பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ( பத்மநாபா ஈ.பிஆர்எல்எவ்) கடந்த ஜுன் 19 தியாகிகள் தினத்தையொட்டி, யாழ் உதைபந்தாட்ட லீக்கின் ஒத்துழைப்புடன் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியொன்றை நடாத்தியது. இவ் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதி ஆட்டம் நேற்று (12.09.2010) யாழ்ப்பாணம், உரும்பிராய் இந்துக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இந்த இறுதியாட்டத்திற்கு பிரதம விருந்தினராக ஈபிஆர்எல்எவ் இன் மூத்த தலைவரும், முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சருமான தோழர் அ. வரதராஜப்பெருமாள் அழைக்கப்பட்டிருந்தார். குருநகர் பாடும்மீன் விளையாட்டுக்கழகத்திற்கும், ஊரெழு றோயல் விளையாட்டுக்கழகத்திற்கும் இடையில் நடைபெற்ற இந்த இறுதியாட்த்தில் கலந்துகொண்ட தோழர் வரதராஜப்பெருமாள் சம்பிரதாய பூர்வமாக குத்துவிளக்கேற்றிய பின்னர் இரு அணிகளையும் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர் அவர் வீரர்களுக்கு கைலாகு கொடுத்து அவர்களை வாழ்த்தினார்.
11 வீரர்கள் பங்குபெற்ற இந்த போட்டியில் குருநகர் பாடும்மீன் அணி வெற்றி பெற்று சாம்பியனானது. ஊரெழு றோயல் விளையாட்டுக்கழக அணி இரண்டாம் இடத்தை பெற்றது. போட்டித்தொடரில் நாவாந்துறை சென்மேரிஸ் அணி 3ம் இடத்தை தனதாக்கிக் கொண்டது. 1ம் இடத்தை பெற்ற பாடும்மீன் அணிக்கு 25 ஆயிரம் ரூபா பணப்பரிசும், வெற்றிக்கேடயமும் வழங்கப்பட்டது. 2ம் இடத்தை பெற்ற றோயல் அணிக்கு 15 ஆயிரம் ரூபா பணப்பரிசும் வெற்றிக்கேடயமும் வழங்கப்பட்டது. 3ம் இடத்தை பெற்ற சென்மேரிஸ் அணிக்கு 10 ஆயிரம் ரூபா பணப்பரிசில் வழங்கப்பட்டது. இவர்களுக்கான பரிசில்களை பிரதம விருந்தினராக கலந்துகொண்ட தோழர் வரதராஜப்பெருமாள் வழங்கினார்.
இப்போட்டிகளில் பத்மநாபா ஈபிஆர்எல்எவ் இன் முக்கியஸ்தர்கள், மாற்று அரசியல் கட்சி உறுப்பினர்கள், பல கிராமங்களிலிருந்தும் பெருந் தொகையான பொது மக்கள் கலந்து கொண்டனர். பத்மநாபா ஈபிஆர்எல்எவ் உடன் மக்கள் நாளுக்கு நாள் நம்பிக்கை மேலும் வைத்து இணைந்து வருவதை இது காட்டுகின்றது என அரசியல் அவதானிகள் கருத்து தெரிவிக்கின்றனர். ஒருபுறம் தமிழ் மக்கள் மக்கள் அரங்கம் என்று தமிழ் மக்களிடையேயான அரசியற் செயற்பாடாளர்களிடையே ஐக்கியம் மறுபுறத்தே தென்னிலங்கையில் உள்ள முற்போக்கு ஜனநாய சக்திகளுடன் உறவுகள், இன்னொருபுறம் இந்திய இராஜதந்திரிகளுடன் பேச்சுவார்த்தையென பத்மநாபா ஈபிஆர்எல்எவ் இனரின் செயற்பாடுகள் தற்போது தமிழ் மக்கள் மத்தியல் நம்பிக்கையூட்டும் விதமாக அமைந்து வருவது எல்லோராலும் தற்போது பேசப்படும் விடயமாக இருப்பது ஒரு கவனிக்கத்தக்க விடயமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக