சனி, 27 நவம்பர், 2010

Kamalahasan:உதவுவதால் நான் தியாகி இல்லை, இது என் கடமை! - கமல்ஹாசன்

 
                    னது ரசிகர் மன்றங்களை நற்பணி இயக்கங்களாக மாற்றிய முதல் நடிகர் கமல்ஹாசன் தான். பல சமூக பிரச்சனை களுக்காக தனது பல்வேறு தருணங்களில் தனது முழு ஆதரவையும் அளித்து வரும் நடிகர்களில் கமல்ஹாசன் முக்கியமானவர். தனது 'மன்மதன் அம்பு' படத்தின் ரிலீஸ் வேலைகள் இருந்தாலும் 'பெற்றால் தான் பிள்ளையா?' என்ற பிரச்சாரத்தின் மூலம் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தேவையான ஆதரவை திரட்டி வருகிறார் கமல்.

 

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் சார்பில், ஊடக கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று (27.11.2010) நடைபெற்றது. இதில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டார். 

கமல்ஹாசன் பேசுகையில், எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தகுந்த சரியான கல்வி, ஊட்டச்சத்தான உணவு மற்றும் மருத்துவ சிகிச்சைகள் கிடைக்கச் செய்வது நாம் ஒவ்வொருவரின் கடமை. பொதுமக்களின் ஆதரவு பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வாழ்வில் பெரும் மாற்றத்தினை உருவாக்கும். ஒவ்வொரு குழந்தைக்கும் கனவுகள் உண்டு. அவர்களின் கனவுகளை நினைவாக்க நாம் அவர்களுக்கு உதவ வேண்டும். 

இந்த குழந்தைகளுக்கு உதவ நான் சித்தமாய் இருக்கிறேன் என்பதை அவர்களிடம் நான் தெரிவித்தேன் அதற்காக அவர்கள் என்னை பாராட்டினார்கள், பாராட்டுவதற்காக அதை நான் செய்யவில்லை. இது என் கடமையாகவே நான் நினைக்கிறேன். நாம் நமக்குள்ளே ஒருவருக் கொருவர் பாராட்டிக் கொண்டே இருக்க வேண்டாம், சமுதாயத்தில் நமக்கான வேலைகள் நிறைய இருக்கிறது. இது நான் செய்ய வேண்டிய கடமை என்பதை விட, நாம் செய்ய வேண்டிய கடமை. எல்லோரும் சேர்ந்தால் சுமையைக் குறைக்க முடியும். எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட சில குழந்தைகளை நான் நேரில் சந்தித்தேன். அவர்களைப் பார்க்கும் போது தான், நான் செய்ய வேண்டிய கடமைகளை நான் உணர்தேன்.



இதுவரை என்னை நீங்கள் விளம்பர படங்களில் பார்த்திருக்கவே முடியாது. விளம்பரங்களில் வரும் சம்பாத்தியம் எனக்கு தேவையில்லை என்று நினைத்து   தேடி வந்த பல வாய்ப்புகளை எல்லாம், கொள்கை ரீதியாக உதறித் தள்ளியவன் நான். ஆனால் அரசாங்கத்திற்கு எங்களுடைய உள்ளுணர்வை தெரிவிக்கும் வகையில் ஒரு முதல் அடியை எடுத்து வைக்கலாம் என்றே நினைக்கிறேன். 

நான் விளம்பரப் படங்கள் செய்வதாக இருந்தால் அந்த பணத்தை தொடமாட்டேன். அதை அப்படியே இந்த சமுதாய வளர்ச்சிக்கு பயன்படுத்துவதாக இருந்தால் விளம்பரப் படங்களில் நடிக்க நான் தயார். என்னுடைய வருவாய் எனக்கு வசதியாக இருக்கும் என்பதை என் கலை உலகம் எனக்கு கொடுத்துள்ளது. 250  சம்பளத்தில் வேலையை துவங்கினேன். 10,000  ருபாய் சம்பாதித்தால் அதுவே போதும் என்று நான் நினைத்தது உண்டு. ஒரு லட்சம் சம்பளம் கொடுத்தால் ஒரு படம் மட்டும் நடித்து விட்டு அப்படியே வசதியாக இருக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் இன்று கோடிகளை எட்டிய பிறகு தான்... நான் நினைத்த வாழ்கையை வாழ்ந்து பார்க்க முடிந்தது.

மற்ற நடிகர்கள் எல்லாம் எத்தனையோ சந்தர்பத்தில் விளம்பர படங்களில் என்னை நடிக்க சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அப்போது நான் மறுத்து விட்டேன். பொருட்கள் விற்பது என் வேலை இல்லை. எனக்கு தெரிந்த வேலை சினிமா மட்டுமே. அதனால் தான் 25  வருடமாக அந்த வேலையை நான் நிராகரித்து வந்தேன். ஆனால் விளம்பரப் படங்களில் நான் நடிப்பதால் அதில் வரும் பணம் இப்படி ஒரு நல்ல செயலுக்கு உதவுமேயானால் அதை செய்ய நான் தயார்.

அரசாங்கத்திடம் ஒரே ஒரு வேண்டுகோள், ஒரு தனி மனிதனாக நான் என்ன கொடுக்கிறேனோ, அதே மாதிரி இரண்டு மடங்கு பணம் நீங்கள் கொடுத்து விடுங்கள். இதை நிர்பந்தமாக வைக்க முடியாது 
என்றாலும் ஒரு வேண்டுதலாகவே வைக்கிறேன்.  

என்னென்ன உதவிகள் என்னால் செய்ய முடியுமோ அதை நான் செய்ய தயாராக இருக்கிறேன். இதை ஒவ்வொருவரும் செய்ய வேண்டும் என்பதே என் வேண்டுகோள். நான் செய்வதை தியாகமாக நான் கருதவில்லை. இதுவரை வேண்டாம் என்று ஒதுக்கி வைத்ததை இவர்களிடம் கொடுக்கிறேன். உங்களிடமும் ஏதாவது அப்படி இருக்குமேயானால் அதை இதற்காக பயன்படுத்துங்கள் என்றார்.

கமலின் 'பெற்றால் தான் பிள்ளையா?' என்ற இந்த பிரசாரத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நடிகை திரிஷா, நடிகர்கள் மாதவன், ரமேஷ் அரவிந்த் போன்றவர்கள் முன்வந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: