என்ன காரணமோ தெரியவில்லை, அங்காடித் தெரு, இப்போது நந்தலாலா – ஐங்கரன் படங்கள் எல்லாம் ஊறவைத்தே வெளியாகின்றன. ஊறவைத்ததால் ருசியில் மாற்றம் ஏற்பட்டது என்னவோ உண்மை. நல்லவிதமாகத்தானா?
ஏகதேசமாக ப்ரிவியூ பார்த்தவர்கள் எல்லாரும் புகழ்ந்து தள்ளும்போது இது ரெகுலர் கோடம்பாக்கம் ’டாக்’ என்று பட்சி சொன்னது. இருந்தாலும் நெருப்பில்லாமல் புகையுமா என்ற எண்ணமும் ஓட, மட்டுப்படுத்தப்பட்ட எதிர்பார்ப்புடன்தான் பார்க்கத் தொடங்கினேன்.எடுத்த எடுப்பிலேயே சொல்ல வேண்டிய சிறப்பம்சங்களைச் சொல்லிவிடுகிறேன்.
1. அஸ்வத் ராம் – தமிழ் சினிமாவில் குழந்தைகளைக் கொடுமைப்படுத்துவது கணிசமாகக் குறைந்துவிட்டிருந்தாலும், ஒரு தர்ஷீல் சஃபாரி (தாரே ஜமீன் பர்) மாதிரி அருமையான, அளவான நடிப்பைக் காட்ட குழந்தைகள் இல்லை. இந்தப்பையன் மிக அருகில் வருகிறான்.
2. ஒளிப்பதிவு – பச்சைப் பசேலென்ற காட்சிகள் மச்சுபிச்சுவிலும் இருக்கின்றன, அதே கண்ணுக்குக் குளிர்ச்சி சேலம் ஈரோட்டிலும் இருக்கிறது.
3. இசை – ஏறத்தாழ இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்தே மெல்ல ஊர்ந்து வரும் தேரு என் காரில் ஓடி கவர்ந்துவிட்டிருந்தது. படத்தில் இருமுறை ஆரம்பித்த ஜோரில் முடிந்துவிடுகிறது. வாண்டுக்கூட்டத்தையும் நரிக்குறவர் பாட்டையும் படத்தில் காணவில்லை. தாலாட்டு கேட்க நானும், ஒண்ணுக்கொண்ணு துணையிருக்கு பாடல்கள் மட்டும்தான் கொஞ்சம் நீளமாக வருகிறது. வழக்கம்போல, இயக்குநர், நடிகர்கள் வேலையில் பாதியை இளையராஜா செய்திருக்கிறார். வசனங்களைப் பாதியாகக் குறைத்து கதையை உணர்த்துவது என்ன, சோகம் கோபம் மகிழ்ச்சி அழுகை – எந்த உணர்ச்சியாக இருந்தாலும் அதை மெதுவாக ஆரம்பித்துக் கொஞ்சம் கொஞ்சமாகக் கூட்டுவது என்ன – கண்ணை மூடிக்கொண்டு பார்த்தாலும் கதையை உணர்த்துவது என்ன – ராஜாங்கம்!
நிறைய விஷயங்களைச் சொல்ல வசதியான ரோட் ட்ரிப் கதை. வழிப்பறிக் கொள்ளை, கடத்தல் முயற்சி, ஜாதிக் கலவரம், நெடுஞ்சாலை ராணிகள், தூங்கும் லாரி ட்ரைவர், பீரடிக்கும் ஓப்பன் டாப் இளைஞர் கார், ரோஜாப்பூக்கள் ஒட்டிய தேனிலவு கார் – எல்லா சாத்தியங்களும் உபயோகித்திருக்கிறார். சில இடங்கள் புத்திசாலித்தனமாகவும், சில இடங்கள் க்ளீஷேவாகவும்.
பாரதிராஜா வெள்ளுடை தேவதைகள் ஸ்லோமோஷன் போல மிஷ்கின் தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் – கால்களை மட்டும் தொடரும் கேமரா, திடீரென வெட்டப்படும் காட்சி வேறெங்கோ தொடங்கி பொறுமையாக, அதீதப்பொறுமையாக அதிர்ச்சியைக் கொடுப்பது – சில இடங்களில் அட போடவைத்தாலும் பல இடங்களில் வாங்கய்யா சீனுக்கு என்று கதறவைக்கிறது. சண்டை போடுபவர்கள் ஒவ்வொருவராக வந்து அடிவாங்குவது / கொடுப்பது, நிற்பவர்கள் நாடகத்தனமாக நகர்வது போன்றவை தமாஷாக இருக்கின்றன.
ஜாதிக்கலவரமும் தொடரும் காட்சிகளும் சுவாரஸ்யம். கற்பழிப்பில் இருந்து காப்பாற்றப்பட்டவளின் ‘என்ன ஜாதி’ கேள்விக்கு ‘மெண்டல்’ என்ற பதில், நொண்டி என்றழைக்கப்படும்வரை வேகமாக வந்தவன் சோர்ந்துவிழுதல்..
ஆனால் இதே சுவாரஸ்யத்தை படம் முழுக்கக் கொடுக்க முடியவில்லை இயக்குநரால். ஸ்லோவாக நகர்ந்தால் அவார்டு நிச்சயம் என்ற நிலைமை மாறி பலகாலம் ஆச்சு சார்!
அவ்வப்போது மகா கிறுக்காகவும், சிலசமயம் சாதா கிறுக்காகவும், சில சமயங்களில் மெச்சூர்டாகவும் நடித்துக் குழப்புகிறார் மிஷ்கின். காசுக்கும் நோட்டுக்கும் வித்தியாசம் தெரியாத பைத்தியம் சிறுவனின் அம்மா சொன்ன நீண்ட கதையைப் (வசனம் இல்லை, இளையராஜா தயவில்தான் நான் புரிந்துகொண்டேன்) புரிந்துகொண்டு புத்திசாலித்தனமாகச் செயல்படுகிறான். ‘நல்லா இருக்கியா’ என்று தெளிவாகக் கேட்டு பலூன் விற்கிறான்.
படம் பார்த்துவிட்டு வந்துதான் கிகிஜிரோ கதையை ஐஎம்டிபியில் பார்த்தேன். மிஷ்கின் சிலபல வருடங்களுக்கு முன்பே பார்த்துவிட்டிருக்கிறார்.
தமிழின் முதல் உலகப்படம் என்ற பில்ட் அப்பையெல்லாம் மறந்துவிட்டு ஆங்காங்கு பளிச்சிடும் காட்சிகளுக்காகவும் இசைக்காகவும் – நிச்சயம் பார்க்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக