Part two
இந்துப் பத்திரிகையின் ஆசிரியர் என்.ராமுக்கு ஜனாதிபதி வழங்கிய செவ்வி
கடந்து சென்றவை கடந்து சென்றவைதான், காயங்களைக் கிளற வேண்டாம். இடைவெளியை அதிகரிக்காதீர்.நாங்கள் சாதகமான முறையில் சிந்திப்பது அவசியம்' என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சர்வதேச சமூகத்திற்கு தெரிவித்திருக்கிறார்.இந்துப் பத்திரிகையின் ஆசிரியர் என்.ராமுக்கு அலரி மாளிகையில் அளித்த ஒரு மணித்தியாலய பேட்டியின் இறுதி அங்கத்தில் இதனை அவர் கூறியுள்ளார்.
இலங்கையில் மும்மொழிச் சமூகத்தை உருவாக்கும் ஜனாதிபதியின் நோக்கங்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகள் மற்றும் ஆங்கில மொழியின் பங்களிப்பு, சர்ச்சைக்குரிய அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தம்,சரத் பொன்சேகா சிறையில் வைக்கப்பட்டிருக்கின்றமை,11 ஆயிரம் புலி உறுப்பினர்கள் ஆதரவாளர்களின் நிலைமையும் எதிர்காலமும் இந்தியாவுடனான உறவுகள் என்பன தொடர்பாக இப்பேட்டியில் ஜனாதிபதி பதிலளித்திருக்கிறார். அதனை இந்துப் பத்திரிகை நேற்று செவ்வாய்க்கிழமை பிரசுரித்திருக்கிறது. பேட்டி விபரம் வருமாறு:
- *மொழிக் கொள்கை தொடர்பாக நீங்கள் விசேடமான ஆர்வத்தைக் கொண்டிருக்கிறீர்கள். மும்மொழி இலங்கைக்கான பத்து வருட முன்முயற்சியை நீங்கள் அறிவித்துள்ளீர்கள். அதற்கு முன்னர் ஆங்கிலத்தை மேம்படுத்துவதற்கான மும்முயற்சியையும் கொண்டுள்ளீர்கள். நீண்டகாலத்தை அடிப்படையாகக் கொண்ட சிந்தனையாக இது தோன்றுகிறது. இது எவ்வாறு இடம்பெறுமென நீங்கள் காண்கிறீர்கள்?
கடந்த ஆண்டானது ஆங்கிலம்,தகவல் தொழில்நுட்பத்துக்கான வருடமாக இருந்தது. மக்கள் ஆங்கிலத்தைப் பேச ஆரம்பித்திருந்தனர்.அவர்கள் ஆங்கிலத்தைக் கற்க ஆரம்பித்திருக்கின்றனர். ஆதலால் சகல சிங்களவர்களும் இப்போது தமிழைக் கற்பது சிறப்பானதென நான் நினைத்தேன். அதேபோன்று தமிழர்களும் சிங்களத்தைக் கற்பது அவசியமாகும். யாவரும் ஆங்கிலத்தைக் கற்பதுடன், போதிய அறிவையும் பெற்றுக்கொள்ள வேண்டும். சர்வதேச ரீதியான அறிவைப் பெற வேண்டும். ஆதலால் மும்மொழி முயற்சியை ஆரம்பிப்பது சிறப்பானதென நாம் நினைத்தோம். 2020 ஆம் ஆண்டை இலக்காக நாம் வைத்திருக்கின்றோம். இதில் வெற்றிபெற முடியுமென நாம் நினைக்கிறோம். இதில் ஒரு பிரச்சினயாக இருப்பதாக ஆசிரியர்கள் ஆகும். ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்க வேண்டியுள்ளது. ஆனால், அந்தச் சவாலை நாம் எதிர்கொள்வோம்.
- இந்த முன்முயற்சியின் ஒருங்கிணைப்பாளரான சுனிமால் பெர்னாண்டோ இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட சமூக,மொழியியல் கணிப்பீடுகள் குறித்து எனக்குக் கூறியுள்ளார். பரஸ்பரம் மொழியைக் கற்றுக்கொள்வதில் சிங்களவர்கள் மற்றும் தமிழர்கள் மத்தியில் ஆச்சரியமான விதத்தில் ஆதரவும் உற்சாகமும் இருப்பதாக அந்தக் கணிப்பீட்டில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த விடயமானது தங்களுக்குக்கூட ஆச்சரியமானதாக இருக்கும்.
ஆம். இதனை நான் பார்த்திருக்கிறேன். தேர்ச்சியின் அளவு மட்டத்திற்கமைவாக அரச ஊழியர்கள் ரூபா பத்தாயிரத்திலிருந்து ரூபா 25 ஆயிரம் வரை பெற்றுக்கொள்கின்றனர். அதாவது 2 ஆவது மொழியைக் கற்பதற்காக இதனைப் பெற்றுக்கொள்கின்றனர்.சிங்களவர்கள் தமிழைக் கற்பதன் மூலமோ அல்லது தமிழர்கள் சிங்களத்தைக் கற்பதன் மூலமோ இதனைப் பெற்றுக்கொள்கின்றனர். நாம் அவர்களுக்குக் கொடுப்பனவுகளை வழங்குகிறோம். இந்த மாதிரியாக அரச ஊழியருக்கு எந்தவொரு நாடும் கொடுப்பனவுகளை வழங்கும் என நான் நினைக்கவில்லை. இந்த விடயத்தில் நாம் தீவிரமாகவுள்ளோம்.
- * ஆங்கில,தகவல் தொழில்நுட்ப வருடத்தை 2009 இல் நீங்கள் ஆரம்பித்து வைத்தபோது தாங்கள் ஆற்றிய உரையில் சுவாரஸ்யமான அறிக்கையொன்றை விடுத்திருந்தீர்கள். முதலில் சிங்களமும் தமிழும் பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள். சிங்களமும் தமிழும் தொடர்பாடல்களுக்கான வெறும் கருவிகள் அல்ல எனவும் பெறுமானங்கள் உலக அபிப்பிராயங்களை உள்வாங்குவதாக இருக்க வேண்டுமெனக் கூறியிருந்தீர்கள். ஆங்கிலமானது வாழ்க்கைத் தேர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் வேலைவாய்ப்புக்கு அது தேவைப்படுகின்றது. பின்னர் நீங்கள் மிகவும் ஆர்வமான விடயமொன்றைக் குறிப்பிட்டிருந்தீர்கள்."கடந்த காலத்தை முழுமையாக உடைத்துக் கொள்வதை நாங்கள் உறுதிப்படுத்துவோம். எமது தேசிய கலாசாரங்கள், தேசிய அடையாளத்துவம் தொடர்பாக பிரியம் காட்டாத தன்மையை உருவாக்கும் வாகனமாக ஆங்கிலம் இருந்தது. ஆதலால் சிங்களம் மற்றும் தமிழைக் கற்பதன் மூலம் தரமான தனித்துவத்தை நீங்கள் உருவாக்குகிறீர்கள். ஆங்கிலமானது வாழ்க்கைக்கான தேர்ச்சியாக உள்ளது' என்று கூறியிருந்தீர்கள். ஆனால், கடந்த காலத்தை முறித்துக்கொள்வதானது இலங்கையில் உண்மையான பிரச்சினையாகவுள்ளதா? ஆங்கிலம் அறிந்த மேல்தட்டு வர்க்கத்தினரையும் மக்களையும் வேறுபடுத்துவது இலங்கையில் உண்மையான பிரச்சினையாக இருந்ததா?
ஆம்.ஏனெனில் ஆங்கிலமானது மேல்தட்டு வர்க்கத்தினருக்கு உரியதென சகலரும் நினைத்தனர். மேல்தட்டு வர்க்கத்தினர் இதனைக் கத்தியாகப் பயன்படுத்தினர். சிங்களத்தில் இது கடுவா என அழைக்கப்படுகிறது. ஆங்கில அறிவை மேல்தட்டு வர்க்கத்தினர் கிராமங்களிலிருந்து ஏனையோரைத் துண்டிப்பதற்குப் பயன்படுத்தினர். இது மிகவும் முன்னணியிலுள்ள சமூகமாகும். விசேடமாக கொழும்பில் உள்ளது. ஆங்கிலம் தெரியாத மக்கள் தாழ்ந்த மட்டத்தில் பார்க்கப்பட வேண்டியவர்கள் என அவர்கள் நினைத்தார்கள். இப்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தன்மையை மாற்ற நாம் விரும்பினோம்.
- மும்மொழி முயற்சியானது உண்மையில் தனது இலக்கில் வெற்றி அடையுமானால் அதுவொரு தனித்துவமான வெற்றியாக அமையும். இந்த மாதிரியான முயற்சியில் சில நாடுகளே ஈடுபட்டுள்ளன.
ஆம்.
- ஜனாதிபதியின் பதவிக் காலத்துக்கு இருந்த இருதடவை தடையை அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக அகற்றுவதன் பின்னணி தொடர்பாக தாங்கள் எதனைச் சிந்தித்திருந்தீர்கள் என்பது பற்றிக் கூற முடியுமா? இது தொடர்பாக சர்வதேச மட்டத்தில் கருத்துக் காணப்பட்டது. இந்த மாற்றம் குறித்து விமர்சனம் ஏற்பட்டிருந்தது.
பல்வேறு தலைவர்களின் இரண்டாவது பதவிக் காலத்தை நான் பார்த்துள்ளேன். இலங்கையில் மட்டுமல்ல, ஏனைய நாடுகளிலும் இதனைப் பார்த்திருக்கிறேன். ஏனெனில் முதலாவது வருடத்தில் (இரண்டாவது பதவிக்காலத்தில்) உங்களால் வேலை செய்ய முடியும். நீங்கள் வாக்குறுதிகளை அளிப்பீர்கள். முதல் வருடத்தில் பணியாற்ற முடியும். இரண்டாவது வருடம் வரும்போது கட்சிக்குள் அடுத்த தலைவர் யாரென அறிவதற்கு மோதல் ஆரம்பிக்கும். அரச ஊழியர்கள் அடுத்த தலைவர் யாரென பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் பணியாற்றமாட்டார்கள். ஜனாதிபதி செயற்பட முடியாதவராக இருப்பார். சந்திரிகாவின் கடைசிப் பதவிக் காலத்தில் என்ன நடந்ததென்பதைப் பாருங்கள். ஜே.ஆர்.ஜயவர்த்தனாவிற்கு என்ன நடந்ததென்பதைப் பாருங்கள். ஏனையோருக்கு என்ன நடந்தது. நான் அதனைப் பார்த்துள்ளேன். ஆதலால் அந்தப் பொறிக்குள் நான் செல்லவில்லை. ஆதலால் போட்டியிடுவதோ, இல்லையோ அது வேறு விடயம். அதற்குள் இருந்து விடுபடுவது சிறப்பானதென நான் நினைத்தேன். ஏனெனில் இரண்டாவது பதவிக் காலத்தின் ஆறு வருடங்களை மக்கள் எனக்குத் தந்துள்ளனர். ஏனெனில் முதலாவது பதவிக் காலத்தில் நான் வெற்றி கண்டுள்ளேன். எனக்கு அந்தச் சுதந்திரம் இருப்பது அவசியமாகும். சதிகளில்லாமல் மக்கள் மத்தியிலிருந்து தள்ளிவிடப்படாமல் விசேடமாக அரச ஊழியர்களிடமிருந்து தள்ளிவிடப்படாமல் அந்தச் சுதந்திரம் எனக்கு இருப்பது அவசியமாகும். இரண்டாவது பதவிக்காலமானது மிகவும் முக்கியமானதாகும். மக்களுக்கான அபிவிருத்தியை வென்றெடுப்பதற்கு அது அவசியம். அதற்கான ஆணையை மக்கள் எனக்கு வழங்கியுள்ளனர். அதனாலேயே நான் இதனைச் செய்தேன். மூன்றாவது பதவிக்காலத்துக்கோ அல்லது நான்காவது பதவிக்காலத்துக்கோ நான் போட்டியிடப்போகிறேனா என்பது விடயமல்ல. இது அந்த மாதிரியான ஒன்றல்ல. பொதுவாக இந்த விடயம் (இருதடவை பதவிக்கால வரையறை) எமது தலைவர்களை இரண்டாவது பதவிக் காலத்தின்போது செயற்பட முடியாதவர்களாக உருவாக்கியிருந்தது.
- இலங்கையின் அரசியல் கட்டமைப்பானது பாராளுமன்றத்திலிருந்து ஜனாதிபதியை தூர விலத்தி வைத்திருப்பதாக இருப்பது பிரச்சினைகளில் ஒன்று என ஒரு சந்தர்ப்பத்துக்கு மேல் நீங்கள் எனக்குக் கூறியிருந்தீர்கள். பாராளுமன்ற பாரம்பரியத்தில் தாங்கள் வளர்ச்சியடைந்துள்ளீர்கள். அந்த இடைவெளியை வெற்றிகொள்ள அல்லது குறுக்குவதற்கு நீங்கள் விரும்பியிருந்தீர்கள். அதனைச் செய்ய முடிந்ததா?
ஆம். இப்போது 18 ஆவது திருத்தத்திற்குப் பின்னர் அது கட்டாயமானதாகும். அதாவது ஜனாதிபதி பாராளுமன்றத்துக்குச் செல்ல வேண்டும். குறைந்தது 3 மாதத்திற்கு ஒரு தடவையாவது செல்ல வேண்டும்.
- * இது அந்தப் பிரச்சினையைத் தீர்த்துள்ளதா?
நான் அவ்வாறு நினைக்கிறேன்.ஏனெனில் மூன்று மாதத்திற்கு ஒருதடவையாவது எனக்கு அங்கே செல்லும் உரிமையுண்டு. தேவையேற்படின் எந்த நேரத்திலும் அதனை நான் பயன்படுத்த முடியும். அவர்கள் விமர்சித்தாலும் கூட நான் பாராளுமன்றத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முயற்சிக்கின்றேன் என்று அவர்கள் விமர்சிக்கலாம். நான் அதனைச் செய்ய விரும்பவில்லை. மூன்று மாதத்திற்கு ஒரு தடவை செல்வது போதுமென நான் கூறியுள்ளேன். அங்கு சென்று பாராளுமன்ற முறைமையைக் குழப்புவதற்கு நான் விரும்பவில்லை. மக்களின் விருப்பத்தை உணர்ந்துகொள்ள அங்கிருக்க விரும்புகிறேன். எதிரணி கூறுவதைக் கேட்க விரும்புகிறேன். இதற்கு ஒரு உதாரணமொன்றைக் கூறுகிறேன். சமீபத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கசினோக்கள் பற்றி பிரச்சினையொன்றை எழுப்பியிருந்தார். அரசாங்க நிலத்தில் கசினோ இருப்பதாக எவரோ சிலர் கூறியிருந்தனர். அது தொடர்பாகக் கண்டுபிடிக்குமாறு நான் உத்தரவிட்டேன். அது உண்மையான விடயமாக இருந்தது. நான் உடனடியாக ரணிலை அழைத்து அவருக்கு நன்றி தெரிவித்தேன். நான் அங்கேயிருந்தால் இந்த மாதிரியான விடயங்களை எமக்குக் காட்டுவது எதிரணியின் கடமையாகும். பாராளுமன்றத்தில் இந்த விடயங்கள் குறித்து எனக்கு அறியத்தருவது சிறப்பானதாக இருக்கும். தவறானது இடம்பெற்றிருந்தால் எப்போதும் அதனை நாம் சீர்செய்வோம். ஆதலால் பாராளுமன்றத்துடன் நான் நெருக்கமாக இருப்பது மிகவும் முக்கியமானதாகும்.
- அடுத்த விவகாரமாக இருப்பது தங்களின் முன்னாள் இராணுவத்தளபதியான சரத் பொன்சேகா சிறையில் அடைக்கப்பட்டிருப்பது தொடர்பாக விமர்சிக்கப்பட்ட விடயமாகும். அவரோ, அவரின் குடும்ப உறுப்பினர்கள் எவரோ ஜனாதிபதியின் மன்னிப்பைக் கேட்டிருக்கவில்லை. இது இலங்கையிலுள்ள அரசியல் பிரச்சினையா?
இது அரசியல் பிரச்சினையல்ல. சட்டம் யாவருக்கும் உரியது. சட்டத்தின் முன் யாவரும் சமமானவர்கள். அவர்கள் தவறான விடயங்களை எதனையாவது செய்திருந்தால் அவர்கள் அதனை எதிர்கொள்ள வேண்டும். மக்கள் இதனை விளங்கிக்கொள்கிறார்கள். இதனை அரசியல் இலாபத்திற்குப் பயன்படுத்தசில எதிரணி எம்.பி.க்கள் நினைக்கின்றனர். அவரின் பெயரைப் பயன்படுத்தி அரசியல் இலாபம் பெற முடியுமென நினைக்கின்றனர். மக்கள் உணர்ச்சிவசப்படும் விடயமாக நான் இதனைப் பார்க்கவில்லை. அவர்கள் ஆர்வம் காட்டவில்லை.
- ஐ.தே.க. வோ ஜே.வி.பி. யோ தீவிரமான விடயமாக இதனை எடுத்துக்கொண்டதாகத் தோன்றவில்லையா?
இல்லை. அவர்கள் எதனையோ கூற விரும்புகிறார்கள். அல்லது ஏதோ செய்கிறார்கள்.
- ஒன்று சட்டவிதியாகவும் ஜனாதிபதியின் பங்களிப்பாகவும் உள்ளன. அத்துடன், தனிப்பட்ட ரீதியான தன்மையும் காணப்படுகிறது. அவர் உங்களின் இராணுவத்தளபதியாக இருந்தவர். அவரைத் தனிப்பட்ட முறையில் நீங்கள் அறிந்துள்ளீர்கள். இந்த இரு விடயங்களையும் எவ்வாறு தொடர்புபடுத்த முடியும்?
ஆம். இது மிகவும் உண்மையில் கஷ்டமானது. ஆனால், நீங்கள் இராணுவத்தளபதியோ, இல்லையோ, தவறாக எதனையாவது செய்திருந்தால் அதனை நீங்கள் எதிர்கொள்ள வேண்டும். அவர் அந்த மாதிரியான மனிதர் என நான் ஒருபோதும் நினைத்திருக்கவில்லை. எமக்குத் தெரிந்திருக்கவுமில்லை. அவர் வேட்பாளராக வந்தபோது அவரின் மருமகன் ஆயுத வியாபாரியென எனக்குக் கூறியிருந்தார்கள். நாம் ஒருபோதும் அதனை அறிந்திருக்கவில்லை. அவரும் அதனை ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. எமக்கு அவர் அறிவித்திருக்க வேண்டும். அவர் கேள்விமனுச் சபையில் தலைவராக இருந்தார். இதற்கு முன்னர் எந்தவொரு இராணுவத்தளபதியும் அவ்வாறு செய்திருக்கவில்லை. சிறிது காலத்தில் ஓய்வுபெறவிருந்தவரை நாம் இராணுவத்தளபதியாக உருவாக்கினோம். அவரின் மருமகன் ஆயுத வியாபாரியென நான் அறிந்திருந்தால் அதனை எச்சரித்திருப்பேன். அல்லது அவரை எச்சரித்திருப்பேன். அல்லது அவரைத் திருத்தியிருப்பேன்.
- விடுதலைப்புலிகள் உறுப்பினர்களென ஒப்புக்கொள்ளப்பட்டவர்கள் அல்லது ஆதரவாளர்கள் என பதினொராயிரம் பேர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக எனக்குக் கூறப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காண்பீர்கள்.
ஏற்கனவே சிலருக்குப் புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளது. நாலாயிரம் பேர் வீடுகளுக்குச் சென்றுள்ளனர். பிள்ளைகள்,முதியவர்களை நாங்கள் விடுவித்துள்ளோம். சிலர் போக விரும்பவில்லை. தமது சொந்த நன்மைக்காக அவர்கள் எம்முடன் இருக்கின்றனர்.
- தங்களின் ஐ.நா. உரையில் இலங்கைப் பிரஜைகளான புலம்பெயர்ந்த தமிழர்களை நாட்டின் அபிவிருத்தியில் இணைந்து கொள்ளுமாறு பகிரங்க அழைப்பைத் தாங்கள் விடுத்திருந்தீர்கள். அது தொடர்பாக நல்ல விதமான பதில் கிடைத்துள்ளதா?
ஆம். அதிகளவு பதில் கிடைத்திருக்கிறது. இரட்டைப் பிரஜாவுரிமை விரும்பும் புலம்பெயர்ந்தவர்கள் உட்பட பலரிடமிருந்து பதில் கிடைத்துள்ளது. ஆனால், ஏனைய காரணங்களுக்காக அங்கு சென்றவர்களும் உள்ளனர். மோதலைக் காட்டிச் சென்றவர்களும் உள்ளனர். இலங்கையர்கள் பலர் வெளிநாடுகளுக்குச் சென்று ஏனைய நாடுகளின் பிரஜாவுரிமைகளைப் பெற்றுள்ளனர்.
- இந்தியத் தலைவர்களுடன் நீங்கள் நெருக்கமான தொடர்பைப் பேணி வருகிறீர்கள். இந்தியாவுக்கு வருகை தந்திருந்தீர்கள். பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் இறுதி வைபவத்தில் பிரதம விருந்தினராக வருகைதந்துள்ளீர்கள். தொடர்ந்தும் தொடர்புகளைப் பேணி வருகிறீர்கள். யுத்தம் முடிவடைந்த பின்னர் இந்த நடவடிக்கைகளில் இந்தியாவின் பங்களிப்பு மட்டம் குறித்து நீங்கள் திருப்தியடைந்துள்ளீர்களா?
ஆம். உறவுகள் பிரமாதமாகவுள்ளன.யுத்தத்தின் பின்னரும் யுத்தம் முடிவதற்கு முன்னரும் உறவுகள் சிறப்பாக இருந்து வருகின்றன. இரு நாடுகளின் தலைவர்களும் நெருக்கமான தொடர்பைப் பேணி வருகின்றோம். உதாரணமாக வடக்கிலுள்ள இடம்பெயர்ந்த மக்களின் வீட்டுப் பிரச்சினைகளுக்காக 50 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. வடக்கில், ரயில் பாதை கட்டமைப்புப் புனரமைக்கப்படுகிறது. பலாலி விமானத்தளம்,காங்கேசன்துறை துறைமுகம், வீதி அபிவிருத்தித் திட்டங்கள், கிழக்கில் சம்பூரில் மின்சக்தித் திட்டங்கள் என்பன மேற்கொள்ளப்படுகின்றன. இந்தத் திட்டங்கள் யாவும் இந்தியாவுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், இப்போது சில பத்திரிகைகள் எமது திட்டங்கள் தொடர்பாக பாரியளவில் விடயங்களைக் கூறுகின்றன. சீனாவுக்கு நாம் வழங்கியவற்றுடன் ஒப்பீடுகளை மேற்கொள்கின்றன.
- இந்திய அரசாங்கம், அரசியல் தலைவர்கள் அல்லது அதிகாரிகள் இது தொடர்பாக கவலையை வெளிப்படுத்தியிருந்தார்களா?
இல்லை,இல்லை. அவர்கள் அதிகளவுக்கு முதிர்ச்சியைக் கொண்டுள்ளனர். ஏனெனில் சகலதுமே முதலில் அவர்களுக்குத் தான் வழங்கப்பட்டது. துறைமுகம்,விமானநிலையம்,அம்பாந்தோட்டைத் துறைமுகம்,சம்பூர் என்பன நான்கு வருடங்களுக்கு முன்னர் அவர்களுக்கே வழங்கப்பட்டது. எமக்குத் தேவை துரித அபிவிருத்தியாகும். இது வடக்கு மக்களுக்கு,தமிழர்களுக்கு அதிகளவுக்கு உதவியாக அமையும். விடுதலைப்புலிகளுக்கு ஆதரவளித்தவர்களே இந்தத் திட்டங்கள் தொடர்பாக குழப்பங்களைக் கொண்டுள்ளனர். பேராசிரியர் சுவாமிநாதனின் வடக்கில் விவசாய,மீன்பிடித்துறை அபிவிருத்தித் திட்டம் உட்பட இவை குறித்து குழப்பகரமான விடயங்களை அவர்கள் உருவாக்கியிருந்தனர். இதனை உணர்ந்துகொள்ள வேண்டும்.
- *இரண்டாவது பதவிக் காலத்தை ஆரம்பித்திருக்கும் நிலையில் உங்கள் மக்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் நீங்கள் விடுக்கும் செய்தி என்ன? இலங்கையின் புதிய நிலைவரம் தொடர்பாக அவர்கள் எவ்விதம் பதிலளிக்கக்கூடும்.
நான் அபிவிருத்திப் பணியில் கவனத்தைச் செலுத்துகின்றேன் என்பது எனது மக்களுக்கு விடுக்கும் செய்தியாகும். அறிவு,சக்தி,வர்த்தகம், கடல்வழிப் போக்குவரத்து,விமானப்போக்குவரத்துப் போன்றவற்றில் அபிவிருத்தியடைந்த இலங்கையை உருவாக்க விரும்புகின்றேன். இதனை வெற்றி கொள்ள எமது மக்கள் ஒன்றுபட்டிருப்பது அவசியமாகும். மக்களுக்காக அரசாங்கத்தின் ஆதரவளிக்க வேண்டும். சர்வதேச சமூகத்துக்கு நான் விடுக்கும் செய்தி, எமது நிலைப்பாட்டை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டுமென்பதாகும். நாங்கள் பயங்கரவாதிகளைத் தோற்கடித்திருக்கிறோம். சுதந்திரப் போராளிகளை அல்ல. முழு உலகுமே இப்பிரச்சினையை எதிர்கொண்டுள்ளது. ஆதலால் நாங்கள் எதனை வென்றெடுத்துள்ளோம் என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டு நாட்டை வடக்கு,கிழக்கை அபிவிருத்தி செய்ய உதவ வேண்டும். சமூகங்களுக்கிடையே இடைவெளியை அதிகரிப்பதற்கு அல்லாமல் அவர்களை நெருக்கமாக்குவதற்கு அவர்கள் உதவ வேண்டும். கடந்து சென்றது கடந்து சென்றவை தான். காயங்களைக் கிளற வேண்டாம். எதிர்மறையாக அல்லாமல் நாம் சாதகமாகச் சிந்திப்பது அவசியம்.
தமிழில்: தினக்குரல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக