ஒரே வாரத்துக்குள் இன்னொரு துயரப்பகிர்வைப் பதிவாகத் தரும் துரதிஷ்டத்தை நினைத்து மனம் வருந்திக் கொண்டே தொடர்கின்றேன்.
நம் பால்ய காலத்தின் ஞாபகங்களின் எச்சங்களாக, அந்தக் காலகட்டத்தை மீண்டும் எம் மனத்திரையில் ஓட்டிப்பார்க்கப் பண்ணும் சங்கதிகளில் அந்த நாட்களில் வந்த பாட்டுக்கள் பெரும் ஆக்கிரமிப்பை உண்டு பண்ணி விடும். அந்த வகையில் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் தன் குரலினிமையால் வசீகரித்த ஸ்வர்ணலதா என்ற பாட்டுக் குயில் இன்று ஓய்ந்த செய்தியைக் கேட்டபோது ஒரு எல்.பி ரெக்கோர்ட் ஐ பாளம் பாளமாக உடைத்து நொருக்கும் நிலையில் என் மனம். அந்த இளமை துளிர் காலத்து நினைவுகளை வேரோடு பிடுங்கிச் சாய்த்தது போல.
சில வாரங்களுக்கு முன்னர் சிட்னியில், தமிழகத்துக் கலைஞர்களை வரவழைத்து இசை நிகழ்ச்சிகளை நடத்தும் நண்பர் ஒருவரிடம் பேசும் போது "யார் யாரையெல்லாம் அழைத்து வருகின்றீர்களே, பாடகி ஸ்வர்ணலதாவையும் ஒரு முறை சிட்னிக்கு அழைத்து வரலாமே" என்று கேட்டேன். "அவரை ஏற்கனவே அணுகியிருக்கின்றேன், ஆனால் அவருக்கு விமானத்தில் ஏறிப் பயணிக்க இயலாமையை ஏற்படுத்தும் ஒருவித பயவியாதி இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்" என்றார்.
"சரி அப்படியென்றால் ஸ்வர்ணலதாவின் தொலைபேசி எண்ணையாவது தாருங்கள், நான் ஒரு வானொலிப் பேட்டி எடுக்கின்றேன்" என்றேன். வானொலிப் பேட்டிக்கான தருணம் பார்த்திருக்கையில் அதை முற்றுப்புள்ளியாக்கியிருக்கின்றது ஸ்வர்ணலதாவின் அத்தியாயம்.
தமிழ்த்திரையிசையின் ஜாம்பவான்களான மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய மூவரின் ஆசியைப் பெற்ற விரல்விட்டு எண்ணக் கூடிய பாடகர்களில் ஸ்வர்ணலதாவும் ஒருவர். "நீதிக்குத் தண்டனை" திரைப்படத்தின் மூலம் மகாகவி பாரதியாரின் "சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா" பாடல் தான் ஸ்வர்ணலதாவின் திரையிசை வாழ்வின் முதற் பாட்டு. பாரதியாரைப் போலவே தன் வாழ்க்கைக் கணக்கை முழுமையாக முடிக்காமல் போய்ச் சேர்ந்து விட்டார்.
தமிழ்த்திரையிசையின் ஜாம்பவான்களான மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய மூவரின் ஆசியைப் பெற்ற விரல்விட்டு எண்ணக் கூடிய பாடகர்களில் ஸ்வர்ணலதாவும் ஒருவர். "நீதிக்குத் தண்டனை" திரைப்படத்தின் மூலம் மகாகவி பாரதியாரின் "சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா" பாடல் தான் ஸ்வர்ணலதாவின் திரையிசை வாழ்வின் முதற் பாட்டு. பாரதியாரைப் போலவே தன் வாழ்க்கைக் கணக்கை முழுமையாக முடிக்காமல் போய்ச் சேர்ந்து விட்டார்.
இசைஞானி இளையராஜாவுக்கு எண்பதுகளின் முதல் வரிசைப் பாடகிகளான எஸ்.ஜானகி, சித்ராவுக்கு மாற்றீடாக ஒரு பாடகி தேவைப்பட்டபோது கச்சிதமாகப் பொருந்திப் போனவர் சுவர்ணலதா.
"குரு சிஷ்யன்" படத்தில் வரும் "உத்தமபுத்திரி நானு" என்ற பாடல் தான் ராஜாவின் பட்டறையில் ஸ்வர்ணலதாவுக்குக் கிடைத்த முதல் வாய்ப்பு. சுனந்தா, மின்மினி ஆகியோர் அளவுக்கு ஒரு தேக்கம் இல்லாது கடகடவென்று உயரே உயரே பறந்து உச்சத்தை தொட்டார் ராஜாவின் மந்திர மெட்டுக்களோடு.
நடிகை குஷ்பு பரபரப்பான ஒரு பிரபலமாக மாறிய போது கச்சிதமாகப் பொருந்திப் போனது சுவர்ணலதாவின் குரல். குறிப்பாக சின்னத்தம்பி, இது நம்ம பூமி, பாண்டித்துரை ஆகியவை சாட்சியம் பறையும். என் ராசாவின் மனசிலே படத்தில் "குயில் பாட்டு ஹோ வந்ததென்ன இளமானே" பாட்டில் தன்னுடைய அத்தனை உணர்ச்சிகளையும் கொட்டிக் குவித்துப் படத்தின் பெருவெற்றியிலும் பங்காளி ஆனார்.
அந்தக் காலகட்டத்தின் நான் சென்னை வானொலியை நேசித்த போது லல்லு, சத்யா , ரேவதி என்ற முகம் தெரியாத சென்னைவாசிகள் ஞாயிற்றுக்கிழமை நேயர் விருப்பில் தொடர்ந்து கேட்ட அந்தப் பாட்டு என் விருப்பமாகவும் பெயர் சொல்லாது இடம்பிடித்தது. "மாலையில் யாரோ மனதோடு பேச" பாடலில் இவர் கொடுத்த உருக்கத்தை யாரை வைத்துப் பொருத்திப் பார்க்க முடியும்? அந்தக் காதல் அரும்பிய காலகட்டத்தில் நேசித்தவளின் குரலாகப் பிரதியெடுத்தது இந்தச் ஸ்வர்ணலதாவின் ஸ்வரம்.
"மாசிமாசம் ஆளான பொண்ணு" தர்மதுரை படப்பாட்டில் அடக்கி வாசித்த இவர் "ஆட்டமா தேரோட்டமா" என்று கேப்டன் பிரபாகரனில் ஆர்ப்பரித்த போதும் தயங்காமல் ஏற்றுக் கொண்டது மனசு. "என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி" பாட்டின் ஆரம்ப அடிகளில் இவர் செய்யும் ஆலாபனை இருதயத்தை ஊடுருவி காதல் மின்சாரம் பாய்ச்சும்.
"என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்" என்ற அந்த மந்திரப்பாட்டுக் காதுகளை ஊடுருவும் போது மயிர்க்கூச்செறியும் நிகழ்வு ஒவ்வொரு முறையும்.
1990 ஆம் ஆண்டில் இருந்து 1995 வரையான காலகட்டத்தில் இசைஞானி இளையராஜா இவரை மனதில் வைத்தோ என்னவோ அள்ளி அள்ளிக் கொடுத்த அத்தனை மெட்டுக்களும் அந்தந்தப் படங்களின் நாயகிகளுக்குப் பொருந்தியதோடு நம் மனசிலும் அழியாத கோலங்கள் ஆகி இது நாள் வரை தொடர்கின்றன.
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்குப் புதுக்குரல் தேடிடும் பயணத்தில் விட்டுவிலக்காத குயில்கள் வரிசையில் ஸ்வர்ணலதாவுக்கு மிகச்சிறந்த பாடல்களைக் கொடுத்ததோடு தேசிய விரு(ந்)தாக "கருத்தம்மா" படப்பாடலான "போறாளே பொன்னுத்தாயி" பாடலைக் கொடுத்த பெருமை இவருக்குக் கிடைத்த அங்கீகாரங்களில் மகுடம். அந்தப் பாடலில் ஆர்ப்பரிப்பில்லாத மெலிதான இசையைக் கடந்து ஆக்கிரமிப்புச் செய்வது ஸ்வர்ணலதாவின் அந்த சோக நாதம். "அலைபாயுதே" படத்து "எவனோ ஒருவன் யாசிக்கிறான்" பாட்டு அதே அலைவரிசையில் பொருத்திப் பார்க்க வேண்டிய இன்னொரு வைரம். "காதல் எனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்" பாட்டில் ஸ்வர்ணலதாவுக்கு ஜோடி கட்டி அவரை இன்னொரு வடிவிலும் தன் இசையால் நிரப்பியவர் ரஹ்மான்.
ஸ்வர்ணலதாவின் முதற்பாட்டு "சின்னஞ்சிறுகிளியே கண்ணம்மா" - நீதிக்குத் தண்டனை சமீபகாலமாக நான் அடிக்கடி ஐபொட் இல் கேட்டுக் கிறங்கும் பாடல் "நன்றி சொல்லவே உனக்கு என் மனவா வார்த்தையில்லையே" பாடல்.
சொந்தம் எதுவும் இல்லாத தனியன் ஒருவன், சமுதாயத்தில் ராசியில்லாது கல்யாணச் சந்தையில் விலைபோகாதவளைக் கரம்பிடிக்கின்றான். இந்த இரு உள்ளங்களும் இது நாள் வரை தம் வாழ்வின் சோகப் பக்கங்களைப் பகிர்ந்து மாறி மாறித் தம்மிடையே இருவரும் நன்றி பகிர்கின்றார்கள் இந்த புது வசந்தத்திற்காக. பாடலின் அடி நாதத்தை எஸ்.பி.பாலசுப்ரமணியமும் , ஸ்வர்ணலதாவும் அள்ளிக் கொட்டிய அந்தப் பாடல் மீண்டும் நினைவில் எட்டிப் பார்த்துச் சோக ராகம் பிரிக்கின்து.
"திசையறியாது நானே இங்கு தினசரி வாடினேனே
இந்த பறவையின் வேடந்தாங்கல்
உந்தன் மனமென்னும் வீதி தானே"
-கானாபிரபா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக