறைக்கு ஊருக்கு செல்வதற்கு அனுமதி கேட்டுள்ளனர். ஆனால் கம்பெனி உரிமையாளர் ஐசக் என்பவர் அவர்களுக்கு விடுமுறை கொடுக்க மறுத்ததோடு அவர்களுக்கு சம்பள பாக்கியையும் கொடுக்க மறுத்துள்ளார். மேலும் தொழிலாளர்கள் அங்கிருந்து தப்பிசெல்ல முடியாதவாறு அவர்களை அறையில் அடைத்து வைத்து துன்புறுத்தியுள்ளார். இந்நிலையில் சங்கரன்கோவிலை சேர்ந்த பழனிச்சாமி, குருவிகுளம் ராஜதுரை, ஆலங்குளம் அருண்,  எம்.ஜி.ஆர்., தலைவன்கோட்டை சுபாஷ் ஆகிய ஆறுபேரும் கையில் வைத்திருந்த பணத்துடன் அங்கிருந்து நெல்லை வந்து சேர்ந்தனர். பின்னர் அவர்கள் கேரள மசாலா கம்பெனியில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 15க்கும் மேற்பட்டவர்கள் வேலை பார்த்து வந்ததாகவும் தற்போது அவர்களை கம்பெனி உரிமையாளர் அடைத்து வைத்து துன்புறுத்துவதாகவும், அங்கு சிக்கியுள்ள மற்றவர்களை மீட்ட
நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் நெல்லை மாவட்ட கலெக்டரிடம்
மனுக்கொடுத்தனர்.

கருத்துகள் இல்லை: