- இந்துப் பத்திரிகையின் ஆசிரியர் என்.ராமுக்கு ஜனாதிபதி வழங்கிய செவ்வி
மனதில் அரசியல் தீர்வொன்றை வைத்திருக்கின்றேன்.அந்தத் தீர்வானது மக்களினாலும் அரசியல் கட்சிகளினாலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும். தனிநாட்டுக் கோரிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைவிட்டிருப்பது மிகவும் சிறப்பான முன்னேற்றமாகும். புதிய தலைமைத்துவத்தை கட்டியெழுப்ப வேண்டுமென தமிழ் மக்கள் விரும்புகின்றனர்.அடுத்த வருடம் வட மாகாணசபைக்கான தேர்தல் இடம்பெறும். தமிழ் மக்களின் மனங்களை வென்றெடுப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார்.
தமது முதலாவது பதவிக் காலத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது அரசியல் எதிராளிகள் மற்றும் வெளியுலகத்தினரால் குறைந்த மட்டத்தில் மதிப்பிடப்பட்டிருக்கிறார். விடுதலைப்புலிகளை அழிப்பதற்கான அவரின் அரசியல், இராணுவத் தந்திரோபாயத்தின் பின்னர் அவர் அதிகளவிலான அரசியல் ரீதியான ஆதிக்கத்தை வென்றெடுத்துள்ளார். இரு பாரிய தேர்தல் வெற்றிகளையீட்டியிருக்கிறார்.கடந்த நவம்பர் 19 இல் அவர் தனது இரண்டாவது பதவிக்காலத்தை ஆரம்பித்திருக்கிறார். தனது எதிர்கால இலக்குகள் மற்றும் முன்னாலுள்ள சவால்கள் தொடர்பாக இந்துப் பத்திரிகையின் ஆசிரியர் என்.ராமுக்கு அலரிமாளிகையில் அவர் விரிவான பேட்டியொன்றை அளித்திருக்கிறார். ஒரு மணிநேரம் இடம்பெற்ற இந்தப் பேட்டியின் முதலாவது பகுதியை இந்துப் பத்திரிகை நேற்று திங்கட்கிழமை பிரசுரித்திருக்கிறது. அப்பேட்டி விபரம் வருமாறு:
- ஜனாதிபதி அவர்களே! முதலாவது ஆட்டத்தில் நீங்கள் அதிகளவு புள்ளிகளை ஈட்டியுள்ளீர்கள்? இரண்டாவது ஆட்டத்தை ஆரம்பித்துள்ளீர்கள். இலங்கைக்கும் இலங்கைக்கு வெளியேயும் பலர் மத்தியில் அதிகளவிலான எதிர்பார்ப்புகள் காணப்படுகின்றன. அவை தொடர்பாக தங்கள் பிரதிபலிப்பு எவ்வாறு அமையும்?
முதலாவது பதவிக் காலத்தில் இந்த நாட்டிற்கு சமாதானத்தைக் கொண்டு வந்துள்ளேன். பயங்கரவாதத்தை அழித்து சமாதானத்தை ஏற்படுத்தியுள்ளேன். இப்போது நாட்டை அபிவிருத்தி செய்வதே எனது குறிக்கோளாகும். அதன் பின்னர் மனங்களையும் இதயங்களையும் வெற்றிகொள்ள வேண்டிய மக்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய, விடயமுள்ளது. இப்போது இலங்கை ஒரு நாடாகும். இது பிளவுபட்டிருக்கவில்லை. ஆதலால் முழு நாடுமே சகல அனுகூலங்களையும் பெற்றுக்கொள்வதை பார்ப்பதற்கு நாங்கள் விரும்புகிறோம். ஒரு பகுதி மட்டுமல்ல, ஒரு சமூகம் மட்டுமல்ல சகல மக்களுமே அனுகூலமடைவதற்காக பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய வேண்டியுள்ளது.
- முன்னர் தாங்கள் மூன்று "டி'க்கள் பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள். அபிவிருத்தி ஜனநாயக மயப்படுத்துதல, பகிர்வு அந்த நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா?
இல்லை,அபிவிருத்தி முக்கியமானதாகும். அபிவிருத்தியும் சமாதானமும் இல்லாவிடில் எம்மிடம் ஜனநாயகம் இருக்க முடியாது.ஜனநாயகம் மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் நாங்கள் ஜனநாயக நாட்டைக் கொண்டுள்ளோம். அடுத்ததாக அதிகாரப் பகிர்வாகும். மக்களின் மனங்களை அறிந்துகொள்வது அவசியமென நாங்கள் கூறியிருந்தோம். அரசியல்வாதிகள் தத்தமது கோட்பாடுகளைக் கொண்டிருப்பார்கள். ஆனால், மக்கள்,புதிய தலைமுறையினர் வேறுபட்ட கருத்துக்களை வைத்திருப்பார்கள். திட்டவட்டமாக அவர்கள் எதனை விரும்புகிறார்கள் என்பதை மீள உறுதிப்படுத்திக்கொள்ள நாம் விரும்புகிறோம். இதனை நாங்கள் நிச்சயமாக மேற்கொள்வோம். சமாதானத்திற்கு இவை யாவுமே எமக்குத் தேவைப்படுகிறது.
- கிராமப் பகுதிகளுக்கு நீங்கள் செல்லும்போது இலங்கை மக்களின் பதில் எவ்வாறாக உள்ளதென்பதை நீங்கள் கண்டுகொள்கிறீர்கள்? இரு பாரிய தேர்தல்களில் நீங்கள் வெற்றியடைந்துள்ளீர்கள்?
கிராமங்களுக்கு நான் செல்லும்போது மக்களுடன் கதைக்கும்போது அவர்கள் மிகவும் அன்பாகவும் நட்புறவுடனும் உள்ளனர். இதனை நான் உணர்கிறேன்.
- அரசியல் ரீதியாகப் பேசுவதற்கான வலுவான எதிரணி தங்களுக்குக் கிடையாது.எதிரணிச் சக்திகள் உள்ளன. சரத் பொன்சேகா மற்றும் ஏனையோர் உள்ளனர். விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து மிகவும் சிறப்பான விதத்தில் இருக்கும் தெற்காசியத் தலைவர் ஒருவரை வேறெங்கும் நான் பார்க்கவில்லை. இது தொடர்பாக தங்கள் கருத்து என்ன? சில சமயங்களில் நீங்கள் மகிழ்ச்சியை உணர்கிறீர்களா?
எமது மக்களுக்கு நான் நன்றி சொல்வது அவசியம்.எமது ஜனநாயகத்தில் மக்கள் என்னை நம்பியுள்ளனர். அவர்களுக்கு நான் சமாதானத்தை ஏற்படுத்துவேன் என்பது தெரியும். இப்போது அவர்களுக்கு அபிவிருத்தியும் சமாதானமும் தேவை. அவற்றையே மக்கள் எம்மிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள். இப்போது பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளது. இவை யாவும் எனக்கும் எனது கட்சிக்கும் பலத்தைத் தருகின்றன. மக்கள் எதனை விரும்புகிறார்களோ அவற்றை நாம் வழங்க வேண்டியுள்ளது. தமிழ் மக்களின் பிரச்சினையில் புலிகள் அழிக்கப்பட்ட பின் முதலாவது சவாலாக இருந்தது மூன்று இலட்சம் மக்களைப் பராமரிப்பதாகும். அவர்கள் முகாம்களிலிருந்தனர். அவர்களில் அநேகமானோர் தமது பகுதிகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இப்போது முகாம்களிலுள்ள எண்ணிக்கை 18 ஆயிரமாகக் குறைவடைந்திருப்பதாக நான் நம்புகிறேன். இவர்களில் பலர் முகாம்களில் இல்லை. அவர்கள் கிராமங்களுக்குச் சென்று திரும்ப வருகின்றனர். அவர்களில் சுமார் பத்தாயிரம் பேரின் பகுதிகளில் கண்ணிவெடி அகற்றப்பட வேண்டியுள்ளது. அவர்களை இப்போது எம்மால் அனுப்ப முடியாது. டிசம்பர் அளவில் சகலரையும் அனுப்ப முடியுமென எதிர்பார்க்கிறோம். முகாம்களில் இருக்க விரும்புவோரைத் தவிர ஏனையோரை அனுப்ப முடியுமென எதிர்பார்க்கிறோம்.
- இந்த நடவடிக்கைகளுக்கு உதவுவதற்கு உள்நாட்டு,வெளிநாட்டுத் தரப்பிலிருந்து வந்த வளங்கள் தொடர்பாக நீங்கள் திருப்தியடைகின்றீர்களா?
நான் திருப்தியடைந்துள்ளேன். ஏனெனில் எமது நண்பர்கள் எமக்கு உதவியுள்ளனர். இல்லாவிடின், இதனை நாங்கள் வெற்றிகொண்டிருக்க முடியாது.* இப்போது அரசியல் தீர்வு தொடர்பாக அதிகளவிலான எதிர்பார்ப்புக்கள் உள்ளன.13 ஆவது திருத்தத்திலும் கூடிய தீர்வு தொடர்பாக எதிர்பார்ப்பு உள்ளது. இது தொடர்பாக உறுதிமொழி அளிக்கப்பட்டிருந்தது. இந்த விடயத்தில் நகர்வு ஏற்பட்டிருக்கிறதென்ற பிரதிமை காணப்படுகிறது.
இப்போது சகல அரசியல் கட்சிகளுடனும் மட்டுமே எம்மால் கலந்துரையாட முடியும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளக்கூடும். தேர்தல்களுக்குப் பின்னர் நாங்கள் கலந்துரையாடல்களை மேற்கொண்டோம். அவை தொடர்ந்து இடம்பெறும். நான் மனதில் வைத்திருக்கும் தீர்வானது அவர்களுக்கு போதியளவாக இல்லாதிருக்கக்கூடும். அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளாமலிருக்கக்கூடும் அரசியல் கட்சிகளுடன் மட்டுமல்லாமல், மக்களும் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் புதிய தலைமைத்துவத்தை ஏற்படுத்த விரும்புகின்றனர். நாங்கள் அவர்களின் கிராமங்களுக்கு அவர்களை திருப்பியனுப்பிய பின்னர் அவர்கள் இந்த எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளனர். அவர்களிடமிருந்து விடயங்களை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.எதிரணி மற்றும் அரசாங்கத்துடன் இருக்கும் எமது அரசியல் தலைவர்களுடன் நான் ஏற்கனவே கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளேன்.
- விசேடப்படுத்தி வெளியிடாவிடினும் தெளிவான அரசியல் தீர்வு தங்கள் மனதில் உள்ளதா?
ஆம், ஆனால், அவர்களின் கருத்துக்களை நான் முதலில் அறிந்துகொள்ள வேண்டும். குழுவொன்றை நியமிக்க விரும்புகிறோம். இருதரப்பையும் சேர்ந்த குழுவை அமைத்து இந்த விடயங்களை கலந்துரையாட விரும்புகின்றோம்.
- எதிரணி நியாயமான முறையில் ஒத்துழைக்கும் எனக் காண்கிறீர்களா? பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.கட்சியாவது ஒத்துழைக்குமெனக் கருதுகிறீர்களா?
(சிரிக்கிறார்) அவர்கள் தம்மை தக்கவைத்துக்கொள்ள வேண்டியிருப்பது பிரச்சினையாகும். எதிரணி தமது சகல சுலோகங்களையும் தொலைத்துவிட்டது. இப்போது அவர்கள் புதிய சுலோகங்களைக் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. ஆனால், இந்த விடயம் குறித்து எதிரணி ஞாபகத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும். நாட்டுக்குள் இருந்து அவர்கள் எம்மை எதிர்க்க வேண்டும். அது அவர்களின் ஜனநாயக ரீதியான கடமையாகும். நாங்கள் நாட்டுக்கு வெளியே செல்லும்போது யாவரும் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்துகின்றோம் என்பதை அவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். மோதல் இங்கு தான், இலங்கையில் தான், வெளியில் செல்லும் போதல்ல, எப்போதுமே நாட்டுக்கு அவர்கள் மரியாதை செலுத்துவது அவசியமாகும்.
- தங்கள் அரசியல் வாழ்வு பூராவும் இந்தக் கோட்பாட்டை நீங்கள் பின்பற்றியுள்ளீர்கள். எதிரணியிலிருந்தபோதும் அதனைச் செய்தீர்களா?
ஆம்.நான் ஒருபோதுமே வெளியில் சென்று ஏதாவது உதவியை நிறுத்துவதற்கோ, அனுகூலங்களை நிறுத்துவதற்கோ முயற்சித்ததில்லை. அந்தளவுக்கு நாங்கள் ஒருபோதுமே சென்றதில்லை. “ஆம். மனித உரிமை மீறல்கள் உள்ளன என்று நாம் கூறியிருந்தோம். ஏனெனில் ஜெனீவாவுக்கு முதலாவதாகச் சென்ற ஆள் நான்தான். மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் நான் சாட்சியமளித்திருந்தேன். ஆனால், உதவிகளை வாபஸ் பெறுமாறோ,இலங்கை மக்களின் அனுகூலங்களை இல்லாமல் செய்யுமாறோ ஒருபோதும் அரசாங்கங்களிடம் அழுத்தம் கொடுக்க நாங்கள் முயற்சித்ததில்லை.
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருப்பவர்களோ ஒன்றுபட்ட இலங்கைக் கட்டமைப்புக்குள் அதிகாரப்பகிர்வுப் பொதியை ஏற்றுக்கொள்ள முடியுமென முதற்தடவையாகக் கூறியுள்ளமை கவனத்திற்கெடுக்கக்கூடிய விடயமாகும். அதனை எவ்வாறு நீங்கள் பார்க்கிறீர்கள்?
இது மிகவும் சிறப்பான முன்னேற்றமாகும். ஏனெனில் அவர்கள் முன்னர் தனிநாட்டை விரும்பியிருந்தார்கள். இது மிகவும் சிறப்பான முன்னேற்றம். இப்போது அவர்களுடன் பேச்சுவார்த்தையை நாம் ஆரம்பிக்க முடியும்.
- அவர்களிடமிருந்து நீங்கள் அதிகளவை எதிர்பார்க்கிறீர்களா?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இருந்து மட்டுமல்லாமல் சகல தமிழ்க் கட்சிகளிடமிருந்தும் எதிர்பார்க்கிறோம். எமக்கு அவர்களின் ஆதரவும் தமிழ் மக்களின் ஆதரவும் தேவை. இது மிகவும் முக்கியமானதாகும். பிரபாகரன் விரும்பியிருந்ததை தங்களால் பெற்றுக்கொள்ள முடியாதென்பதை அவர்கள் உணர்ந்து கொள்வது அவசியமாகும். அதாவது துவக்குகள்,ஆயுதங்கள் மற்றும் பயங்கரவாதத்தின் மூலம் பிரபாகரன் விரும்பியிருந்ததை அவர்கள் பெற்றுக்கொள்ள முடியாதென்பதை அவர்கள் உணர்ந்துகொள்வது அவசியம். அந்த வழி முறையில் அவர்களால் நாட்டை அச்சுறுத்த முடியாது. பிரபாகரனுக்கு நாங்கள் எதனைக் கொடுக்க மறுத்தோமென்பதையும் அவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். ஏனையவர்களுக்கும் நாங்கள் கொடுக்கமாட்டோம். இந்த நடவடிக்கைகளில் நியாயமான முறையில் யதார்த்தமான வழியில் அவர்கள் இருப்பது அவசியமாகும். ஏனையோரின் உணர்வுகளையும் அவர்கள் தெரிந்து கொள்வது அவசியமாகும்.
- அரசியல் தீர்வுப்பொதி தொடர்பாக அரசியல் கருத்தொருமைப்பாட்டை ஏற்படுத்தி இந்த அரசியல் இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு முன்னர் வட மாகாணத்தில் ஏன் தேர்தல்களை நடத்தவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கூட அதிகளவுக்கு வேகங்காட்டவில்லை எனத் தோன்றுகிறது?
ஆம். தற்போது இந்த நிலையில் மக்களை நாம் மீளக்குடியேற்ற வேண்டியுள்ளது. அவர்களின் அடிப்படைத் தேவைகளை வாழ்வாதாரங்களை வழங்க வேண்டியுள்ளது.
- ஆனால், அவர்கள் ஜனாதிபதி,பராளுமன்றத் தேர்தல்களில் வாக்களித்தனரே. முகாம்களிலிருந்தவாறு அவர்கள் வாக்களித்துள்ளனர். இப்போது அவர்கள் முழுமையாக மீளக்குடியமர்த்தப்படும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டியுள்ளதா?
அவர்கள் யாவரையும் வாக்காளர் இடாப்பில் பதிவு செய்ய வேண்டிய தேவையுள்ளது. 1981 குடிசன மதிப்பீட்டின் பிரகாரம் நாம் தேர்தலை நடத்த முடியாது. கிழக்கில் புலிகளைத் தோற்கடித்த பின் நாம் உடனடியாகத் தேர்தலை நடத்தியிருந்தோம். வடக்கில் அவர்கள் முகாம்களிலிருக்கும்போது தேர்தலை நடத்த நான் விரும்பியிருக்கவில்லை. ஏனெனில் இது தொடர்பான உரைபெயர்ப்பு வேறுபட்டதாக அமையும். இப்போது சாத்தியமானளவுக்கு விரைவாக வடமாகாண சபைக்கான தேர்தலை நடத்த விரும்புகிறேன். அடுத்த வருடம் இதனைச் செய்யக்கூடியதாக இருக்கும். எம்மை விமர்சிக்க விரும்பும் மக்கள் எப்போதுமே விமர்சிப்பார்கள். தாழ்ந்த மட்டத்திலான வாக்குப்பதிவு என விமர்சிப்பார்கள். ஆனால், 1981 குடிசன மதிப்பீட்டின் பிரகாரம் எங்களால் தேர்தலை நடத்த முடியாது.
- இலங்கையில் பாரியளவிலான உள்சார் கட்டமைப்பு அபிவிருத்தி பற்றி சகலருமே பேசுகின்றனர். கண்ணிவெடி அகற்றப்பட வேண்டிய பகுதிகளைத் தவிர, ஏனைய சகல பகுதிகளிலும் உள்ளவர்கள் இதனைப் பற்றியே பேசுகின்றனர். ஆகவே,சிறப்பான விடயங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்தத் துரிதமான அபிவிருத்தியுடன் அரசியல் நடவடிக்கைகளுக்கும் இடமளித்து துரிதப்படுத்த முடியாதா?
துரதிர்ஷ்டவசமாக சம்பந்தப்பட்டவர்கள் இல்லை. அரசியல் நடவடிக்கைகளை நாங்கள் ஆரம்பிக்கும்போது எதிரணி ஒத்துழைக்க வேண்டும். சகலரும் தீர்வுக்கு சம்மதிக்க வேண்டும். இது எனது தனிப்பட்ட தீர்வல்ல. இது மக்களின் தீர்வு. இது அடிமட்டத்திலிருந்து ஏற்படும் தீர்வு.இறக்குமதி செய்யப்பட்டதல்ல. இதனைப் பலவந்தமாகத் திணிக்க முடியாது. இது மக்களிடமிருந்து வர வேண்டும். இந்தத் தீர்வையே நாம் விரும்புகின்றோம். இப்போது யாவரும் ஒரே நாடாக,ஒரே தேசமாக இருக்க விரும்புகின்றனர். நான் வடக்கிற்குச் சென்றுள்ளேன். எமது இளம் எம்.பி.க்கள் சென்றுள்ளனர். அங்கு பல பில்லியன் ரூபாவை நாம் செலவழித்துள்ளோம். கிழக்கு மாகாணத்திற்கும் வடக்கிற்கும் நாம் செலவழித்த தொகை ஏனைய மாகாணங்களுக்கு செலவிடவில்லை. ஒப்பிட்டுப் பார்த்தால் கண்டுகொள்ளலாம். வட,கிழக்கில் நாம் பாரிய தொகையை முதலீடு செய்துள்ளோம்.
- அரசியல் ரீதியான இணக்கப்பாடு ஏற்பட்டால் வேறு எந்தவொரு பிரச்சினையும் இல்லை. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவானது 2002 இலிருந்து யுத்தம் முடிவடைந்த காலப்பகுதிக்கான நிகழ்வுகளை விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அந்த ஆணைக்குழு பரிந்துரைகளையும் மேற்கொள்ளவுள்ளது. தென்னாபிரிக்க முன்மாதிரியை (உண்மை நல்லிணக்க ஆணைக்குழு) நாம் கொண்டுள்ளோம். இந்த விடயத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை நீங்கள் எவ்வாறு மதிப்பிடுகிறீர்கள்?
மிகவும் சிறப்பானதென என்னால் சொல்ல முடியும். ஏற்கனவே அவர்கள் இடைக்காலப் பரிந்துரைகளை எமக்கு வழங்கியுள்ளனர். அதனை அமுல்படுத்துமாறு நான் அதிகாரிகளுக்குக் கொடுத்துள்ளேன். குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவானது கொழும்பில் மட்டும் சந்திப்பை நடத்தவில்லை. அவர்கள் வடக்கே செல்கிறார்கள். கிராமங்களுக்குச் செல்கிறார்கள். மக்களைச் சந்திக்கிறார்கள். மக்கள் தங்களிடம் வரவேண்டுமென அவர்கள் காத்திருக்கவில்லை. அவர்கள் மக்களிடம் சென்றுள்ளனர். சர்வதேச மனித உரிமைக் குழுக்களை வருகைதந்து சாட்சியமளிக்குமாறு அழைப்பு விடுத்திருந்தனர். ஐ.நா.வுக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இப்போது வருகைதந்து அவற்றைக் கண்டுகொள்ள முடியும். அவர்கள் சிறப்பாகச் செயல்படுவதாக நான் நினைக்கிறேன். ஆயினும் ஆணைக்குழு தொடர்பாக சில தரப்பினர் தமது சொந்தக் கருத்துகளைக் கொண்டுள்ளனர்.
- *ஐ.நா.வின் முயற்சியையும் நீங்கள் கொண்டுள்ளீர்கள். செயலாளர் நாயகத்துக்கு ஆலோசனை வழங்குவதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் எதிர்ப்புக்கு மத்தியில் அக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்களின் கோரிக்கைகள் அதிகளவில் உள்ளன. மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை செய்யுமாறு அவை வலியுறுத்துகின்றன.?
தன்னார்வத் தொண்டர் நிறுவனங்களின் இந்த நிலைமையை நான் புரிந்துகொள்கிறேன். எதனையோ அவர்களால் கூற வேண்டியுள்ளது. நாம் எதனைச் செய்கின்றோமோ அவர்கள் எதனையோ சொல்ல வேண்டியுள்ளது. அவர்களுடைய கருத்துகளுக்காக சிலரின் கருத்துகளை எம்மால் மாற்ற முடியும். சகலரினதும் கருத்துகளை மாற்ற முடியாது. ஏனைய நாடுகளைப் பற்றி நீங்கள் பேசினால் அங்கும் மோதல்கள் உள்ளன. மனித உரிமைப் பிரச்சினைகள் உள்ளன. நீங்கள் இது தொடர்பான வித்தியாசத்தைப் பார்க்க முடியும். உதாரணமாக மூன்று இலட்சம் மக்கள் இந்தத் தரப்புக்கு வந்தபோது நாங்கள் சில கிராமங்களை நிர்மாணித்தோம். அங்கு மக்களை வைத்திருந்தோம். அவர்களை நாங்கள் சித்திரவதை முகாம்களில் வைத்திருப்பதாக அவர்கள் கூறியிருந்தனர். அந்தத் தருணத்தில் நீங்கள் அங்கு சென்றிருந்தீர்கள். அவை சித்திரவதை முகாம்களா என்பதை நீங்களே கண்டறிந்திருக்க முடியும். நாங்கள் மக்களை மீளக்குடியமர்த்தியபோது நிரந்தர வீடுகளில்லையென அவர்கள் கூறினார்கள். ஆறு மாதங்களுக்குள் நாங்கள் நிரந்தர வீடுகளை நிர்மாணிக்க வேண்டியிருந்தது. கண்ணிவெடி அகற்றப்படாவிடில், எவ்வாறு அவர்களை மீளக்குடியமர்த்த முடியும். அவ்வாறு செய்திருந்தால் நாங்கள் வேண்டுமென்றே இந்த மக்களைக் கொல்லப் போவதாக அவர்கள் கூறியிருப்பார்கள். தேர்தல் வேளையில்,இலங்கையில் இந்த சில தன்னார்வத் தொண்டர் நிறுவனங்களை நாம் பார்த்திருக்கின்றோம். தன்னார்வ நிறுவனங்களில் ஒன்றான டிரான்ஸ் பேரன்ஸி இன்ரநெஷனலின் உள்ளூர் கிளையானது 2009 இல் 109 மில்லியன் ரூபாவைச் செலவிட்டிருந்தது. ஒரு மாத காலத்திற்குள் இத்தொகை செலவிடப்பட்டது. தேர்தல் மாதமான (ஜனவரியில்) 69 மில்லியன் ரூபாவைச் செலவழித்தது. அரசாங்கத் திணைக்களமொன்றால் இந்தளவு தொகையைச் செலவிட முடியாது. இதனையே அவர்கள் செய்திருந்தார்கள். உள்நாட்டு அரசியலில் சம்பந்தப்பட்டிருந்தனர். அரசாங்கங்கள் மாற வேண்டுமென அவர்கள் விரும்புகின்றனர். தலைவர்களை மாற்ற விரும்புகின்றனர். அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. இந்தத் தொண்டர் நிறுவனங்களில் சில வெளியேறிவிட்டன. சில பணியாற்றுகின்றன.
தமிழில் . தினக்குரல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக