கிழக்கிலோ யாழ்ப்பாணத்திலோ உள்ள பல்கலைக்கழகங்களில் உபவேந்தராக தமிழரைத்தான் நியமிக்கவேண்டும் என இலங்கை சட்டத்தில் எதுவும் இல்லையென தெரிவித்துள்ள உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க, இலங்கையில் இனரீதியான பல்கலைக்கழகம் எதுவும் இல்லையெனவும் தெரிவித்துள்ளார்.
கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு சிங்கள உபவேந்தர் ஒருவர் நியமிக்கப்படுவது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.யோகேஸ்வரன் அனுப்பிய கடிதத்திற்கு பதிலளிக்கும் முகமாகவே உயர்கல்வி அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது, கிழக்கு பல்கலைக்கழகத்தில் உள்ள நிர்வாகம் ஊழல் நிறைந்த நிர்வாகமாக காணப்படுவதாகவும், அவற்றினை மாற்றுமாறும் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோர் என்னிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பொருட்கள் கொள்வனவு உட்பட பல்வேறு கொடுக்கள் வாங்கல்களில் ஊழல்கள் நிகழ்ந்துள்ளன. அத்துடன் நிர்வாகத்தினரால் பல்வேறு பிழையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பான விரிவான அறிக்கையினை கோரியுள்ளோம்.
அந்த அறிக்கையின் பிரகாரம் விசாரணைகள் இடம்பெற்று நிர்வாகம் மாற்றப்படும். இது தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கவென உடனடியாக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அங்கு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் ஊழல் தொடர்பில் அது விசாரணைகளை மேற்கொள்ளும் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக