திமுகவுக்கு எதிராக காட்டுக் கத்தல் கத்தி வந்த சில காங்கிரஸாருக்கு பீகார் தேர்தல் முடிவுகள் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இதை நேற்று சென்னையில் நடந்த இளைஞர் காங்கிரஸ் கூட்டத்தில் பார்க்க முடிந்தது. காங்கிரஸ் பீகாரில் அடைந்த தோல்வியால் தமிழகத்தில் திமுகவுக்கு சாதகமான நிலை ஏற்படும் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
உண்மையில், பீகார் தேர்தல் முடிவை வைத்துதான் தமிழகத்திலும் மேற்கு வங்கத்திலும் சில அதிரடியான வேலைகளைச் செய்ய ராகுல் காந்தி காத்திருந்தார். தேசிய அளவிலும் கூட சில ரிஸ்க்குளை எடுக்க காங்கிரஸும் காத்திருந்தது. வெற்றி பெற முடியாவிட்டாலும் கூட டீசண்டான 3வது இடத்தைப் பிடித்தாலே போதும் என்ற நிலையில்தான் காங்கிரஸ் ஆர்வமாக இருந்தது.
ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் வெறும் 4 சீட் மட்டுமே பெற்று பெரும் சரிவை சந்தித்துள்ளது காங்கிரஸ்.
இது பீகாருடன் நிற்காது, தேசிய அளவிலும் எதிரொலிக்கும் என்பதை காங்கிரஸ் உணராமல் இல்லை. இதனால்தான் அது கடும் அப்செட் ஆகியுள்ளது.
குறிப்பாக தமிழக காங்கிரஸ் கட்சியினர், அதிலும் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ராகுல் காந்தியின் 'விளையாட்டு' விபரீதமாகி வருவதாகவும் காங்கிரஸ் தலைவர்களிடையே முனுமுனுப்பு அதிகரித்துள்ளதாக தமிழக காங்கிரஸ் கட்சியின் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு மூத்த தலைவர் கூறுகிறார்.
ஈவிகேஎஸ் இளங்கோவன், கார்த்தி சிதம்பரம் போன்ற பதவியிலேயே இல்லாதவர்கள் போடும் கூச்சலைக் கூட திமுக மகா பொறுமையுடன் எதிர்கொள்கிறது. கோபப்பட்டால் நமக்குத்தான் பாதிப்பு என்பது அதற்கு ஒரு காரணமாக இருந்தாலும் கூட சந்தில் சிந்து பாடக் காத்திருப்போருக்கு வாய்ப்பு தந்து விடக் கூடாது என்பதே முதல்வர் கருணாநிதியி ன்மகா மெளனத்திற்கு முக்கியக் காரணம்.
எம்ஜிஆருக்குப் பின் இப்படி ஒரு கூட்டணி இதற்கு முன்பு காங்கிரஸுக்குக் கிடைத்ததில்லை என்பதே பெரும்பாலான காங்கிரஸாரின் எண்ணமாக உள்ளது. இருப்பினும் கடந்த பல மாதங்களாக காமராஜர் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம், நாங்கள் இல்லாமல் திமுகவால் ஒன்றும் செய்ய முடியாது என்றெல்லாம் தங்களது உண்மையான சக்தியை உணராமல் பேசி வருகிறார்கள் சில காங்கிரஸ் தலைவர்கள்.
இதற்கு உச்சகட்டமாக இளைஞர் காங்கிரஸார் ராகுல் காந்தியின் பேச்சைக் கேட்டுக் கொண்டு படு உற்சாகமாக பாதயாத்திரை எல்லாம் கிளம்பினர். திமுக அரசின் தோல்விகளை போகும் இடமெல்லாம் விமர்சித்து வந்த இவர்கள், திடீரென கோஷ்டிச் சண்டையில் குதித்து தாங்கள் யார் என்பதையும் மக்களுக்கு அடையாளம் காட்டிக் கொண்டனர்.
ஆனால் இப்போது பீகார் தேர்தல் முடிவு இளைஞர் காங்கிரஸாரை அப்படியே சுருட்டிப் போட்டுள்ளதாம்.
பீகார் காங்கிரஸை விட தமிழக காங்கிரஸ்தான் இப்போது பெரும் அதிர்ச்சியில் உள்ளது. ராகுல் காந்தியின் மந்திரம் உ.பியில் ஜெயித்ததைப் போலவே பீகாரிலும் ஜெயிக்கும், தமிழகத்திலும் நம்மை கரையேற்றி விடும் என்ற மகா நம்பிக்கையி்ல் இருந்தனர் அவர்கள்.
இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், நிதீஷ் குமார், கருணாநிதி போன்ற பிராந்திய தலைவர்களின் முக்கியத்துவத்தை இப்போதாவது காங்கிரஸ் மதிக்கவும், அங்கீகரிக்கவும் முன்வர வேண்டும்.
எல்லாவற்றையும் டெல்லியிலிருந்தே தீர்மானித்து விட முடியாது. தற்போது காங்கிரஸ் கட்சி மேற்கொண்டுள்ள நிலை சரி என்று மேலிடம் கூறுமானால், லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் சொந்த பலத்திலேயே வென்று தனி மெஜாரிட்டியை பெற்றிருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லையே.
தமிழகத்தில் திமுக அல்லது அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டால் மட்டுமே காங்கிரஸுக்கு பலன் கிடைக்கும். அதேபோல மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜியும், உ.பியில் மாயாவதியும் காங்கிரஸுக்கு சவால்களாக உள்ளனர்.
கூட்டணியின் முக்கியத்துவத்தை சோனியா காந்தி சரியாக புரிந்து வைத்துள்ளார். பீகாரில் அதை நேரடியாக பார்த்து விட்டார். ராகுல் காந்தியின் லேப்டாப் அரசியலால் பெருமளவில் பலன் கிடைக்காது என்பதையும் சோனியா தற்போது புரிந்து கொண்டிருப்பார்.
அவசரப்பட்டு எந்த பரிசோதனையிலும் ஈடுபடக் கூடாது என்று பீகார் தேர்தல் முடிவுகள் காங்கிரஸுக்குப் பாடம் கற்றுக் கொடுத்துள்ளது என்றார்.
தற்போது பீகாரில் ஏற்பட்டுள்ள பெரும் அடியால் சோனியா காந்தி அவசர அவசரமாக சில நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார். ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியால் தேவையில்லாத பிரச்சனைகளை சந்திக்கக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காகவே அவர் நல்ல பிள்ளையாக செயல்பட்டு வந்த ரோசய்யாவை பதவி விலக உத்தரவிட்டார்.
அடுத்து தமிழகத்திலும், தற்போதைய கூட்டணிக்கு பாதகம் வந்து விடக் கூடாது என்பதில் சோனியா இனி கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இளங்கோவன் போன்றோரை அவர் தட்டி வைக்க முயலலாம் என்று தெரிகிறது.
விஜய்காந்த்-பாமகவுடன் சேர்ந்து தனிக் கூட்டணியை உருவாக்குவது, அல்லது அதிமுகவுடன் கூட்டணிக்குப் போவது போன்ற ராகுல் காந்தியின் ரிஸ்க் ஐடியாக்களுக்கு சோனியா நோ சொல்வார் என்றும் தெரிகிறது.
இதன் மூலம் வரும் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் நிச்சயம் அணி மாறாது, தங்களுடன்தான் நீடிக்கும் என்ற புதிய நம்பிக்கையும் திமுகவினர் மத்தியில் வலுத்துள்ளது.
எங்கேயோ இடி இடிக்க, அது தமிழக காங்கிரஸார் தலையில் வந்து விழுந்துள்ளது. அதன் பலனாக கிடைக்கும் 'மழையி்ல்' திமுக சந்தோஷமாக நனைய நினைக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக