செவ்வாய், 23 நவம்பர், 2010

ஆங்கில சட்டத்தரணி ஒரு தமிழனாற் கொலை ,தமிழ்க் கொலையாளி- நீனா கனகசிங்கம்


ஆங்கில சட்டத்தரணி டேவிட் பேர்ஜஸின் கொலை.
இலங்கைத் தமிழர்களுக்கு உதவி செய்யப் பிரித்தானிய குடிவரவுச் சட்டத்தையே மாற்றியமைக்கப்போராடிய ஆங்கில சட்டத்தரணி ஒரு தமிழனாற் கொலைசெய்யப்பட்ட துக்க சம்பவம்.
- இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
25ம் திகதி இரவு 7.30அளவில், எனது கடைசி மகன் சேரன் வேலையால் வீடுதிரும்பவேண்டிய நேரம். ஆனால் அவன் மிகவும் நேரம் கழித்து வந்தான் என்ன நடந்தது? ஓவர் டைம் செய்தாயா? அப்படியானால் எனக்குச் சொல்லியிருக்கலாமே' என்று நான் சொன்ன போது, அம்மா உங்களுக்குக் காரணம் சொல்லாமல் நான் பிந்தி வருவதில்லை. ஆனால இன்றைக்கு கிங்ஸ் குறொஸ் ஸ்ரேசனில் ஒரு விபத்து . யாரோ ஒரு ஆள் இன்னொரு ஆளை ட்ரெயினுக்கு முன்னாற் தள்ளி விட்டுக் கொலை செய்து விட்டதால் ஸ்ரேசனெ ஸதம்பித்துவிட்டது. ட்ரெயின் சேவைகள் தொடங்க நேரமானபடியால் லேட்டாகிப் போய்விட்டது' என்று விளக்கம் சொன்னான்.
சிலவேளைகளில் இப்படியான அதிர்ச்சிச் சம்பவங்கள் நடப்பதுண்டு. 'ஐயோ பாவம், இப்படியான கொடுமையான கொலை ஏன் நடந்தது'? என்று இறந்த மனிதனுக்காகப் பரிதாபப்பட்டேன்.
 இரண்டு நாட்களின் பின் இறந்த மனிதன் ஒரு சட்டத்தரணி என்றும் அவரைத் தள்ளி விட்டுக்கொலை செய்தவரின் பெயர் நீனா கனகசிங்கம் என்றும், இந்தக் கொலை பற்றிய முழுவிபரங்களும் ஆராயப் படுவதாகவும் பத்திரிகைகளில் இருந்தது. அடுத்த நாள் பத்திரிகைச் செய்தியின்படி இறந்தவரின் பெயர் டேவிட் பேர்ஜஸ் என்றும் அவர் லண்டனில் பிரசித்த பெற்ற ஆங்கிலேய சட்டத்தரணி என்றும் விபரம் வெளி வந்தது.
 டேவிட்?  ஏன் மனம் எங்கேயோ பறந்தது. பழைய ஞாபகங்களும் கேள்விகளும் மனதை நெருடின. ரெயில்வே ஸ்ரேசனில் தள்ளி விழுத்தப்பட்டக்கொலை செய்யப்பட்ட சட்டத்தரணி டேவிட்போர்ஜஸ்? 1980மு; ஆண்டுகளில் எங்களுக்காக தமிழ் அகதிகளுக்காகப்; போராடிய டேவிட்டா?
அகதிகளுக்கும் அன்னிய நாட்டிலிருந்து லண்டனுக்கு வந்து இங்கிலாந்தின் பலதரப்பட்ட குடிவரவுப் பிரச்சினைகளாலும் அல்லல்படும் ஏழைகளுக்கு உதவி செய்த மனித நேயவாதியான டேவிட்டை எந்தப் பாவி கொலை செய்திருப்பான் என்று கேள்விகளைக் எனக்குள் கேட்டுக்கொண்டேன்
துப்பறியும் கதைகளில் வரும் செய்திபோல் அதிர்ச்சியாயிருந்தது. உடனடியாக 1980ம் ஆண்டுகளில் எங்களுடன் தமிழ் அகதி ஸ்தாபன நிர்வாகக்கூட்டத்தின் ஒரு அங்கத்தவராகவிருந்த எனது சினேகிதி ஸ்ரெபானி  என்பவரைத் தொடர்பு கொண்டேன்.
ஆமாம் இறந்து விட்ட டேவிட் எங்கள் நண்பா டேவிட்தான் என்று உறுதிப்படுத்தினாள் ஸரெபானி., தமிழருக்காக எத்தனையோ வாதங்களை முன்னெடுத்து வேலை செய்த, பிரித்தானிய சட்டதிட்டங்களையே மாற்றிய ஒரு ஆங்கில சட்டத்தரணியை ஒரு தமிழன் கொலை செய்துவிட்டது என்று கேள்விப்பட்டது கோபத்தையும் வேதனையையும் தந்தது.
இங்கிலாந்துக்கு அகதிகளாக வருபவர்களுக்கும்  அன்னிய நாட்டிலிருந்து லண்டனுக்கு வந்து இங்கிலாந்தின் பலதரப்ப்டட குடிவரவுப் பிரச்சினைகளாலும் அல்லற்படும் ஏழைகளுக்கும் உதவி செய்த டேவிட்டை ஏன் இந்தத் தமிழன் கொலை செய்திருப்பான் என்று பல தடவை என்னைக்கேட்டுக்கொண்டேன்.
1980ம் ஆண்டு முற்பகுதியில், இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த பயங்கரக்கொடுமைகளைக் கண்டு உலகம் கொதித்தெழுந்தன. 1983ம் ஆண்டுக்குப் பின் அகதிகளாக இங்கிலாந்துக்கு வந்த தமிழர்களுக்கு உதவி செய்ய தமிழ் அகதி ஸதாபனத்தை அமைத்தோம். அந்த ஸ்தாபனம் இலங்கையில் ஆயுதம் தாங்கிப் போராடிக்கொணடிருந்த ஐந்து விடுதலை அமைப்புக்களின் முன்னெடுப்பில் இயங்கிக் கொண்டிருந்தது.
அன்றைய கால கட்டத்தில் பிரித்தானிய தொழிற் கட்சி எதிர்க்கட்சியாகவிருந்தது. கொன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியிலிருந்தது மட்டுமல்லாமல் பிரேமதாசா அரசுக்கு அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகளுடன் சேர்ந்து தமிழருக்கு எதிரான உதவிகளைச்செய்து கொண்டிருந்தன. தொழிற்கட்சியின் பிரபல எம்பிக்கள் எங்களுக்கு உதவி செய்தார்கள். இலங்கையின் நிலையைப் பார்த்தவரச்சொல்லி ஜெரமி கோர்பின் என்ற எம்.பி.யையும சில பத்திரிகையாளர்களையும்  இலங்கைக்கும் இந்தியாவுக்கும் அனுப்பியிருந்தோம் அதனால் இலங்கைத் தமிழரின் துயர்கள் பிரித்தானியாவில் பரவலாகத் தெரியப்பட்டிருந்தன.
 டேவிட் பேர்ஜஸ் அந்தக் கால கட்டத்தில்  வின்ஸ்ரான்லி-பேர்ஜஸ் என்ற பிரபல ஸதாபனத்தின் சட்டத்தரணியாக வேலைசெய்து கொண்டிருந்தார்.  தமிழ் அகதிகள் ஸ்தாபனத் தலைவியாயிருந்த எனக்கு அறிமுகமானார்.  இலங்கைத்தமிழர்கள் துருக்கிய, குர்டிஷ் அகதிகளுக்கு உதவுவதில்  ஆர்வமாகவிருந்தார். அப்போது லண்டன் 'ஜொயின்ற் இமிகிறேசன் வெல்வெயார்' ஸ்தாபனத்திலும் சம்பளம் பெறாத  சட்டத்தரணியாக உதவி செய்துகொண்டிருந்தார்.
இலங்கைப் பிரஜையான விராஜ் மெண்டிஸ் எனற இடதுசாரி ஒருவரின் விசா காலாவாதியானதால் அவரை இலங்கைக்கு அனுப்ப பிரித்தானிய அரசு முயன்றபோது, இலங்கையில் ஐக்கியதேசியக் கட்சி இடதுசாரிகளை வேட்டையாடிக் கொண்டிருந்தபோது தன்னை இலங்கைக்குத திருப்பி அனுப்பப்பட்டால்; தனக்கு ஆபத்து வரும என்று விராஜ் மெண்டிஷ் பிரித்தானியாவில்  அகதியாகவிருக்கக் கோரியபோது அவரின் விண்ணப்பம நிராகரிக்கப்பட்டது. அவருக்காக டேவிட் வழக்காடினார் துரதிர்ஷ்டவசமாக மெண்டிசின் மனு நிராகரிக்கப்பட்டது. 1989ல் விராஜ் ஐரோப்பிய நாடு ஒன்றுக்குப்போய்விட்டார்.
1988ல் லண்டனுக்கு அகதிகளாக லண்டனுக்கு வந்த 52தமிழர்களின் அகதி விண்ணப்பத்தை அரசாங்கம் ஏற்கவேண்டும் என்ற போராட்டத்தையும் மீறி 52தமிழ் அகதிகளையும் பிரித்தானியா இலங்கைக்கு அனுப்பியது.
 இலங்கைக்கு அனுப்பப் பட்ட தமிழ் அகதிகளின் நிலையை அறிய டேவிட் இலங்கை சென்றார் அங்கே அப்போது பல கொடுமைகள் நடந்துகொண்டிருந்ததைக்கண்ட அவர் பிரித்தானிய அரசுடன்  வாதாடி இலங்கைக்குத் திருப்பியனுப்பபட்ட தமிழ் அகதிகள் 52 பேரையும் லண்டன் திரும்ப வழிசெய்தார்.
அகதிகள் மட்டுமல்லாது, தீவிரவாதிகள் என்று குற்றம் சாட்டப்பட்டதால் நாட்டை விட்டு இங்கிலாந்துக்கு வந்த விடுதலைப்போராளிகளின் மனித உரிமைக்கும் டேவிட் குரல் கொடுத்தாh.  அதில் முக்கியமான வழக்கு இந்திய சீக்கியர் ஒருவருக்கு எதிரான வழக்காகும் இந்தியாவில 'காலிஸ்தான்' பிரிவினைபற்றிய குற்றச்சாட்டில் அகப்பட்ட கரம்ஜித்;சிங் சாகால் என்றவரை இந்தியாவுக்குத் திருப்பியனுப்பினால் அவர் இந்திய அரசால் சித்திரவதைக்குள்ளாகக்கூடும் அத்துடன் அவரின் உயிருக்கும் ஆபத்திருக்கும் என்பதை முன்வைத்து அவர் போராடிய வழக்கு பிரித்தானியாவில் ' வீடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பவர்களாகக்கு கருதப்பட்டவர்கள் பற்றிய சட்டங்களை மாற்றியது. ஆதனால்;தான் செப் 11ல் குற்றம் சாட்டப்பட்ட முஸ்லிம்களை அவர்களின் சொந்த நாடுகளுக்குத் (பாகிஸ்தான், சவுதி அரேபியா போன்ற நாடுகள்) திருப்பியனுப்ப முடியாது என்ற சட்டம் இங்கிலாந்தில் அமுலில் இருக்கிறது.
அதே மாதிரியே இலங்கையிலிருந்து லண்டன் வந்திருந்த புலிகளின் முக்கிய தலைவர்களில் ஒருத்தராகவிருந்த 'கிட்டு; என்ற கிருஷ்ணகுமார் அவர்களின் வழக்கையும் எடுத்திருந்தார். இப்படிப் பல அகதிகளுக்கு உதவி செய்த டேவிட்டை ஒரு தமிழன கொலை செய்தது வெட்ககரமான விடயம்.
 டேவிட், சமய, இன பேதமற்ற மனித நேயவாதி. அகதிகள் மட்டுமல்லாது, தங்களை அடையாளம் மாற்றிக்கொள்ள நினைப்பவர்களுக்கும் தனது சட்டவன்மை மூலம் பல உதவிகளைச் செய்தார்.
 1947 புரட்டாதி 25ல் பிறந்த டேவிட் தீபெத் நாட்டைச்சேர்ந்த யோன்டோன் என்பவரைத் திருமணம் செய்தவர்.ஒரு மகனும ஒரு மகளும் ஒரு வளர்ப்பு மகளும் இருக்கிறார்கள்.
 இங்கிலாந்தில் எந்த அரசியற்; கட்சி பதவிக்கு வந்தாலும் அந்தக்கட்சி அகதிகளுக்கோ அல்லது குடிவரவக் கஷ்டப்படுபவர்களுக்கோ இடர் செய்தால் அந்த அரசை எதிர்த்து வாதிடத்தயங்காதவர். பிரித்தானிய அரசைப் பல தடவை  ஐரோப்பிய வழக்கு மன்றத்தில் நிறுத்தி வெற்றி கணடவர்.
 திபேத்துக்குப் போய் அந்த நாட்டு மொழியையும் கலாச்சாரத்தையும் கற்றவர் லண்டனில் எள்ள செயின்ட் மார்ட்டின் ஒன் த பீல்ட என்ற இடத்திலுள்ள மிகப்பழமைவாய்ந்த கிறிஸ்;தவ தேவாலயத்தால் முன்னெடுக்கப்படும் தர்மஸ்தான வேலைகளில் மிகவும ஈடுபாடுள்ளவா.
இந்தக் கட்டுரை ஏன் எழுதப்படுகிறதென்றால், அவர் தமிழர்களுக்கான வழக்குகளில் ஈடுபட்டு உதவி செய்தார் என்பதற்காகவல்ல. ஆனால், உலகில் இப்படியான தன்னலமற்ற மனிதநேயவாதிகள் பிறப்பது மிக அருமை. அத்துடன் டேவிட் தமிழருக்குச் செய்த உதவிகளுக்காக நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம். டேவிட் இனபேதம் மதபேதமின்றி சகலரையும் ஒன்றாக மதிக்கும் ஒரு சமூகநலவாதி. அவரை இழந்தது மிகவும் பாரிய இழப்பாகும.
தமிழ்க் கொலையாளி- நீனா கனகசிங்கம்
டேவிட்டைக்கொலை செய்த நீனா கனகசிங்கம் என்பவர்  தன்னைப் பெண்ணாக மாற்றும் சத்திரசிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தவர் என்று பத்திரிகைகள் கூறின. டேவிட்டின் மரணச் சடங்குக்குப்போயிருந்தபோது, டேவிட்டும் தன்னைப்பெண்ணாக மாற்றும் முயற்சியுடன ;இருந்தார் என்ற செய்தி தெரியவந்தது. நீpனாவுக்கு டேவிட் நிறைய உதவிகள் செய்ததாகச்சொல்லப் பட்டது. இருவருக்கும் என்ன உறவு இருந்தது என்று யாருக்கும் தெரியாது. இன்று நீனா சிறையில் இருப்பதால் அவரின் நலவாழ்வுக்கப் பிரார்த்தனை செய்யும்படி டேவிட்டின் மரணச் சடங்கின்போது கேட்கப்பட்டது. நீpனா ஏன் டேவிட்டைக்கொலை செய்தார் என்பது இதுவரையும் மர்மமாகவிருக்கிறது. நீனா ஒரு மன நோயாளி என்ற பேச்சும் அடிபடுகிறது. நீனாவைப் பிணையெடுக்க யாரும் வரவில்லை என்றும் தெரிகிறது.
இந்தக்கொலை வழக்கு கோர்ட்டுக்கு வந்தபின்தான் உண்மைகள் தெரிய வரும்.

கருத்துகள் இல்லை: