டெல்லி: கடன் வழங்க பல ஆயிரம் கோடி ரூபாய் கை மாறிய விவகாரத்தில் தொடர்புடைய 21 நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த ஊழலில் அந்நிறுவனங்களின் தொடர்பு குறித்த விவரங்களைக் கோரியுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய வங்கிகளின் அதிகாரிகள், கடன் வழங்க லஞ்சம் வாங்கியிருப்பது அம்பலமானது. இதுபற்றிய அறிக்கையை விரிவாகப் பெற இந்திய அரசு முயன்று வருகிறது.
எனவே இந்த ஊழலுடன் தமக்கு இருக்கக் கூடிய சாத்தியமான தொடர்புகள் குறித்த தகவல்களைத் தரவேண்டும் என்று மேலும் 21 முன்னணி வணிக நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் விளைவாக பல நிறுவனங்களின் பங்குகள் சரிய ஆரம்பித்துள்ளன. பங்குச் சந்தையே ஆட்டம் காணும் நிலை உருவாகியுள்ளது.
பெரிய வணிக நிறுவன வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்குவதற்காக லஞ்சம் பெற்றார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில், அரசு வங்கிகளைச் சேர்ந்த 8 அதிகாரிகள் புதன்கிழமையன்று கைது செய்யப்பட்டார்கள்.
கைது செய்யப்பட்ட பெரும் புள்ளிகளில் பாங்க் ஆஃப் இந்தியா, இந்திய மத்திய வங்கி மற்றும் பஞ்சாப் தேசிய வங்கி ஆகிய வங்கிகளைச் சேர்ந்தவர்களும் அடங்குவர்.
இந்தியாவில் காமன்வெல்த் போட்டிகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள், 2 ஜி அலைக்காற்றை ஒப்பந்தங்களில் இடம் பெற்றதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுக்களின் தொடர்ச்சியாக இந்த புதிய ஊழல் பார்க்கப்படுகிறது.
இதன் முழு விவரமும் வெளிவரும்பட்சத்தில், தற்போது 2 ஜி முறைகேட்டில் அடிபடும் தொகையான ரூ 1.78 லட்சம் கோடியை விட அதிக தொகை விவரங்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக