அத்தியாயம் 7
சினிமாவில் இப்போதெல்லாம் டெஸ்ட் ஷூட் என்று சொல்லப்படுகிற ஆடிஷனும் எடுக்கப்படுகிறது. சமீபத்தில் வெற்றியடைந்த சுப்ரமணியபுரம், நாடோடிகள், லேட்டஸ்டாக வெளிவந்த இனிது இனிது படங்களுக்கு இந்த முறையை கடை பிடித்திருக்கிறார்கள். படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளை நடிக்க வைத்து படம் எடுப்பது. சாதாரண வீடியோ ஷூட்டிங்தான் இது என்றாலும் நடிப்பே வராத, அல்லது அந்த கேரக்டருக்கு பொருந்தாத நடிகர் நடிகைகளை அங்கேயே கழற்றிவிட இந்த முறை பெரிதும் உதவுகிறது. இந்த ஆடிஷன் ஒரு மினி ஷூட்டிங் போலவே நடப்பதால் நிச்சயம் உதவி இயக்குனர்களின் பங்கு நிறையவே இருக்கும்.
சேரனிடம் உதவி இயக்குனராக இருந்த சண்முகராஜ் தற்போது ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி என்ற படத்தை இயக்கி வருகிறார். தமிழ் சினிமாவில் யாரும் செய்யாத ஒரு விஷயத்தைச் செய்திருக்கிறார் இவர். தான் எடுக்க நினைத்த படத்தை சம்பந்தப்பட்ட நடிகர் நடிகைகளை வைத்து பீட்டா கேமிரா உதவியுடன் படமாகவே எடுத்துவிட்டார். இதில் பாடல் காட்சிகளும் கூட அடக்கம். எடுக்கப்பட்ட காட்சிகளை முறையாக எடிட் செய்து இரண்டரை மணி நேர படமாகவே உருவாக்கிவிட்டார் இவர்.
படப்பிடிப்புக்குத் தேவையான பெப்சி தொழிலாளர்கள்தான் பங்கு பெறவில்லையே தவிர, உதவி இயக்குனர்கள் அத்தனை பேரின் உதவியுடன் இந்த படம் உருவானது. தற்போது யூனிட், மற்றும் ஒளிப்பதிவாளர் துணையுடன் இந்த படத்தை திருவண்ணாமலை அருகே படமாக்கிக் கொண்டிருக்கிறார். இப்படி ஒரு முயற்சியை இதற்கு முன்பு யாரும் செய்யவில்லை என்று கம்பீரமாக சொல்லும் இவர், தனது உதவி இயக்குனர்கள் இல்லையென்றால் அது சாத்தியமே இல்லை என்கிறார்.
பூஜையின் போதே இது எந்த மாதிரி படம் என்று மக்களுக்குச் சொல்லவும், விநியோகஸ்தர்களின் பார்வையைத் தம் பக்கம் திருப்பவும் செய்யப்படும் மிகப்பெரிய செலவுதான் இந்த படத் துவக்க விழா. அழைப்பிதழ் விநியோகத்தில் துவங்கி, துவக்க விழா நடைபெறுகிற இடத்தில் வாழை மரமோ, கலர் கொடியோ கட்டுகிற வரைக்கும் இந்த வேலைகள் உதவி இயக்குனர்களின் தலையில்தான்! இந்த துவக்க விழாக்களில் பிரஸ் மீட் இருந்தால் அதற்கு தேவையான பிரஸ் கிட், மற்றும் போட்டோ சிடிகளை தயாரிக்கிற பணியை பிஆர்ஓ வுடன் சேர்ந்து செய்வதும் இந்த உதவி இயக்குனர்கள்தான். பின்பு பத்திரிகைகளில் வரும் அந்த செய்திகளை வெட்டி தனியாக ஒட்டி ஒரு ஆல்பமாக்கி தருகிற வேலைஆயும் இவர்களுக்குதான்.
படப்பிடிப்புக்குப் பின்….
படப்பிடிப்பு முடிந்தது. அடுத்து என்ன செய்யவேண்டும்? இதுவரை ஓடியது ஒரு ஓட்டம் என்றால் இப்போது ஓடப்போகிற ஓட்டம் சற்று வித்தியாசமானது. ஓட்டம் இருக்கும். ஆனால் இது ட்ரெட் மில் ஓட்டம். லேப், மற்றும் ஸ்டியோக்களுக்குள் அடைந்து கிடந்து கவனிக்கிற வேலை.
எடுத்த வரைக்குமான படத்தை டெலி சினி செய்ய வேண்டும். சினிமா எடிட்டிங் டிஜிட்டல் மயமாகிவிட்டது. பிலிம்களை கையில் வைத்துக் கொண்டு இடம் பார்த்து வெட்டுவதெல்லாம் பழைய ஸ்டைல். இப்போது இந்த டெலி சினி செய்யப்பட்ட பகுதிகளை கம்ப்யூட்டரில் பதிவு செய்து அதிலிருந்தே வெட்டிங், ஒட்டிங் செய்வதுதான் புதிய யுக்தி. இந்த முறைக்கு டெலிசினி ரொம்பவே உதவுகிறது.
இப்படி டெலிசினி செய்யப்பட்ட பிலிம்களை மறுபடியும் ஸ்கேன் செய்வார்கள். இந்த ஸ்கேன் செய்யப்பட்ட பகுதிகள்தான் டிஜிட்டல் இன்டர் மீடியேட் செய்யப்படும் என்பதால், இதை உயர்ந்த குவாலிடியோடு ஸ்கேன் செய்கிறார்களா என்பதையும் உதவி இயக்குனர் கண்காணிக்க வேண்டும். அதென்ன டிஜிட்டல் இன்டர்மீடியட்?
படத்தில் இடம்பெறக் கூடிய கிராபிக்ஸ் காட்சிகளை உருவாக்குகிற பகுதிதான் இது. கதையை உருவாக்கும்போதே எந்தெந்தக் காட்சிகளை கிராபிக்ஸ் செய்ய வேண்டும் என்று முடிவு செய்துவிடுவார்கள். பின்பு அந்தக் காட்சிகளுக்கு மட்டும் கிராபிக்ஸ் செய்வார்கள். இந்தப் பணி வேறொரு இடத்தில் நடந்து கொண்டிருக்கும். உதவி இயக்குனர்கள் அடிக்கடி சென்று கண்காணிக்க வேண்டும். கிராபிக்ஸ் வல்லுனர்களின் கற்பனை, காட்சியோடு சரியாக பொருந்துகிறதா, அல்லது குழந்தைகள் கிறுக்குவது போல சிறுபிள்ளைத் தனமாக இருக்கிறதா என்று பார்ப்பது இவர்களின் வேலை. இந்தப் பணிக்கு இரண்டு அல்லது மூன்று உதவி இயக்குனர்களை அனுப்பி வைப்பார் இயக்குனர்.
உதாரணத்திற்கு ஹீரோ ஹீரோயின் இருவரும் தாஜ்மஹால் உச்சியில் நின்று கொண்டு ஆடுவதாக வைத்துக் கொள்வோம். ஏற்கெனவே எங்காவது புல்வெளியிலோ மைதானத்திலோ இவர்கள் ஆடியிருப்பார்கள். அந்த பிம்பத்தை வெட்டியெடுத்து இந்த தாஜ்ஹால் உச்சியில் நிறுத்த வேண்டியது கிராபிக்ஸ் டிசைனரின் உழைப்பு. அப்படி உருவாக்கப்பட்டிருக்கிற அந்த தாஜ்மஹால், நம்ம ஊர் திருவிழாவில் நாலணாவுக்கு விற்கப்படுகிற பொம்மையின் தரத்துக்கு இருந்தால் ரசிகர்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாக வேண்டியிருக்கும். இங்கிலீஷ் படத்துல எல்லாம் என்னமா பண்றாங்க. இவங்களும் பண்ணியிருக்காங்களே… என்பார்கள் கூசாமல். அது ஒரிஜனல் தாஜ்மஹாலை போல இருக்கிறதா என்பதை கவனித்து இயக்குனரிடம் ஒப்பீனியன் செல்வது இந்த உதவி இயக்குனர்களின் வேலை.
இந்த இடத்தில் பட்ஜெட்டும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விஷயம். ஒரு வினாடிக்கு இவ்வளவு ரூபாய் என்று நிர்ணயம் செய்வார்கள் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு. பல இடங்களில் துட்டுக்கேற்ற தோசைதான். உதவி இயக்குனர் அதிகமான பர்பெக்ஷனுக்கு ஆசைப்பட்டிருப்பார். ஆனால் உங்க பட்ஜெட்டுக்கு இதுதான் முடியும் என்பார்கள் அந்த நிறுவனத்தில். இந்த நேரத்தில் பிடிவாதமாக சண்டை போடுவதை விட விஷயத்தை டைரக்டரிடம் சொல்லிவிட்டு ஒதுங்கிக் கொள்வதுதான் உதவி இயக்குனர்களுக்கு நல்லது.
இந்த டிஜிட்டல் முறையில் ஏற்கனவே எடுக்கப்பட்ட படத்தின் ஒளி அளவை கூட்டலாம். குறைக்கலாம். படம் முழுக்க ஒரு டோன் ஏற்படுத்தலாம். பாடல் காட்சிகளில் மழை பொழிய வைக்கலாம். நீல வானத்தை இன்னும் நீலமாக்கலாம். முக்கியமாக ஃபைட் சீன்களில் இவர்களின் கற்பனை அலாதியாகவும் அதிர்ச்சியூட்டுவதாகவும் இருக்கும். ஒரு படத்தில் கோபம் வரும்போதெல்லாம் ஹீரோவின் நரம்புகள் முறுக்கேறும். புடைக்கும். அந்த நரம்பு புடைப்பு ஏதோ நீலகிரி எக்ஸ்பிரஸ் வேகத்தில் மணிக்கட்டில் புறப்பட்டு கழுத்து பகுதியில் வந்து முடிவதை பார்த்திருப்பீர்கள். அந்தப் புண்ணியம் இந்த டிஜிட்டல் கலைஞர்களின் கற்பனைக்கும் உழைப்புக்கும்தான் போய் சேர வேண்டும்!
இப்படி உருவாக்கப்பட்ட கிராபிக்ஸ் காட்சிகளை படத்தில் இணைத்ததும் நெகட்டிவ் கட்டிங் என்று சொல்லப்படும் அடுத்த கட்ட பயணத்திற்கு தன்னை உட்படுத்துவார் உதவி இயக்குனர். இந்த நேரத்தில் எடிட்டிங் ரிப்போர்ட் எழுதிய உதவி இயக்குனர் கட்டாயம் இருக்க வேண்டும். மற்றவர்களும் கவனிக்கலாம். எடுக்கப்பட்ட ஷாட்டுகளை எடிட்டர் எப்படி பயன்படுத்துகிறார். அந்த ஷாட்டுகளை எந்த அளவில் கட் பண்ணுகிறார் என்பதை தெரிந்து கொள்ள இது உதவும். அது மட்டுமல்ல, சாதாரணமாக எடுக்கப்பட்ட ஒரு ஷாட்டை கூட சாஃப்ட்வேர் உதவியால் எப்படியெல்லாம் விதவிதமாக மாற்றுகிறார் எடிட்டர் என்பதையும் அறிந்து கொள்ளலாம். இப்படி மாற்றும்போது அந்த ஷாட்டில் ஒரு அர்த்தம் இருக்க வேண்டும்.
கல்யாண வீட்டில் வீடியோ கிராபர்களின் ஆனந்த தாண்டவத்தை நாமெல்லாம் கவனித்திருப்போம். நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் திரையில் ஏதேதோ ஜாலம் காட்டுவார்கள். திடீரென்று நட்சத்திரத்தில் தோன்றுவார் மணப்பெண். அப்படியே அவரை ஒரு ரோஜா பூவிற்குள் கொண்டு போய் பொருத்துவார்கள். எல்லாம் சரி. தாலி கட்டுகிற நேரத்திலும் கூட ஏதேதோ ஜிக்ஜாக் செய்து அந்த காட்சியையே துவம்சம் செய்துவிடுவார்கள் சிலர். சில எடிட்டர்களிடம் கூட அதை பார்க்கலாம். அதனால் உதவி இயக்குனர்கள் கவனிக்க வேண்டியது இதுதான். எடிட்டர் செய்யும் யுக்திகள் அர்த்தத்தோடு அமைந்திருக்கிறதா? காட்சியை அது எந்த விதத்திலும் சிதைக்காமல் இருக்கிறதா? இது குறித்து எடிட்டரிடம் விவாதிக்கிற அதிகாரம் உதவி இயக்குனர்களுக்கு இல்லையென்றாலும், கோ டைரக்டரிடமோ, டைரக்டரிடமோ சொல்லி அந்த பகுதியை கவனிக்க சொல்லலாம்.
-தொடரும
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக