தடம் மாறும் யாழ்ப்பாணம்
உதிஷ்டிரன்
யாழ்ப்பாண நகரின் மத்தியில் எழிலுற தனக்கேயுரிய மிடுக்குடன் அமைந்திருக்கிறது அந்தப் பாடசாலை. அப்பிரபல பாடசாலையில் கல்வி கற்ற பலர் இன்றும் புகழ்பூத்த கல்விமான்களாக மிளிர்ந்து கொண்டிருக்கின்றனர். உள்நாட்டில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் கூட அந்தப் பாடசாலையில் பயின்றவர்கள் புகழ் பெறும் அளவிற்கு அப்பாடசாலையின் கல்வித்தரம் அன்றே மேலோங்கியிருந்தது. பல சீர் மிகு கல்வியாளர்களை உருவாக்க்கிய கலைக்கூடத்திற்கு தனிப்பட்ட அலுவல் ஒன்றின் நிமித்தம் அண்மையில் விஜயம் செய்த பாக்கியம் கிடைத்தது. அங்கு கல்வி கற்கும் ஆசிரியர் ஒருவரைச் சந்திப்பதற்காகவே சென்றிருந்தேன்.
அந்நேரம் அப்பாடசாலை ஆரவாரமின்றி இயல்பாக இருந்தது. வழமையை விட உயர்தர வகுப்பு மாணவர்களின் வரவு பெருமளவு வீழ்ச்சி கண்டிருந்தது. மரணச்சடங்குக்கோ அல்லது ஏதோவொரு விஷேட நிகழ்வுக்கோ சென்றுவிட்டார்களாக்கும் என்ற நினைப்பு என் மனதில் துளிர் விட்டது. இருந்தும் நான் வந்த ஆசிரியரைச் சந்திக்கும் நோக்கம் பூர்த்தியாகிய பின் அந்த ஆசிரியரிடமே மாணவர்களின் வருகை வீழ்ச்சி குறித்த சந்தேகத்தை வினாவினேன். அதற்கு அந்த ஆசிரியர் கூறிய பதில் என்னை சற்றே அசர வைத்தது.
"இன்று எந்திரன் படம் வெளிவருகிறதாம். அதனால்தான் பொடியள் படம் பார்க்கப் போட்டாங்கள்" என்றார் சாதாரணமாக. எப்படி இருக்கிறது நிலைமை. யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்கள் ஒரு காலத்தில் கல்வித்துறையில் கொடி கட்டிப் பறந்தார்கள். முன்னரெல்லாம் கல்வியே கருத்தென இருந்தார்கள். எமது வாழ்க்கையின் அச்சாணியாக கல்வித்துறை விளங்கியது. இதற்கு அன்றைய யாழ்ப்பாண நூலகம் சாட்சியாக இருந்தது. அந்நூலகத்தில் தவழ்ந்து விளையாடிய பலர் இன்றும் உயர் பதவிகளில் பல தேசங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.அத்தகைய கல்வியின் உறைவிடமான அரும்பெரும் பொக்கிஷமான இந்நூலகம் முன்னர் இருந்த அதே பொலிவுடன் இன்று இல்லையே என நினைக்கும் போது வேதனைதான் மிஞ்சுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த நூலகத்தின் வீழ்ச்சி எம்மினத்தின் வீழ்ச்சிக்கு நிலைக்களமாக அமைந்தது என்று கூறினால் தவறாகாது. அந்தளவிற்குத் தென் ஆசியாவிலே பிரமாண்டமான நூல் நிலையமாக ஏறக்குறைய 1 இலட்சம் புத்தகங்களை தன்னகத்தே கொண்டு விளங்கிய பெருமை யாழ் நூலகத்தையே சாரும்.
இன்று குடா நாட்டின் கல்வித்தரம் கீழ்நிலைக்குச் சென்றதற்கு சினிமாக்களின் வரவுகளும் ஒரு காரணம் என்று சொன்னால் அது பிழையில்லை. சினிமாத்துறையின் அசுர எழுச்சியானது கல்வித்துறை மீதான மாணவர்களின் நாட்டத்தை, ஈடுபாட்டைக் குறைத்துள்ளது. சினிமாவானது எந்தளவிற்கு எமது சமூகத்தின் மீது தாக்கம் செலுத்தி வருகிறது என்பதற்கு யாழ்ப்பாண நகரில் இருக்கின்ற திரையரங்குகளின் எண்ணிக்கைகளைக்கொண்டு அறியலாம்.
யாழ்ப்பாண நகரில் அமைந்திருக்கும் திரையரங்குகளுக்கு ஒரு முறை சென்றால் அங்கு அரங்கேறும் அலங்கோலக்காட்சிகள் காண்போரை முகம் சுழிக்க வைக்கின்றன. அந்த அளவிற்கு கலாசார சீர்கேட்டின் உச்சத்தை அங்கு தரிசிக்கலாம். முன்னரெல்லாம் சினிமாத்திரையரங்குகளிற்கு சென்று படம் பார்க்கும் வழக்கம் எம்மவரிடையே இருந்ததுதான். தென் இந்தியாவிலே ஒரு புதிய படம் வெளிவருகின்றது என்றால் இங்கிருந்து கூட தென் இந்தியாவிற்கு இரவில் கடல் வழியாகச் சென்று படம் பார்த்து விட்டு விடியற்காலையிலே வந்து விடுவார்கள் என முதியவர் ஒருவர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அந்தளவிற்கு சினிமா மக்களை கட்டிப்போட்டிருந்தது உண்மைதான். ஆனால், இன்றுள்ள சினிமாத்துறையின் அடிநாதமே வேறு. சமூக கலாசாரச் சீரழிவுகளுக்குத் தூபமிடுபவையாகவே இன்றைய சினிமாக்களின் வரவு அமைந்திருக்கிறது. முற்றிலும் வருமானத்தைக் குறியாகக் கொண்டு தயாரிக்கப்படும் திரைப்படங்கள் மக்களின் வாழ்வியலில் பல்வேறுபட்ட தாக்கங்களைச் செலுத்துகின்றன. முன்னரெல்லாம் குடும்பப்பாங்கான சமூகப்பிரச்சினையை பிரதிபலிக்கும் படங்களே வெளியாகியிருந்தன. ஆனால், இன்று நிலைமை முற்றிலும் தலை கீழாக மாறியிருக்கிறது.
படம் பார்க்கவென ஒரு சினிமாத்திரையரங்குக்குள் நுழைந்தால் பல அலங்கோலமான காட்சிகளே எம் முன்விரியும். குடும்பத்துடன் இருந்து படம் பார்ப்பதற்கே கூசும் அளவிற்கு அக்காட்சிகள் விரசம் ததும்பும் வகையில் அமைந்திருக்கும். அது மட்டுமன்றி அப்படத்தை பார்ப்பதற்கென குடாநாட்டின் பல இடங்களில் இருந்தும் காதலர்கள் என்ற போர்வையில் உள்நுழையும் இளஞ்சோடிகள் செய்யும் காமலீலைகள் சகிக்க முடியாதளவிற்கு அருவருப்பூட்டுவனவாக இருக்கும். இத்தகைய அனுபவங்களை யாழ் குடாநாட்டில் உள்ள ஒரு திரையரங்கிற்கு சென்று பார்த்தால் தெரிந்திருக்கும். சகிக்க முடியாத அளவிற்கு இளம் காதலர்கள் நடத்தும் அலங்கோலங்கள் அம்பலத்தில் அரங்கேறுகின்றன.
முன்னரெல்லாம் பெண்கள் திரையரங்குகளிற்குச் செல்ல மாட்டார்கள். அப்படித் திரையரங்கிற்குச் சென்றாலும் கணவனுடனோ அல்லது குடும்பத்தாருடனோ சென்றுதான் படம் பார்ப்பார்கள். ஆனால், இன்று நிலைமை அப்படி இல்லை. முன்பின் தெரியாத ஆடவனுடனோ அல்லது ஆண் நண்பன் என்ற ரூபத்தில் பழகும் இளைஞனுடனோ அல்லது சக வகுப்பு மாணவனுடனோ சென்று சேர்ந்திருந்து படம் பார்க்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இத்தகைய சம்பவங்கள்தான் வீதியில் அநாதரவாக கைவிடப்பட்டிருக்கும் சிசுக்களாக மாறுவதற்கு வழிகோலுகின்றன. காதல் சோடிகளுக்கென்றே பிரத்தியேகமான முறையில் திரையரங்குகளில் அமைக்கப்பட்டிருக்கும் மறைவான இருக்ககைள் காதல் லீலைகளை அரங்கேற்றுவதற்கு வாய்ப்புக்களை வழங்குகின்றன.
தவிரவும் பல இளைஞர்கள் மதுபோதையில் ரகளை செய்வது, புகைப்பிடிப்பது குடும்பத்துடன் படம் பார்க்கவரும் பெண்களுடன் சேட்டைகள் விடுவது போன்ற பல அட்டூழியங்களில் ஈடுபடும் நிகழ்வுகள் குடாநாட்டு திரையரங்குகளில் காணமுடிகிறது. கூட்டம் கூட்டமாக வரும் இளைஞர்களின் அட்டகாசத்தை தட்டிக்கேட்பதற்கு கூட ஒருவரும் முன்வருவதில்லை. ஏன் திரையரங்கு நிர்வாகம் கூட நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது. காரணம் காலம், சூழ்நிலை என்பவை இவ் இளைஞர்களுக்கு அசாத்திய துணிச்சல்களுக்கு வழியேற்படுத்திக் கொடுக்கின்றன.
அங்கு வரும் இளைஞர்களில் பலர் பாடசாலைகளில் பயிலும் மாணவர்களே என்பது சோகம் தரும் விடயமாகும். எழுது கோல் ஏந்தும் கைவிரல்கள் சிகரெட்களை ஏந்தியவாறு படங்களில் வரும் கதாநாயகர்களாகத் தம்மைக் கற்பனை செய்து விடும் புகைகள் அத்திரையரங்கு முழுவதும் ஒரே புகைமூட்டமாக கவிந்திருக்கும். மற்றையவர்கள் சுதந்திரமாகப் படம் பார்ப்பதற்குக் கூடத் தடை ஏற்படுத்தப்படுகின்றது.
'தட்டிக் கேட்க ஆள் இல்லாவிட்டால் தம்பி சண்டப்பிரசண்டன்' என்ற பழமொழியை மெய்ப்பிப்பது போலவே அவ் இளைஞர்களின் காடைத்தனம் மேலெழுகின்றது. ஆக, எமது சமூகம் இன்று அநாதரவான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எமது கலாசார விழுமியங்களிலிருந்து எம் சமூகம் அந்நியப்பட்டுச் சென்று கொண்டிருப்பதானது சமூகப்பிரக்ஞை உள்ளவர்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
ஒர் இனத்தின் வீழ்ச்சி என்பது அவ் இனத்தின் கலாசார சீரழிவின் உச்சத்தில் தங்கியுள்ளது. எமது பழம் பெருமை மிக்க பண்பாட்டு கூறுகள் கூட எமது வரலாற்றுப் புத்தகத்தில் நித்தியப்படுத்தப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் 'சிவபூமி' என்றும் 'யாழ்ப்பாண கலாசாரம் கந்தபுராணகலாசாரம்' என்றெல்லாம் பல்வேறு அறிஞர் பெருமக்களால் சிலாகித்துரைக்ப்பட்டுவரும் நிலையில், எமது கலாசார அடையாளங்கள் உன்னத இடத்தைப் பெற்றிருந்தன. ஆனால், அத்தகைய உயர் கலை கலாசார பண்பாட்டு விழுமியங்கள் எல்லாம் இன்று சிதைவடைந்து நலிவடைந்து செல்வது எமது இனத்திற்கு ஆரோக்கியமானதல்ல என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.
எனவே எமது முன்னோர்களால் கட்டிக்காத்து வளர்க்கப்பட்டு வந்த எமது பண்பாட்டு விழுமியங்கள் தொடர்ந்து வரும் எமது சந்ததிக்கும் முதுசொம்களாகப் பேணிக்காத்து வழங்க நாம் அனைவரும் முன்வரவேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு ஆகும்.
- யாழ்மண் -
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக