ஜெயலலிதாவை கைது செய்யக் கோரி மாநிலங்களவையில் பதாகையை காட்டிய திமுக உறுப்பினரை, அதிமுக உறுப்பினர்கள் சூழ்ந்துகொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கே.பி.ராமலிங்கம், இன்று மாநிலங்களவையில் கொடநாடு எஸ்டேட்டில் அரசு நிலத்தை கொள்ளையடித்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பதாகை ஒன்றினை காட்டினார்.
அப்போது அதிமுக உறுப்பினர்கள், கே.பி. ராமலிங்கத்தை சூழ்ந்து கொண்டனர். மேலும் அவரிடம் இருந்த பதாகையையும் பறிக்க முயன்றனர். இதையடுத்து மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி தலையிட்டு திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்களை விலக்கிவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக மாநிலங்களவையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இதுகுறித்து கே.பி.ராமலிங்கம் கூறியதாவது, இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்ற மாநிலங்களவை கூடியவுடன், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் பகல் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. 12 மணிக்கு மீண்டும் மாநிலங்களவை கூடியபோது, திமுக உறுப்பினராகிய நான், தொடர்ந்து அமளியில் ஈடுபடும் ஜெயலலிதா கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், கொடநாட்டில் அரசு நிலத்தை கொள்ளையடித்தவர் ஜெயலலிதா என்று பதாகையை அவை முன்னவரிடம் காட்டினேன். ஊழலைப் பற்றி பேசுவதற்கு அருகதையற்றவர்கள் அதிமுகவினர் என்று சொன்னபோது, அதிமுக உறுப்பினர்கள் பாலகங்காவும், இளவரசனும் அந்த பதாகையை பறிக்க வந்தனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக