செவ்வாய், 14 செப்டம்பர், 2010

புலிகளுக்கு பயந்து 18 வயதில் திருமணம் செய்து விதவையானோருக்கு சுயதொழில் பயிற்சி-டியூ குணசேகர!

புலிகளுக்குப் பயந்து 18 வயதில் திருமணம் செய்து விதவைகளானவர்களுக்கு சுயதொழில் பயிற்சி வழங்கப்படவுள்ளதென அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்தார். ‘புலிகளுக்குப் பயந்து 18 வயதில் திருமணம் செய்து விதவைகளான பெண்கள் தங்கள் பிள்ளைகளுடன் நடமாடும் சேவைக்கு வந்தபோது நான் மிகவும் வேதனையடைந்தேன்’ என அவர் கூறினார்.

வடக்கில் (மாவட்ட ரீதியாக) மூன்று தினங்கள் நடத்தப்பட்ட நடமாடும் சேவையின் போது சுமார் 36 ஆயிரம் பேர் அங்கு வந்து பிரச்சினைகளை முன் வைத்தனர். அந்த மக்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை இதன் மூலம் உணரமுடிந்தது எனவும் அமைச்சர் டியூ சுட்டிக்காட்டினார்.
கைதிகள் தினத்தையொட்டிய நிகழ்வு கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று முன்தினம் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட அவர் மேலும் கூறியதாவது,
இலங்கை மன்றக் கல்லூரியும், சிறைச் சாலை கைதிகள் நலன்புரிச் சங்கமும் இணைந்து இந்நிகழ்வை நடத்தியது. இந்நிகழ்வின் போது அமைச்சர் டியூ குணசேகர, கைதிகளின் பிள்ளைகளுக்கு புலமைப் பரிசில்கள் வழங்கினார்.
கைதிகள் தினத்தையொட்டி நேற்று முன்தினம் வெலிக்கடை சிறையிலிருந்து விடுதலையான கைதிகள் ஐவருக்கு தச்சுத் தொழில் உபகரணங்களும், ஒருவருக்கு சுவீப் விற்பனை மூலம் சுய தொழில்புரிய சைக்கிளும் வழங்கினார். கைதிகளின் பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
தொடர்ந்து அமைச்சர் தெரிவிக்கையில், எமது நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், எமது பிரதி அமைச்சர் மற்றும் நானும் மக்களின் நன்மைக்காக சிறைக் கைதிகளாக இருந்துள்ளோம். அதன் காரணமாக சிறையில் நடக்கும் அனைத்து விடயங்களும் எங்களுக்கு நன்றாகத் தெரியும். தவறு இழைத்தவர்களுக்கு சட்டரீதியாக நீதிமன்றமே தண்டனை வழங்கும். ஆனால், எக்காரணம் கொண்டும் கைதிகளை அதிகாரிகள் தண்டிக்க முயற்சி செய்யக் கூடாது. சிறை அதிகாரிகளின் நடத்தைகளை சிறையில் கண்டுள்ளேன்.
யுத்த காலத்தில் பலாத்காரமாக புலிகள் உறுப்பினர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருகிறது. கட்டம் கட்டமாக இவர்களை புனர்வாழ்வு அளித்து விடுதலை செய்து வருகிறோம். நான்காயிரம் பேர்வரை விடுதலை செய்துள்ளோம். இன்னும் 7 ஆயிரத்து 500 பேர் புனர்வாழ்வு நிலையங்களில் உள்ளனர்.
இவர்களில் 708 பேர் நேரடியாக புலிகளின் தலைமைகளுடன் செயல்பட்ட உயர்மட்ட உறுப்பினர்கள். இவர்களுக்கும் புனர்வாழ்வு பயிற்சி வழங்கப்படுகிறது. அண்மையில் 570 பேருக்கு புனர்வாழ்வு வழங்கி பெற்றோரிடம் ஒப்படைத்தோம். கூடிய விரைவில் மேலும் 2700 பேரை விடுதலை செய்யவுள்ளோம். முப்பது வருட கால யுத்தத்தில் எமது படை வீரர்களும் இன்னல்களை அனுபவித்தனர்.
அதேபோன்று கைதிகள் விடயத்திலும் மிகவும் வேகமாக செயல்படுகிறோம். கைதிகள் தொடர்ந்தும் தவறு செய்து சிறைக்கு வருவதை தடுக்க வேண்டும். சிறை வாழ்வில் மாற்றம் பெறவேண்டும். அரசியல் ரீதியாக செயல்படாது சமூக நலனோடு நாம் செயல்பட்டு வருகிறோம். இவ் விடயத்தில் ஜனாதிபதி பெரும் உதவி செய்து வருகிறார். கைதிகள் அனைவருக்கும் புனர்வாழ்வு தேவை. சமுதாயம் அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். கைதிகள் மத்தியில் சிறைச்சாலை நலன்புரிச் சங்கம் நல்ல முறையில் செயல்படுகிறது.

கருத்துகள் இல்லை: