ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

தொழில்நுட்பத்தினூடாக ஏமாற்றி தொலைபேசிப் பரிவர்த்தனையை பதிவு செய்தல்

விளம்பரங்களிற்கு மேல் விளம்பரங்களாக இப்போது தொலைபேசி பற்றிய செய்திகள் எங்குமே கிடைக்கப் பெறுகின்றன. ஒரு சில பத்து டொலர்களிற்குள் வாங்கப்படும் ஒரு கணனிக்குரிய பொருத்தியை வாங்கி விட்டால் அதனைக் கணனியோடிணைத்து நீங்கள் எங்கும் பேசலாம். எதுவும் பேசலாம். இது இப்போது பல வீடுகளிலும் நடைமுறைக்கு உள்ள விடயம் தானே என உங்களில் யாருக்காவது கேள்வியெழுந்தால் அதற்கான விடையை இப்போதே தருகிறோம். உங்களிற்குத் தெரியாமலே உங்களை அப்பாவிகளாக்கும் செயற்பாடும் இந்த விடயத்தோடு இணைந்துள்ளது.
எனது நண்பர் ஒருவர் விடுதலை பற்றுக் கொண்ட ஒரு தீவிர தமிழுணர்வாளர். அவரைச் சந்தித்த ஒருவர் அவரிடம் கூறினார். “அண்ணை நாங்கள் அங்கத்தைய தேவைக்கான வாங்கிய தொலைபேசி இணைய ஜக்கெற்றுகள் சில பாவிக்காமல் இருக்கு. உங்களிற்கு வேண்டுமானால் ஒன்றைப் பாவியுங்கோ. கொம்பியூட்டரில கொழுவினாச் சரி எங்கை கதைச்சாலும் இலவசம். உங்கள சொந்த நம்பரையும் பாவிக்கத் தேவையில்லை” எனத் திருவாய்மலர்ந்தருளினார்.
ஆனால் அந்த நண்பர் அதைத் தனது கணணியுடன் இணைப்பதற்கு அவரது மகளின் உதவியைக் கேட்க அவரும் இந்தக்கருவியை பற்றி விசாரித்து ஒரு திடுக்கிடும் தகவலையும் சொன்னார். “உங்கள் பேச்சுக்கள் உங்களிற்குத் தெரியாமல் இதில ஒலிப்பதிவு செய்யும் வசதிகூட இருக்கிறது. இரண்டு போன்கள் பொருத்தலாமாம்” இது உங்களிற்கு தேவையா? என்று கேள்வியெழுப்ப அந்த நண்பர் அதை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டார்.
இப்படி எத்தனை இணைய இணைப்பு ஜக்கெற்றுக்கள் எத்தனை பேருக்கு “இலவசமாகக் கொடுக்கப்பட்டனவோ” தெரியாது. ஆனால் இவர்களை நம்பி இவற்றை உபயோகப்படுத்த முனைந்தவர்களின் பேச்சுக்கள் ஒலிப்பதிவாகியிருக்கும்.
இப்படித்தான் இன்னொன்று. ஸ்கைப் என்று பெயார். இதன் மூலம் கதைப்பது கூட இலகுவாக ஒலிப்பதிவு செய்யப்படலாம். ஏந்தவித தொந்தரவுமில்லாமல் ஒருவருடைய பேச்சை மறுபக்கத்தில் உள்ளவர் பதிவு செய்யலாம்.
இவையனைத்தும் தொழில்நுட்பம் வளர்ந்து விட்டதால் அதனைப் பாவித்து செய்யப்படும் மட்டகரமான செயற்பாடுகளே தவிர, இவை ஏதோ தனிமனித ஆளுமையாலோ அல்லது புலனாய்வில் தீரர்களாகவே இருப்பதாலோ செய்யப்படும் செயற்பாடுகள் அல்ல. எனவே இவ்வாறான செயற்பாடுகளினால் பெறப்படும் ஒலிப்பதிவுகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டால் அவை ஏற்படுத்தப் போகும் பாதிப்புக்கள் என்ன என்பதே உங்களின் கேள்வியாக இருக்கும்.

கருத்துகள் இல்லை: