காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் கலவரம் பரவியுள்ளது. தங்மார்க் பகுதியில் 6 பேரும், பத்காமில் ஒரு 7 வயதுக் குழந்தை உள்பட 7 பேரும், பாம்பூர், பந்திப்புராவில் தலா ஒருவரும் உயிரிழந்தனர். தங்மார்க் நகரில் ஒரு கிறிஸ்தவ மிஷனரி பள்ளி தீவைத்துக் கொளுத்தப்பட்டது.
நேற்று உயிரிழந்தவர்களையும் சேர்த்து ஜூன் 11ம் தேதி தொடங்கிய கலவரத்திற்கு இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 86 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக கலவரத்தால் எரிந்து கொண்டிருக்கும் காஷ்மீரில் நேற்று, அமெரிக்காவில் திருக்குரான் நூலின் பக்கங்களை கிழித்து அவமதித்ததாக செய்தி பரவியது. இதையடுத்து காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் கலவரம் வெடித்தது.
அனந்த்நாக் நகரில் பெருமளவில் திரண்ட இளைஞர்கள் கலவரத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களை பாதுகாப்புப் படையினர் தடியடி நடத்தியும், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டும் கலைக்க முயன்றனர். அப்போது மரூப் அகமது நாத் என்ற இளைஞர் தப்பி ஓடினார். அவரைப் பிடிக்க பாதுகாப்புப் படையினர் முயன்றபோது அவர் ஜீலம் நதியில் குதித்து விட்டார். ஆற்றின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்ட நாத் என்ன ஆனார் என்பது தெரியவில்லை. ஆனால் அவர் உயிரிழந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
நேற்று வெடித்த பெரும் கலவரத்தைத் தொடர்ந்து டெல்லி சென்றிருந்த முதல்வர் உமர் அப்துல்லா உடனடியாக ஸ்ரீநகர் திரும்பினார். பின்னர் அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தினார்.
நேற்று காலை ஈரான் நாட்டு டிவியான பிரஸ் டிவியில்,அமெரிக்காவில் ஒருவர் திருக்குரான் நூலின் பக்கங்களை கிழித்து எரித்ததாக செய்தி வெளியானது. இதுவே காஷ்மீரில் நேற்று கலவரம் பெருமளவில் வெடிக்கக் காரணம்.
தங்மார்க் பகுதியில்தான்கலவரம் பெரிதாக இருந்தது. அங்கு கிறிஸ்தவ மிஷனரி பள்ளியை போராட்டக்காரர்கள் தீவைத்து எரித்தனர். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் கொடும்பாவியும் தீவைத்துக் கொளுத்தப்பட்டது. போலீஸ் வாகனத்தையும், அரசு அலுவலகம்ஒன்றையும் அவர்கள் தீவைத்து எரித்தனர்.
அதேபோல ஸ்ரீநகரிலும் ஒபாமாவின் கொடும்பாவி தீவைத்து எரிக்கப்பட்டது. போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாமல் பாதுகாப்புப் படையினர் திணறினர்.
கலவரம் பெரிதாக இருப்பதால் ஸ்ரீநகர் உள்பட காஷ்மீர் பள்ளத்தாக்கின் அனைத்துப் பகுதிகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து முக்கிய நகரங்களும் ஊரடங்கின் கீழ் வைக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீநகரில் நூற்றுக்கணக்கானோர் கூடி குரானை எதிர்த்தவர்களுக்கு எதிராக குரல் எழுப்பி போராட்டம் நடத்தினர். அமெரிக்காவுக்கு எதிராக போராட்டக்காரர்கள் குரல் எழுப்பினர்.
குரான் எரிக்கப்பட்டதாக வெளியான செய்தியால் ஏற்கனவே பெரும் போர்க்களமாக காணப்படும் காஷ்மீரில், நிலைமை மேலும் மோசமாகியுள்ளதால் மத்திய அரசும், மாநில அரசும் செய்வதறியாமல் திகைத்துப் போய் நிற்கின்றன.
பதிவு செய்தது: 14 Sep 2010 9:05 am
மத்திய அரசு இந்தியாவை பிளவு படுத்தாமல் விடாது போல் உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக