சனி, 18 செப்டம்பர், 2010

எந்திரன் விமர்சனம் (டிரைலர்)

எல்லா ஊரிலும் செட்டப் செய்த பால் அபிஷேக ரசிகர்கள், கொடுத்த காசுக்கு நன்றாகவே அபிஷேகம் செய்து ஆடிப் பாடினார்கள்.
ரஜினி ராம்கி எந்த ஃபிரேமிலும் வரவைல்லை ஏனோ ? விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகருக்கு பதில் ரஜினி பட போஸ்டர்கள் விடாமல் பால்குடித்துக்கொண்டிருந்தன
சிடி வெளியீட்டைப் போலவே இங்கும் கருணாஸ், லாரன்ஸ் ராகவேந்திரா என்று வரிசையாக பலர் செஞ்சோற்றுக் கடன் கழித்தார்கள். ரஜினி பட விழாவுக்கு கருணாஸ் தான் கிடைத்தாரா ? ஏன் பெண்கள் யாரும் வரவில்லை ? அதே போல கலந்துக்கொண்டு பேசியவர்கள் எல்லோரும் ஆண்கள். ரொம்ப வெறுப்பேத்திவிட்டார்கள்


டிரைலரே இப்படி என்றால் படம் எப்படி இருக்கும் என்று நாமும் கொஞ்சம் யோசித்ததின் விளைவு இந்த விமர்சனம். படம் வந்த பிறகு இந்த விமர்சனத்தை நீங்கள் சரிபார்க்கலாம்.

விஞ்ஞானி என்றால் ஃபிரென்ச் தாடி வைத்துக்கொள்ள வேண்டும்; அதனால் ரஜினியும் வைத்துக்கொள்கிறார். (ப்ரென்ச் தாடியில் கிழத்தனம் கொஞ்சம் மறைந்து/குறைத்துத் தெரியும் என்பது கூடுதல் நன்மை.) அதுலும் கொஞ்சம் வித்தியாசமான ஃபிரன்ச் தாடி. ஸ்டைல் வேண்டாமா ? மேக்கப் அருமை!.
விஞ்ஞானியாக வரும் ரஜினி (வசீகரன்) 10 வருட உழைப்பில் "சிட்டி" என்ற எந்திர மனிதனை உருவாக்குகிறார். பரதம் முதல் குங்குஃபூ வரை எல்லாம் அதற்குத் தெரியும். ஆனால் அதற்கு மனிதனின் பொய், வஞ்சகம், பொறாமை, துரோகம், காதல் எதுவும் தெரியாது. இதை நான் சொல்லவில்லை, விஞ்ஞானி ரஜினியே சொல்லுகிறார்.

உருவாக்கிய எந்திரனை இப்போது ஊரில் உலாவவிடுகிறார் ரஜினி. அங்கே சில காமெடிக் காட்சிகள் நடக்கின்றன. உதாரணம் "வயசு என்ன?" என்ற கேள்விக்கு, "ஒரு நாள்" என்ற பதிலும், அதே போல "நக்கலா?" என்ற கேள்விக்கு "நிக்கல்! எல்லா போல்ட்டும் நிக்கலில் செய்தது" என்ற வசனத்துக்கும் நிற்காத கைத்தட்டல்.

ஐஸ்வர்யா ராய் பல இடங்களில் (தன்)வயதுக்கு ஏற்றாற்போல் சகிக்க முடியாமலும், சில இடங்களில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மாதிரி கொஞ்சம் அழகாகவும் இருக்கிறார்.

தமிழ் படத்தில் மின்சார ரயில் வந்தால் அங்கே ரவுடிகள் வர வேண்டும். அங்கே அப்படி ரவுடிகள் வரும் போது ஓமக்குச்சி நரசிம்மனுக்கே கோபம் வரும்; எந்திரன் ரஜினிக்கு வராமல் இருக்குமா? வருகிறது. ரயிலின் பக்கவாட்டில் நடந்து வந்து எல்லோரையும் அடிக்கிறார். ரஜினி எதைச் செய்தாலுமே தமிழக மக்கள் நம்பத் தயாராகிவிட்ட நிலையில் எந்திரன் ரஜினி செய்தால் நம்பாமல் இருப்பார்களா? கைத்தட்டிக் கொண்டாடுகிறார்கள். கிராபிக்ஸ் கலக்கல். அதுவும் ரயில் பக்கம் இருக்கும் மின்சாரக் கம்பங்களில் தாவித் தாவி வரும் காட்சிகள் அயல்நாட்டில் நடக்கும் காமென் வெல்த் போட்டி பார்த்த எஃபெக்ட்!

முதன்முதலில் எந்திரன் கற்றுக்கொண்ட மனித அறிவு(?!) இது. இதற்குப் பிறகு விஞ்ஞானி தன் வேலையில் மூழ்கிவிட சாராவுக்குக் (ஐஸ்வர்யா ராய்) கோபம் வருகிறது. எந்திரன் தன் வேலையை ஆரம்பிக்கிறது. ஐஸ்வர்யாவைப் பார்த்து பாவப்படுகிறது. ஐஸ்-உடன் கொஞ்சிக் கொஞ்சி பேசுகிறது, டூயட் பாடுகிறது. சாராவுக்கு எந்திரன் ரஜினி மேல் காதல் வருகிறது. எந்திரனுக்கும் காதல் வருகிறது. ஒரு கட்டத்தில் எந்திரன் விஞ்ஞானி ரஜினியிடம் எனக்கு சாரா வேண்டும் என்று அடம்பிடிக்கிறது. "உன்னை உருவாகினவன் நான். இதற்குப் பேர்தான் தூரோகம்!" என்று ரஜினி கோபப்படுகிறார். "எனக்கு சாராவை விட்டுக்கொடு. அதற்குப் பேர்தான் தியாகம்" என்று பதிலுக்கு பன்ச் பேசுகிறது எந்திரன்.

இந்தக் குழப்பத்தில் வில்லன் என்று எக்ஸ்ட்ராவாக யாராவது வந்து மேலும் தொல்லையும் நெருக்கடியும் கொடுத்தால்தான் நமக்கு நன்றாக இருக்கும். அதனால் ரஜினியின் சக விஞ்ஞானி இவரை வீழ்த்த என்ன செய்யலாம் என்று யோசிக்க, எந்திரனைத் தன்வசப்படுத்துகிறார். அதைத் தவறாகப் பயன்படுத்துகிறார். இந்த இடத்தில் ஹெலிக்காப்டர் எல்லாம் வருகிறது.

இனி என்ன நடக்கும் என்பது உங்களுக்கே தெரியும். சில காட்சிகள் ஸ்பைடர் மேன், ரோபோ காப் போன்ற படங்களை நினைவுப்படுத்தி ஹாலிவுட் தரத்தில் என்ற சொல்லுக்கு ஏற்றார்போல படம் இருக்கிறது.படம் எங்கே, எப்படிச் சுற்றினாலும் கிளைமாக்ஸ் காட்சிக்கு தமிழனை தமிழ் மண்ணுக்குக் கொண்டுவந்து விட்டுவிட்டுத் தான் தியேட்டர் வெளியே அனுப்ப முடியும். எனவே...கிளைமாக்ஸ் காட்சிகளை வெள்ளித்திரையில் காணவும்.

1 கருத்து:

TechShankar சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.