புதன், 15 செப்டம்பர், 2010
இரத்தினபுரி தமிழ்த் தோட்டத் தொழிலாளர்களின் வீடுகள் தீக்கிரை..!
இரத்தினபுரி நிவித்திகலை குக்குலகல தோட்டக் காவலாளி ஒருவர் (பெரும்பான்மை இனம்) கடந்த திங்கட்கிழமை சடலமாக மீட்கப்பட்டதையடுத்து தேல மற்றும் குக்குலகல தோட்டத் தொழிலாளர்களின் 12 வீடுகள் பெரும்பான்மையினத்தவர்களால் தீக்கிரையாக்கப்பட்டதுடன், வீடுகளிலிருந்த பெறுமதி வாய்ந்த பொருட்களும் சூறையாடப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தையடுத்து இத் தோட்டப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பதற்றம் நிலவுகின்றது. கடந்த சனிக்கிழமை காணாமல்போன குக்குலகல தோட்டக் காவலாளி நேற்று முன்தினம் கரவிட்ட திமியாவ எனுமிடத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திங்கட்கிழமை மாலை பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சிலர் குக்குலகல தோட்டத்திலுள்ள பத்துக்கு மேற்பட்ட வீடுகளை தாக்கிச் சேதப்படுத்தி தீக்கிரையாக்கியதுடன், வீடுகளிலிருந்த பெறுமதிவாய்ந்த பொருட்களையும் சூறையாடியுள்ளனர். இதேவேளை, காவலாளி காணாமல்போன தினமான சனிக்கிழமை தேல மேற்கு பிரிவு தோட்டத்தில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்துள்ளார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இத்தோட்டத்திலுள்ள தமிழர்களின் இரு வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இதனால், பல லட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஒரே தோட்டத்தில் இரு வேறு பிரிவுகளில் கடந்த சனிக்கிழமையும் திங்கட்கிழமையும் ஏற்பட்ட இச்சம்பவம் காரணமாக இப்பகுதியிலுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அச்சம் காரணமாக வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். இவர்கள் எங்கே இருக்கின்றனர் என்பது குறித்து யாருக்கும் தெரியவில்லை. திங்கட்கிழமை இரவோடிரவாக அனைவரும் தோட்டத்தை விட்டு வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தோட்டக் காவலாளியான நெல்சன் (வயது 32 ) என்பவரே கடந்த திங்கட்கிழமை சடலமாக மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக சடலம் இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் காரணமாக நிவித்திக்கலை நகரத்தில் பதற்றநிலை காணப்படுவதுடன் தமிழர்களின் வரவு மிகவும் குறைவாகவேயுள்ளது. இப்பகுதி பாடசாலைகளில் மாணவர்களின் வரவும் மிகவும் குறைவாகக் காணப்படுகின்றது. இச்சம்பவம் குறித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கவனத்துக்கு கொண்டு வந்ததைத் தொடர்ந்து இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைமைப்பீடத்தின் கோரிக்கைக்கு அமைய 10 இற்கு மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்து நிவித்திகலை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருவதுடன் சடலமாக மீட்கப்பட்டவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா என்பது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தையடுத்து பிரதி அமைச்சர் பிரேமலால் ஜயசேகரவின் பிரதிநிதிகள் ஸ்தலத்திற்கு சென்று நிலைமையை ஆராய்ந்துள்ளதுடன் மேலதிக நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவத்தின் பின்னணியில் மதுபான விற்பனையாளர் ஒருவர் இருப்பதாக இப்பகுதி தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். இச்சம்பவத்தை கண்டித்து நிவித்திகலை, கிரிபத்கல, மேல்பிரிவு, கீழ்பிரிவு மற்றும் தொம்பகமுவ தோட்டத்தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதிகளில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக