வேதங்களில் முக்கியமான அங்கம், சடங்குகள். இவை ஞானத்தேடல்களுக்கு ஒப்பாக வேதங்களில் மையப்பகுதியை வகிக்கின்றன. ஆனால் சடங்குகள் என்றாலே ஒரு வெறுப்பும் விலகலும் , அறிவுஜீவி தளத்திலும் பொதுஜன புத்தியிலும் கடந்த இரு நூற்றாண்டுகளாக உருவாக்கப்பட்டுள்ளன. காலனிய புரோட்டஸ்டண்ட் பார்வைக்குள் வர முடியாத எந்த விஷயத்தையும் மூட நம்பிக்கை என்பதாக வெறுத்து ஒதுக்க நமக்குக் கற்றுத்தரப்பட்டுள்ளது.
சடங்குகள் பணம் பறிக்கும் புரோகிதத் தந்திரம். அதற்கும் ஞானத் தேடலுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. அவை அதிகாரங்களை நிலை நிறுத்திக்கொள்ள பூசகர்கள் உருவாக்கியுள்ள அதிகார அமைப்பு. புரோட்டஸ்டண்ட் மதத்தின் பிற பண்பாட்டு சித்திரிப்பில் இந்தப் ‘போலிச் சடங்குகளால் மக்களை ஏமாற்றும் பூசாரி வர்க்கம்” ஒரு முக்கிய அம்சமாகும். இந்தியாவில் சடங்குகளை பேணிய சாதியினர் காலனிய ஆட்சியின் போது அன்னிய வந்தேறிகளாகவும் இந்திய பூர்விக வாசிகளான திராவிடர்களை ஏமாற்ற அல்லது அடக்க இந்த சடங்குகளை அவர்கள் மீது திணித்ததாகவும் கூறப்பட்டது. சில அறிவாளிகள் இன்னும் அதிகமாக போனார்கள். ஆரியர்கள் நெருப்பு சடங்கு உடையவர்கள் திராவிடர்களான நாமோ நீர்ச் சடங்குகளையே உடையவர்கள்.ஆனால் நெருப்புச் சடங்கு மேடைகள் சிந்து-சரஸ்வதி பண்பாட்டு அகழ்வாராய்வு மையங்கள் பலவற்றிலிருந்தும் கிடைத்துள்ளன. குறிப்பாக தெற்கு நோக்கிப் பரந்த சிந்து-சரஸ்வதி பண்பாட்டு மையங்களிலே இந்த சடங்குகளுக்கான அகழ்வாராய்ச்சி ஆதாரங்கங்கள் அதிகமாக கிடைத்துள்ளன.
மொகஞ்சதாரோவில் ஒரு பிரதான அறை நெருப்பு சடங்குக்கான கோவிலாக இருந்திருக்க கூடுமென கருதப்படுகிறது. எதுவானாலும் வேத நெருப்புச் சடங்குகள் அன்னியப் படையெடுப்பாளாரால் கொண்டு வரப்பட்டவை அல்ல.
சரி. வரலாற்று விஷயங்களை இப்போது விட்டுவிட்டு பிறகு ஆழமாக பார்க்கலாம். இப்போது இச்சடங்கு எதைக் குறிக்கிறது என்பதைச் சிந்திக்கலாம். உதாரணமாக விவிலியத்தில் யஹீவா தேவன் என்கிற இனக்குழு இறைவனுக்கான இரையை மேடைகளில் வைத்து எரிப்பது உண்டு. அத்தகைய தெய்வங்களுக்கான இரை அளிக்கும் சடங்காக வேத வேள்வி அமைந்ததா? நிச்சயமாக அக்னி இங்கு அளிக்கப்படும் அவி உணவை தேவர்களுக்கு கொண்டு செல்லும் நம்பிக்கை இருந்திருக்கிறது. ஆனால் வேத வேள்வியின் மைய கருத்தியல் மிகப்பழமையான ஒரு ஆதார உந்துதலைத் தனது இதயமாகக் கொண்டிருந்தது.
இறைவன் என்பது ஒரு ஆளுமை அல்ல; இயக்கம். இதுதான் வேத வேள்வியின் மையக் கருத்து. இறைவனே அனைத்தும் ஆகும் பிரபஞ்ச நிகழ்வின் சிற்றுருவாக்க சடங்கே வேத வேள்வி. இறை மறுப்பாளரும் இதில் இறை அனுபவத்தை அடைய முடியும் என்பது வேத சடங்காளர்களின் துணிவு.
பரிபாடல் வேத வேள்வியின் இத்தன்மையை விளக்குகிறது:
செவ்வாய் உவணத்து உயர்கொடியோரே
கேள்வியுள் கிளர்ந்த ஆசான் உரையும்
படிநிலை வேள்வியுள் பற்றி ஆடு கொளலும்
புகழ்இயைந்து இசைமறை உறுகனல் முறை மூட்டித்
திகழ்ஒளி ஒண்சுடர் வளப்பாடு கொளலும்
நின் உருபுடன் உண்டி;
பிறர் உடம்படு வாரா
நின்னொடு புரைய
அந்தணர் காணும் வரவு (பரிபாடல். 2:60-68)
தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதையர் இப்பாடல் வரிகள் சொல்லும் கருத்தை தருகிறார்:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக