வியாழன், 16 செப்டம்பர், 2010

கனடிய தமிழ் காங்கிரஸ் காரியாலய உடைப்பு, உள் வீட்டு நாடகம்?


- கனடா கந்தசாமி
கனடிய தமிழ் காங்கிரசின் ஸ்காபரோ பகுதியிலுள்ள காரியாலயம் உடைக்கப்பட்டு, அங்கிருந்த முக்கியமான கணினி ஒன்று திருடப்பட்டதாகவும், அக் கணினியில் சமீபத்தில் ‘சண் சீ’ கப்பலில் புலி முகவர்களால் சட்ட விரோதமான முறையில் கனடாவுக்கு கடத்தி வரப்பட்ட, 492 இலங்கைத் தமிழர்கள் பற்றிய விபரங்கள் விபரங்களும், அவர்களது இலங்கையிலுள்ள உறவினர்களது விபரங்களும் பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும், கனடிய மற்றும் சர்வதேச ஊடகங்களில் அண்மையில் பரபரப்பான செய்திகள் வெளியிடப்பட்டன.
இந்த பரபரப்பு செய்தியை ஊடகங்களுக்கு வெளியிட்ட, புலிகளின் கனடிய முகவரமைப்புகளில் முக்கியமான ஒன்றான, கனடிய தமிழ் காங்கிரசின் (பொய்) ஊடகப் பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளை, இந்நடவடிக்கை இலங்கை அரசின் புலனாய்வுப் பிரிவின் வேலை என திட்டவட்டமாகக் குற்றம் சாட்டியதுடன், கப்பலில் வந்த சிலர், இலங்கை அரசு வன்னி யுத்த இறுதி நாட்களில் இழைத்த போர்க் குற்றங்கள் குறித்து சாட்சியமளிக்க முன் வந்ததினாலேயே, இலங்கை அரசு அந்த கப்பல் பயணிகள் குறித்துத்  தாம் பதிவு செய்து வைத்திருந்த தமது கணினியைத் திருடியதாகவும் கூறியிருந்தார்.
டேவிட் பூபாலபிள்ளையின் ஊடகங்களுக்கான இந்த அறிக்கை, பல வில்லங்கமான கேள்விகளை எழுப்பி அவரைச் சுற்றி வளைத்திருப்பதுடன், அவரது புலி நிகழ்ச்சி நிரலையும் அம்பலத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது. இதில் மிக முக்கியமான விடயம் என்னவெனில், இந்த கப்பலில் வந்தவர்கள் எல்லோருமே அப்பாவித் தமிழர்கள் என்றும், அவர்களுக்கும் புலி இயக்கத்துக்கும் எந்தவிதமான தொடர்புகளும் இல்லையென்றும், டேவிட் பூபாலபிள்ளையும், இங்குள்ள புலி சார்பு ஊடகங்களும் இதுவரை திரும்பத் திரும்பக் கூறிவந்தன. இப்பொழுது வந்தவர்களில் சிலர் இலங்கை அரசின் போர்க் குற்றங்கள் குறித்து சாட்சியமளிக்கத் தயாராக இருப்பதாகக் கூறி, அவர்களைச் சங்கடத்தில் மாட்டி விட்டுள்ளனர்.

கனடிய குடிவரவுப் பிரிவினரால் தம்மைப் பற்றிய விசாரணைகள் பூர்த்தியடையாமல் இருக்கும் நிலையில், தமது அகதிக் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படுமா இல்லையா என்ற அச்சத்தில் இருக்கும் இந்தக் கப்பல் பயணிகள், தாம் வந்த நோக்கத்தை விட்டுவிட்டு, டேவிட் பூபாலபிள்ளை மேற்கொள்ள எண்ணியிருக்கும், புலி நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப போர்க் குற்றங்கள் பற்றி சாட்சியமளிக்க தயாராக்கப்படுவது எந்த ரக முட்டாள்தனத்தைச் சேர்ந்தது என்பதை, இங்கு வாழும் தமிழ் மக்கள் தான் தீhமானிக்க வேண்டும். டேவிட் பூபாலபிள்ளையின் அறிக்கையால், கனடிய அரசு கப்பலில் வந்தவர்கள் எல்லோரும் அப்பாவித் தமிழர்கள் அல்லர், இவர்களில் சிலராவது புலிகளுடன் தொடர்புடைய, இலங்கை அரசின் போர்க் குற்றங்கள் பற்றி சாட்சியமளிக்கும் நோக்கில் வந்தவர்கள் என்ற முடிவுக்கு வந்தால், அதனால் அந்த மக்களுக்கு ஏற்படப்போகும் இழப்பை, பூபாலபிள்ளை ஏற்றுக் கொள்வாரா? தவிரவும் இவரது அறிக்கையால், வருங்காலத்தில் இலங்கையை விட்டு வெளியேறும் ஒவ்வொரு தமிழர்களும், போர்க் குற்றங்கள் குறி;த்து சாட்சியமளிக்கத்தான் செல்கிறார்கள் எனக் கருதி, அவர்களது பிரயாணங்களுக்கு இலங்கை அரசு கட்டுப்பாடு விதித்தால், அதன் பொறுப்பையும் இந்த பூபாலபிள்ளை ஏற்றுக் கொள்வாரா?
இது ஒரு பக்கமிருக்க, இந்த கப்பல் பயணிகள், எந்த அமைப்பிடம் அல்லது யாரிடம் இலங்கை அரசின் போர்க் குற்றங்கள் குறித்து, சாட்சியமளிக்க இருக்கின்றனர் என்பதையும் பூபாலபிள்ளை தெளிவுபடுத்துவது அவசியம். அப்பொழுதுதான் கனடிய தமிழ் காங்கிரஸ், இலங்கைத் தமிழர்களின் தாயகத்துக்கெதிராக, துரோகத்தனமான முறையில், எந்தெந்த சர்வதேச சதி நாசகார சக்திகளுடன் கைகோர்த்துச் செயல்படுகின்றனர் என்பதையும் தமிழ் மக்கள் அறிந்து கொள்ள முடியும்.
தனது காரியாலய உடைப்புக் குறித்து இலங்கை அரசு மீது குற்றம் சுமத்தியது சம்பந்தமாக, பி.பி.சி தமிழோசை செய்திச் சேவை, பூபாலபிள்ளையிடம் தொடுத்த கேள்விகளுக்கு அவர் பதில் சொல்ல முடியாமல் திண்டாடியதையும் அவதானிக்க முடிந்தது. இலங்கை அரசு தான் இதைச் செய்தது என்பது உங்களுக்கு எப்படித் தெரியும் என்ற கேள்விக்கு, மக்கள் தெரிவித்ததாக பூபாலபிள்ளை கோமாளித்தனமான பதிலைக் கூறித் தப்பிக்கப் பார்த்துள்ளார். அவர் கூறும் அந்த மக்கள் யார்? கனடாவில் வாழும் தமிழ் மக்களா? அப்படியானால் கனடாவில் வாழும் இரண்டு லட்சம் தமிழ் மக்களும், தமது அன்றாட வாழ்வியல் கடமைகளை விட்டுவிட்டு, பூபாலபிள்ளையின் காரியாலயத்தை உடைத்து, அவரது அந்தரங்க கணினியை எவன் திருடுகிறான் என்பதை உளவு பார்ப்பதிலேயா தமது காலத்தைக் கழிக்கின்றனர்? இங்கு வாழும் தமிழர்கள் உளவு பார்ப்பதையா தமது தொழிலாகக் கொண்டுள்ளனர்? இது கனடிய அரசின் கண்களில் இலங்கைத் தமிழர்கள் பற்றி தவறான, சந்தேகமான  ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தாதா? அல்லாது இந்த உடைப்பு சம்பந்தமாக, இலங்கை அரசின் உளவுப் பிரிவினர் யாராவது பூபாலபிள்ளைக்கு தகவல் தெரிவித்திருந்தால், அவருக்கு இரகசியமான முறையில் இலங்கை அரசின் உளவு அமைப்புகளுடன் தொடர்புகள் உள்ளதா? ஏன்ற கேள்வி எழுகின்றது.
இது ஒருபுறமிருக்க, தமது காரியாலயத்தில் வேறு பல கணினிகள் இருந்தும், இந்த குறிப்பிட்ட கணினியே களவு போனதாக டேவிட் பூபாலபிள்ளை தெரிவித்துள்ளார். அவர் குற்றம் சாட்டும் இலங்கை அரசின் உளவுப் பிரிவினருக்கு, எவ்வாறு இந்தக் கணினியில் தான் கப்பலில் வந்தவர்களின் விபரங்கள் சேகரித்து வைக்கப்பட்டிருந்தது என்ற விபரம் தெரிய வந்தது என்ற பிறிதொரு கேள்வியும் இங்கு எழுகின்றது. ஏனெனில் கனடிய தமிழ் காங்கிரசின் நடவடிக்கைகள் இங்குள்ள தமிழ் மக்களுக்கே தெரிய வராத ஒன்று. அப்படியிருக்க எவ்வாறு இலங்கை உளவுப் பிரிவினருக்கு மட்டும் தெரிய வந்தது? அதற்கு ஒரேயொரு வழிதான் இருக்க வேண்டும். அதாவது பூபாலபிள்ளையின் அணியில் உள்ள யாரோ ஒருவர், அந்தத் தகவலை இலங்கை உளவுப் பிரிவினருக்கு வழங்கியிருக்க வேண்டும்! அப்படியானால் பூபாலபிள்ளை உடனடியாகச் செய்ய வேண்டியது, தனது அணியில் உள்ள ‘கறுப்பு ஆடு’ யார் என்பதைக் கண்டு பிடிப்பது தான்.
இன்னுமொரு மிக முக்கியமான விடயமென்னவெனில், கப்பலில் வந்தவர்களின் அடையாளங்கள் தெளிவு படுத்தப்படும் வரை, அவர்களது விபரங்களை வெளிவிடுவதில்லை என, கனடிய அரசு முடிவு செய்திருந்தது. அப்படியிருக்க கனடிய தமிழ் காங்கிரசுக்கு கப்பலில் வந்த 492 பேரின் விபரங்களும் எவ்வாறு கிடைத்தன? அவர்களுக்கு கனடிய அரசு அதை வழங்கியதா அல்லது ஏதாவது சட்ட விரோதமான முறையில் அவர்கள் அதைப் பெற்றார்களா? கனடிய அரசு அதை வழங்கியிருந்தால் அது ஒரு பாரதூரமான தவறாகும். ஏனெனில் தமிழ் காங்கிரஸ் புலிகளின் ஒரு துணை அமைப்பு என்பது அனைவரும் நன்கு அறிந்த ஒன்றாகும். எனவே அவர்கள் தமக்கு கிடைத்த தகவல்களை வைத்து, கப்பலில் வந்தவர்களில் தமக்கு வேண்டாதவர்கள், அதாவது புலிகளுக்கு எதிரானவர்கள் யாரும் இருந்தால், அவர்களை பாரபட்சத்துக்கு உள்படுத்த மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது? அதுவுமல்லாமல், அவர்களை போர்க் குற்றங்கள் சம்பந்தமான விடயங்களில் சாட்சியமளிக்கத் தூண்டிதில், கனடிய அரசுக்கும் பங்கு உள்ளது என்ற குற்றச்சாட்டை ஏற்படுத்தாதா?
இவையெல்லாம் ஒருபுறமிருக்கு, கப்பலில் வந்த 492 பேரின் விபரங்களும் தமது கணினியில் இருக்கவில்லை, அவர்களில் சுமார் இரண்டு டசின் பேர்களின் விபரங்கள் மட்டுமே அதில் இருந்ததாக, இப்பொழுது பூபாலபிள்ளை மீண்டும் ஒரு சரடை அவிழ்த்து விட்டுள்ளார். ஏன் அவர் எல்லோரது விபரங்களையும் பதிவு செய்யாது, இந்த இரண்டு டசின் பேரின் விபரங்களை மட்டும பதிவு செய்து வைத்துள்ளார்? இந்த இரண்டு டசின் பேரும் மட்டும் தான் அவருடைய அமைப்புக்கு மிகவும் வேண்டியவர்களா? ஆனால் இங்கு வெளிவரும் தகவல்களின் படி, பூபாலபிள்ளை முதலில் வெளியிட்ட அறிக்கையினால், கப்பலில் வந்தவர்களும், அவர்களது உறவினர்களும் பூபாலபிள்ளை தம்மைக் காட்டிக் கொடுத்து விட்டதாகக் கொண்ட கடுமையான ஆத்திரத்தினால் ஈடாடிப்போன அவர், பின்னர் அதைச் சமாளிப்பதற்காக இந்த இரண்டாவது அறிக்கையை விடுத்ததாகக் கூறப்படுகிறது.
பூபாலபிள்ளை கூறுவது போல, இலங்கை அரச புலனாய்வுப் பிரிவுதான், அவரது காரியாலயத்தை உடைத்து கணினியைத் திருடியிருந்தால், உண்மையில் அது ஒரு உலக சாதனைதான். ஏனெனில் இலங்கையிலிருந்து பல்லாயிரம் மைல்களுக்கப்பால் இருக்கும் கனடாவுக்கு வந்து, மிகவும் பாதுகாப்பு மிகுந்த இந்த நாட்டில், கனடிய தமிழ் காங்கிரஸ் காரியாலயத்தைக் கண்டு பிடித்து, அந்த குறிப்பிட்ட கணினியையும் மோப்பம் பிடித்து, அதைத் திருடியிருந்தால், அது உலக அதிசயம் அல்லாமல் வேறு என்ன? அப்படிச் செய்பவர்கள், கே.பியை மலேசியாவிலிருந்து லாவகமாகக் கடத்திச் சென்றது போல, கனடியத் தமிழர்களின் புதிய ‘மேய்ப்பனான’ டேவிட் பூபாலபிள்ளையையும் ஒரு நாள் கடத்திச் சென்றால் ஆச்சரியம் இல்லையல்லவா? இலங்கை அரசின் புலனாய்வுப் பிரிவுக்கு அத்தகைய ஒரு அசகாய சூரத்தனம் இருக்குமானால், உலகின் முன்னணி உளவு அமைப்புகளான சீ.ஐ.ஏ., கே.ஜி.பி., மொசாட், றோ என்பன, இனிமேல் இலங்கை அரசின் உளவு அமைப்பிடம் பயிற்சி பெறுவதைத் தவிர வேறு வழியில்லை!
ஆனால் ‘கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு’ என்பது போல, பூபாலபிள்ளையின் இந்தக் கதையளப்பு, கனடிய புலி அணிகளுக்குள் நடந்து வரும் சொத்துப்பிரிப்பு, அதிகாரப் போட்டி என்பனவற்றின் ஒரு புதிய பரிமாண வடிவம் தான் என்பது, கனடா வாழ் அனைத்துத் தமிழ் மக்களுக்கும் நன்கு தெரிந்த ஒரு விடயமாகும். இப்பொழுது நடந்துள்ள காரியாலய உடைப்பு, கணினி திருட்டு கதையெல்லாம், ஜிகினா வேலைப்பாட்டுடன், நன்கு சோடனை செய்யப்பட்ட ஒரு நாடகம் தான் என்பதை விளங்கிக் கொள்ளும் அளவுக்கு, 2009 மே 18க்குப் பின்னர், கனடா வாழ் தமிழ் மக்கள் ஓரளவாவது பக்குவப்பட்டுள்ளனர். முன்னரெல்லாம் புலிகளின் இறுதி யுத்தத்துக்கு என்று சொல்லி, தமது சட்டைப் பைகளையும் கனமாக நிரப்பிக் கொண்ட இந்த கனடிய காசுப்புலிகள், வன்னிப் போரில் புலிகள் அழிக்கப்பட்ட பின்னர், உழைப்புப் பிழைப்பு இல்லாமல், ஆடிப் போயிருந்தனர். வந்தது ‘சன் சீ’ கப்பல்! மீண்டும் அதைச் சாட்டி தமது வசூல் வேட்டையை ஆரம்பித்தனர். அதனால் அவர்களுக்குள் அடிதடிகளும், கை கால் முறிப்புச் சம்பவங்களும் கூட அரங்கேறின. இதெல்லாம் கனடிய தமிழ் மக்களுக்கு நன்கு தெரிந்த சங்கதிகள். அதன் ஒரு தொடர்ச்சி தான், இந்த கனடிய தமிழ் காங்கிரஸ் காரியாலய உடைப்புச் சம்பவம் என்பதும், இங்குள்ள தமிழ் மக்கள் விளங்கிக் கொள்ள முடியாத ஒன்றல்ல.
எனவே, இப்பொழுது இங்குள்ள தமிழ் மக்கள் செய்ய வேண்டியதெல்லாம், பாகப் பிரிவினைச் சண்டையில் ஈடுபட்டுள்ள, புலிகளின் முக்கியமான கனடிய பினாமி அமைப்புகளான, கனடிய தமிழ் காங்கிரஸ், கனடிய தமிழர் தேசிய அவை, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், உலகத் தமிழர் பேரவை, தமிழர் புனர்வாழ்வுக் கழகம், தமிழீழச் சங்கம் என்பனவற்றிலிருந்து மிகக் கவனமாக தம்மை எட்ட வைத்திருப்பது தான். ‘துட்டனைக் கண்டால் தூர விலகு’ என நம் முன்னோர்கள் சும்மாவா சொல்லி வைத்தார்கள்?
theneee.com 

கருத்துகள் இல்லை: