அமைச்சர்கள் 10 ‐15 வாகனங்களில் செல்வது தமக்கு பெரும் கௌரவம் என எண்ணிய போதிலும் மக்கள் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், ஒரு குறையுமின்றி அமைச்சர்களாக மக்களுக்காக தம்மால் செய்ய வேண்டிய கடமைகளை செய்ய அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புதிய அமைச்சரவையின் அமைச்சர்களும் பிரதியமைச்சர்களும் நேற்று பதவியேற்றுக் கொண்ட பின்னர், அவர்கள் மத்தியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற பதவியேற்பு வைபவத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, அமைச்சர்களாகவும் பிரதியமைச்சர்களாக பதவியேற்றவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக கூறினார்.
புதிய அமைச்சரவையில் அனுபவமுள்ள சிரேஷ்ட அமைச்சர்கள் சிலர் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் எமக்கு பாரிய பொறுப்பை வழங்கியுள்ளனர். நாம் நீண்ட பயணத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளது. கடந்த 5 வருடத்தில் மக்களுக்கு நாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். அந்த காலப் பகுதியில் நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தி, நாட்டை ஐக்கியப்படுத்தினோம். நாட்டின் அபிவிருத்தியை உலகில் உயர்ந்த இடத்திற்கு கொண்டு சென்று மக்கள் சமாதானமாகவும் நிம்மதியாகவும் வாழக் கூடிய நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். இதற்கு அமைச்சர்களின் அர்ப்பணிப்புகளை நான் எதிர்பார்த்துள்ளேன். அமைச்சுக்களில் அநாவசிய செலவுகளை குறைத்து, மக்களுக்கு தேவையான வகையில் நிதி பயன்படுத்தப்படும். இது தொடர்பில் அமைச்சர்களுக்கு பாரிய பொறுப்பு உள்ளது. அமைச்சர்கள் என்ற வகையில் நீங்கள் கூறும் விடயங்கள் மக்கள் நம்புவார்கள், இதனால் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும். அமைச்சுக்கள் மாற்றியமைக்கப்படும் பட்சத்தில் விமர்சனங்கள் தேவையில்லை. இவ்வாறான விமர்சனங்கள் கட்சியின் ஐக்கியம் தொடர்பான பிரச்சினைகளை ஏற்படுத்தும். தமக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை உரிய முறையில் நிறைவேற்றினால் மக்களே அதனை பாராட்டுவார்கள்.
கதைகளை பேசுவதை விடுத்து அதிகமான வேலை செய்யுங்கள். வீண் விரயம் மற்றும் ஊழலை இல்லாதொழிக்க வேண்டும். மக்கள் தமது தேவைகளை நிறைவேற்றவே எம்மை தெரிவுசெய்துள்ளனர். எனது கட்டுப்பாட்டில் உள்ள இரண்டு அமைச்சுக்களின் பிரதியமைச்சர்களை அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக பொறுபேற்றுக்கொள்ளுங்கள் எனக் கூறிய போது, எனது அமைச்சின் கீழ் பிரதியமைச்சர்களாக இருப்பது சிறந்தது என அவர்கள் தெரிவித்தனர். அவர்கள் இருவரும் என் மீது வைத்துள்ள நம்பிக்கை நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அமைச்சர்கள் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் உங்களது கடமைகளை நிறைவேற்றுங்கள் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக