நிரா ராடியா!
மூச்சுக்கு முந்நூறு தடவை இன்று ஊடகங்களால் உச்சரிக்கப்படும் பெயர். ஆ. ராசா, கனிமொழி, பத்திரிகையாளர் பர்கா தத் உள்ளிட்டோருடன் இவர் நடத்திய சர்ச்சைக்குரிய பேச்சுகள் அரசியல் அரங்கில் அதிர்ச்சியுடன் விவாதிக்கப்பட்டு வருகின்றன. திமுக முகாமில் பலத்த இடியோசை. விளைவு, ஓவர்நைட்டில் உலக அறிமுகம்.
இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் ஆளுமைகள் பலரும் இவருக்கு அணுக்கமான நண்பர்கள். அதிகார வட்டத்தில் இவருக்கு ஆள்பலம் அதிகம். நிராவின் பேச்சை அட்சரம் பிசகாமல் கேட்டு நடந்தால் பதவிகள் உங்களைத் தேடிவரும்.
இவையெல்லாம் நிராவைப் பற்றி ஊடகங்கள் சொல்லும் செய்திகள். கார்ப்பரேட் கண்சல்டன்ட் என்று கண்ணியமாக அழைக்கப்பட்டாலும் உண்மையில் அவர் இந்தியாவின் சக்திவாய்ந்த அதிகாரத் தரகர் என்ற கருத்தும் இருக்கிறது.
இவற்றில் எது உண்மை? அதைவிட முக்கியமாக, யார் இந்த நிரா ராடியா?
நிரா ராடியாவில் இருக்கும் “ராடியா’ என்பது இவருடைய கணவரின் பெயரின் ஒரு பாதி. வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். லண்டனைச் சேர்ந்த நிதி ஆலோசகர் ஜனக் ராடியாவுக்கும் நிராவுக்கும் இடையே எண்பதுகளின் இறுதியில் திருமணம் நடந்தது. மூன்று குழந்தைகள் பிறந்ததும் கணவருக்கும் மனைவிக்கும் கருத்து வேறுபாடு. விவாகரத்து வாங்கிய கையோடு மூன்று குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு இந்தியாவுக்கு வந்துவிட்டார் நிரா ராடியா.
அளவான படிப்பு. அளவுக்கு மீறிய துணிச்சல். தேனொழுகும் பேச்சு. திகட்டத் திகட்டத் திறமை. போதாது? சஹாரா இந்தியா ஏர்லைன்ஸில் உத்தியோகம் கிடைத்தது. அவசரத்துக்கு வேலையில் சேர்ந்துவிட்டாலும் நிராவுக்குப் புதிய தொழில் தொடங்குவதில் ஆர்வம் அதிகம். குறிப்பாக, மக்கள் தொடர்பு மற்றும் கன்சல்டன்சி துறையில்.
வைஷ்ணவி கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்பதுதான் நிரா தொடங்கிய நிறுவனத்தின் பெயர். கார்ப்பரேட் நிறுவனங்களின் மக்கள் தொடர்பு மற்றும் ஊடக விவகாரங்களைக் கவனித்துக்கொள்வதுதான் இவருடைய பணி. தொழிலில் காட்டிய நேர்த்தியும் பக்குவமும் பல பெரிய நிறுவனங்களை நிராவின் வாடிக்கையாளர்கள் பட்டியலில் இடம்பெறச் செய்தன.
வர்த்தக உலகில் எதிரெதிர் துருவங்களாக இருக்கும் டாடா மற்றும் ரிலையன்ஸ் என்ற இரண்டு நிறுவனங்களின் மக்கள் தொடர்பு விவகாரங்களைப் பார்த்துக்கொள்வது நிராவின் வைஷ்ணவி நிறுவனம்தான். இவர்கள் தவிர, யுனிடெக், ஸ்டார் குரூப் தொலைக்காட்சிகள், பார்தி க்ரூப், வேதாந்தா, ஹெச்.சி.எல் இன்ஃபோ சிஸ்டம்ஸ் என்று இந்தியாவின் கார்ப்பரேட் பெருந்தலைகள் பலருடைய ஊடக விவகாரங்களை நிர்வகிப்பது ராடியாவின் நிறுவனங்கள்தான்.
ஒற்றை நிறுவனத்தை மட்டுமே வைத்துக்கொண்டு உறவு வளர்ப்பது சாத்தியம் இல்லை என்பதால் ஒத்தாசைக்கு மேலும் சில நிறுவனங்களை உருவாக்கிக்கொண்டார் நிரா ராடியா. நியோகாம் கன்சல்டிங் என்பது நிரா ராடியாவின் இன்னொரு நிறுவனம். முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மக்கள் தொடர்பு மற்றும் ஊடக விவகாரங்களைத் தற்போது கவனித்துக்கொள்வது இந்த நிறுவனம்தான். இவை தவிர, நொய்சிஸ், விட்காம் போன்ற நிறுவனங்களும் அம்மணிக்குச் சொந்தமானவைதான்.
தொழிலதிபர்களுடன் கொண்ட தொடர்புகள் அவருக்கு அரசியல்வாதிகளை அறிமுகம் செய்துவைத்தன. நீங்கள் பழகும் ஒவ்வொரு நபரிடமும் உங்களைப் பற்றிய உயர்ந்த எண்ணங்களை உருவாக்கி அவர்களுடைய நம்பிக்கைக்குப் பாத்திரமாகிவிடவேண்டும் என்பது மக்கள் தொடர்பு மற்றும் ஆலோசனை நிறுவனத்தினருக்கான பாலபாடம். அதில்
நிரா ராடியா படு சமர்த்தர். அவருடைய புகழ் பரவத் தொடங்கியது.
அரசாங்க காண்ட்ராக்ட் வேண்டுமா, நிராவைப் பாருங்கள். கேட்டது கிடைக்கும். டெண்டர் கிடைக்கவேண்டும் என்றால் நிராவை நாடுங்கள். நிராவும் அவருடைய பணியாளர்களும் சிந்தாமல் சிதறாமல் செய்துமுடித்தார்கள். பேரம் பேசுவது, பேச்சு வார்த்தை நடத்துவது, பணப் பரிவர்த்தனைகளைப் பக்காவாக முடித்துக் கொடுத்தனர். முக்கியமாக, நானோ கார் திட்டத்தின் மக்கள் தொடர்பு விவகாரங்களைக் கவனித்துக்கொண்டது நிராவின் நிறுவனம்தான். அரசு நிர்வாகத்துக்கும் தொழிலதிபர்களுக்கும் சக்தி வாய்ந்த மீடியேட்டராக உருவெடுத்தார் நிரா.
இந்தியாவின் முக்கிய அரசியல்வாதிகளின் மொபைல் எண்கள் இவருடைய மொபைலில் இருக்கும் அல்லது இவருடைய எண்கள் அவர்களுடைய மொபைலில். வர்த்தக விஷயங்களைக் கையாண்ட நிரா மெல்ல மெல்ல அரசியல் அதிகாரங்களைப் பெற்றுத்தரும் பவர் புரோக்கராகவும் அவதாரம் எடுத்தார்.
தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள். மத்திய, மாநில அமைச்சரவையில் இடம்பெற விரும்புபவர்கள் தங்கள் கட்சித் தலைமையுடன் பேரம் பேச, லாபி நடத்த நிராவை நாடினர். அவரும் தனது வேலைகளை வெற்றிகரமாக முடித்துக்கொடுக்கவே மேன்மேலும் பிரபலமடையத் தொடங்கினார். ஜார்கண்ட் முதலமைச்சராக சில மாதங்கள் இருந்த மது கோடா மீது மிகப்பெரிய ஊழல் வழக்கு நிலுவையில் இருக்கிறது அல்லவா, அது நிலுவையிலேயே இருப்பதில் நிராவின் பங்களிப்பு மிக அதிகம் என்று சொல்லப்படுகிறது.
அரசின் முக்கியப் பதவிகளில் இடம்பெற விரும்புபவர்கள் பலரும் நிராவைத் தொடர்புகொண்டு காரியம் சாதித்துக்கொண்டனர். பணம் பாதாளம் வரை பாய்ந்தது. இத்தனை காரியங்களைச் செய்துமுடித்தபோதும் நிராவின் முகம் மட்டும் யாருக்கும் தெரியாது. குறிப்பாக, இவரைக் கொண்டு காரியம் சாதித்த பலரும் நிராவுடன் தொலைபேசியில் பேசியிருப்பார்கள். அல்லது நிராவின் பிரதிநிதியுடன் நேரில் பேசியிருப்பார்கள்.
நிராவின் பெயர் அரசியல் வட்டத்தில் பிரபலமடையத் தொடங்கியபோதே பிரச்னைகளும் ஆரம்பித்துவிட்டன. நிராவால் பலன் கிடைக்காத அல்லது பதவி தடுக்கப்பட்ட நபர்கள் போட்டுக்கொடுக்கும் வேலையில் இறங்கினர். அதன் விளைவாக, 2009 மே மாதத்தில் நிரா ராடியாவின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டன. உபயம்: இந்திய வருவாய் கண்காணிப்பு இயக்ககம்.
நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்களுடன் நிரா ராடியா நடத்திய உரையாடல்கள் அப்போது பதிவு செய்யப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும் அவை எதுவும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. ஆனால் தனியார் தொலைக்காட்சிகளும் இந்தியா டுடே போன்ற பத்திரிகைகளும் அந்த உரையாடல்களில் இருந்து சில பகுதிகளை வெளியிட்டன.
2009ல் இரண்டாவது முறையாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவியேற்ற சமயத்தில் அந்த அமைச்சரவையில் யார் யாரெல்லாம் இடம்பெறவேண்டும் என்பதில் நிரா ராடியாவின் பங்களிப்பை அந்த உரையாடல்கள் வெளிப்படுத்துகின்றன; முக்கியமாக, பத்திரிகையாளர்கள் வீர் சங்வி, பர்கா தத், தொழிலதிபர் ரத்தன் டாடா, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, பிரபல பத்திரிகையாளர் ஷங்கர் அய்யர் போன்றோர், ஆ. ராசா மீண்டும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராகவேண்டும் என்பதற்காகவும் தயாநிதி மாறனுக்கு அந்தத்துறை கிடைக்கக்கூடாது என்பதற்காகவும் லாபி செய்துள்ளதை அந்த உரையாடல்கள் உறுதிசெய்கின்றன.
புதிய தொழில்முனைவராக அறிமுகமான நிரா ராடியா மெல்ல மெல்ல கட்சி எல்லைகள் அனைத்தையும் கலைத்துப்போட்டுவிட்டு, அதிகார வர்க்கத்தின் அசைக்க முடியாத நண்பராக வலம் வந்தார். தற்போது அதே அதிகார வர்க்கத்தால் நெருக்கடிக்கு ஆளாகிக்கொண்டிருக்கிறார். இந்தச் சிக்கலில் இருந்து தப்பித்தால் அது நிராவுக்கு இன்னொரு வகையில் லாபம்தான். ஆம். கிரைசிஸ் மேனேஜ்மெண்ட் துறையில் புதிய நிறுவனத்தைத் தொடங்கமுடியும் அல்லவா!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக