தலை முழுவதும் கட்டு, வெட்டப்பட்ட உதடுகள், உடலெங்கும் தீக்காயங்கள், உடைப்பட்ட எலும் புகளுடன் சவூதி மருத்துவமனையொன்றில் 23 வயதே நிரம்பிய இந்தோனேஷியாவைச் சேர்ந்த இளம் பணிப் பெண் சுமியாதி அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விடயம் இந்தோனேசியாவில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுமியாதி மட்டுமல்ல உலகம் முழுதிலுமிருந்து பணிப் பெண்களாக சவூதி செல்லும் பலர் இது போன்ற ஏதேனுமொரு கொடுமையை தொடர்ந்து அனுபவித்தே வருகின்றனர். கடந்த ஜூலை மாதம் குடும்பத்திற்கு உதவ வேண்டும் என்ற நோக்கில் பணிப் பெண்ணாக சவூதி சென்ற சுமியாதியின் இந்த கொடூர நிலை கடந்த ஒரு வாரமாக இந்தோனேசிய ஊடகங்களில் படங்களுடன் வெளியிடப்பட்டு வருகின்றன.
இளம்பெண்ணை கத்திரிக்கோல் கொண்டு உதடுகளை வெட்டியது, இரும்புக் கம்பி கொண்டு முதுகுப் பகுதியில் பலமாக அடித்தது, கால்களை அடித்து உடைத்தது உள்ளிட்ட பல குற்றங்கள் இவர் பணி செய்த வீட்டில் இருப்பவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சவூதி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் நினைவற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்தப் பெண் தற்போது தான் நினைவு திரும்பி ஓரிரு வார்த்தைகள் பேசுகிறார். எனினும் எழுந்து நடக்க முடியாத நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
தான் வேலை செய்த வீட்டில் இருந்த தாயும், மகளும் சேர்ந்து தன்னை எப்போதும் அடித்து துன்புறுத்தியதாக சுமியாதி தெரிவித்துள்ளார். விசாரணை நடத்திய பொலிஸார் அந்த வீட்டில் உள்ள பெண்மணியை சிறையில் அடைத்துள்ளனர். மனித உரிமை அமைப்புக்களும் சுமியாதிக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி வருகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக