நிதீஷ் குமாருக்கு மீண்டும் வாழ்த்துகள் கடந்த ஐந்தாண்டுகளில் இந்தியாவில் ஏதேனும் ஒரு மாநிலத்தில் மிக அதிகமான அளவில் வளர்ச்சி நடந்திருந்தது என்றால் அது பிகார்தான்.
அதன் காரணமாகவே, மைக்கைப் பிடித்து அடித்து அசத்திப் பேசத் தெரியாத நிதீஷ் குமார் + பாஜக கூட்டணி அபார அளவில் வெற்றிபெற்று பிகாரில் ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது.
வெற்றிக்குக் காரணமாக அனைவரும் சொல்வது: சட்டம் ஒழுங்கை நேர்ப்படுத்தினார்; சாலைகளைப் போட்டார்; ஊழலை முடிந்தவரை கட்டுப்படுத்தினார்; கல்விக்கான வாய்ப்புகள் அதிகப்படுத்தப்பட்டது.
சரியாக, ஐந்து ஆண்டுகளுக்குமுன் நான் எழுதிய பதிவு
இரண்டு தேர்தல்களுக்குமுன் நடந்த தேர்தலில் லாலு பிரசாத்தின் கூட்டணிக்கு சரியாக மேண்டேட் கிடைக்கவில்லை. நிதீஷ் ஒரு கூட்டணியை உருவாக்கிக்கொண்டு ஆட்சியை அமைத்தார். ஆனால் காங்கிரஸ் தன் டகால்டி வேலைகளைச் செய்து மாஸ்கோவில் இருக்கும் அன்றைய ஜனாதிபதி அப்துல் கலாமிடம் கையெழுத்து வாங்கி அந்த ஆட்சியைக் கலைத்தது. தொடர்ந்து நடந்த தேர்தலில் நிதீஷ் குமார் + பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கமுடிந்தது.
நிதீஷுக்கும் பாஜகவினருக்கும் உரசல்கள் இருந்தாலும், ஆட்சி நடத்துவதில் சிக்கல் ஏதும் இல்லை.
ஆனால் ஒன்றுமே இல்லாத இடத்தில் சில முன்னேற்றங்களைக் காட்டுவது எளிது. வரும் ஐந்தாண்டுகளில் நிதீஷ் என்ன செய்யப்போகிறார் என்பதுதான் சவாலே. இந்த ஐந்தாண்டுகளில் கிட்டத்தட்ட தென் மாநிலங்கள் அளவுக்கு வளர்ச்சியைக் காண்பிக்கவேண்டி இருக்கும். அதற்குத் தேவையான மனித வளம் அவர்களிடம் இல்லை. இந்தியாவில் பல மாநிலங்களில் பரவியிருக்கும் பிகாரிகள் அனைவரும் அந்த மாநிலத்துக்குச் சென்றால்கூட இது மிகவும் கடினமானது.பார்ப்போம், என்ன செய்கிறார்கள் என்று.
காங்கிரஸ் படுபயங்கரமாக அடிவாங்கியதும் ஒருவிதத்தில் நல்லதே. நிதீஷ் குமாரின் யோசனையைக் கேட்டு ராகுல் காந்தி ஒன்று செய்யவேண்டும். பேசாமல் உத்தரப் பிரதேசத்துக்குச் சென்று, அடுத்த மாநிலத் தேர்தலில் தன்னை முதலமைச்சர் பதவிக்கு முன்வைத்து பிரசாரத்தை ஆரம்பிக்கவேண்டும். ஒருவேளை அவரும் காங்கிரஸும் ஜெயிக்க வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து ஐந்தாண்டுகள் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலத்தை ஆட்சி செய்து, பிரச்னைகளைச் சமாளித்து, வளர்ச்சியைக் கொண்டுவந்தால், இந்தியப் பிரதமராக அவரை நினைத்துப்பார்ப்பதில் பெரும்பாலானோருக்கு சிக்கல் இருக்காது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக